Published : 26 Oct 2019 11:21 AM
Last Updated : 26 Oct 2019 11:21 AM

பட்டாசுப் பரவசம் பாதுகாப்பும் அவசியம்

முகமது ஹுசைன்

பண்டிகைகளைப் பொறுத்தவரை, இன்றும் மகிழ்ச்சியின் ஊற்றாகத் தீபாவளியே உள்ளது. ஒளியும் ஒலியும் மட்டுமல்லாமல்; கோலாகலமும் மகிழ்ச்சியும் நாடெங்கும் உற்சாகமாகப் பரவும் தினமே தீபாவளித் திருநாள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புத்தாடை அணிவது, பட்சணங்கள் சுவைப்பது, பட்டாசு வெடிப்பது எனத் தீபாவளியின் ஒவ்வோர் அணுவும் உற்சாகத்தின் உறைவிடம். இருப்பினும், சற்றே கவனக்குறைவு ஏற்பட்டாலோ நம்மிடம் சாகச எண்ணம் குடி புகுந்தாலோ, இன்பம் நிறைந்த இந்தத் திருநாள், துன்பம் வந்துசேர வாய்ப்பாகி விடும்.

சோகத்தில் முடிந்த சாகசம்

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தீபாவளி அது என்று நினைக்கிறேன். எனது வீட்டின் அருகில் வசித்த நண்பன் ஒருவன் மிகவும் துடுக்காக இருப்பான். அன்றும், அப்படித்தான் வழக்கம்போல் மிகுந்த துணிச்சலுடன் பட்டாசுகளை வெடித்தான். கையில் பிடித்தபடி சரவெடியை வெடித்தான்.

அணுகுண்டைக் கையிலேயே பற்றவைத்து, எங்கள் மேல் எறியப் போவதாகப் பயமுறுத்தி, பின்னர் அது வெடிப்பதற்குச் சில வினாடிகளுக்கு முன்னர் வேறு பக்கம் தூக்கி எறிந்தான். ஒரு கையில் லட்சுமி வெடியைப் பற்றவைத்து, அதன் பொறியில் மற்றொரு லட்சுமி வெடியைப் பற்றவைக்க முயன்றபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில், இருவெடிகளும் ஒருசேர அவனது கைகளிலேயே வெடித்தன. அன்றைய தீபாவளி எங்கள் தெருவுக்குச் சோகம் நிறைந்த ஒன்றாகிவிட்டது.

தீபாவளி அன்று இதைப் போன்று எண்ணற்ற விபத்துகள் நடப்பதற்குச் சாத்தியம் உள்ளன. புஸ்வாணம் பற்றவைக்கும்போது, தயாரிப்பு கோளாறால் அது வெடித்து கண்ணில் காயம் ஏற்படுவதும், சங்கு சக்கரம் பற்றவைத்து அதன் பொறியில் குதித்து விளையாடும்போது பாவாடை தீப்பற்றி தீக்காயம் ஏற்படுவதும் அன்றும் இன்றும் வாடிக்கையாக உள்ளன. ஆர்வக் கோளாறால், குழந்தைகளே அதிக ஆபத்துக்கு உள்ளாகின்றனர்.

காயங்களும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும்

மருந்துகளைத் தடவுவதற்கு முன்போ முதலுதவி செய்வதற்கு முன்போ முதலில் காயத்தின் அளவைக் கண்டுபிடிப்பது அவசியம். சில காயங்களுக்கு மருத்துவ மனைக்குச் செல்வதற்கு முன்பு வீட்டிலேயே சிகிச்சையளிக்க முடியும், மற்றவர்களுக்கு மருத்துவர்களின் உடனடி கவனம் தேவைப் படும். இருப்பினும், இரண்டு சந்தர்ப்பங்களிலும், காயங்களின் அளவைக் கண்டுபிடித்து அதற்கேற்ப செயலாற்றினால் மட்டுமே, நம்மால் முதலுதவி அளிக்க முடியும்.

பெரிய தீக்காயங்கள்

பட்டாசுகளிலிருந்தோ மத்தாப்புகளிலிருந்தோ பீறிட்டு வெளிவரும் தீப்பிழம்புகள் சருமத்தின் மீது விழும்போது, பெரிய தீக்காயங்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது கடுமையான வலி, வீக்கம், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இதற்கு உடனடி முதலுதவி அளிக்கப்பட வேண்டும், அதன் பிறகு பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

பின்பற்ற வேண்டிய முறைகள்

* ஏராளமான கொப்புளங்களையும் சரும சேதங்களையும் ஏற்படுத்தும் இந்தத் தீக்காயங்களால் உண்டாகும் வலியையும் எரிச்சலையும் தணிக்க நிறைய தண்ணீரை ஊற்ற வேண்டும்.
* காயத்தைக் கழுவுவதற்குக் கார சோப்பைப் பயன்படுத்தலாம். காயமடைந்த இடத்திலிருந்து ஆபரணங்களையும் ஆடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். இந்த பொருட்கள் வெப்பத்தில் உருகி சருமத்துடன் ஒட்டவில்லை என்றால் மட்டுமே அதை அகற்ற வேண்டும்.
* சுத்தமான வாழை இலை போன்றவற்றால் காயமடைந்த பகுதியை மூட வேண்டும்.
* தீக்காயமடைந்த குழந்தையை விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்.
* காயம் மிகவும் கடுமையானதாக இருந்தால், ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.

கண் காயங்கள்

பிரகாசமான ஒளியைத் தொடர்ந்து பார்ப்பதாலோ, பட்டாசு கண்ணைத் தாக்குவதாலோ, பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் புகை கண்களுக்குள் பரவுவதாலோ கண்களில் காயம் ஏற்படுகிறது. கண்ணில் காயம் ஏற்பட்டால், உடனடியாகக் கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஐஸ் க்யூப் பயன்பாடு கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
பின்பற்ற வேண்டிய முறைகள்
* காயமடைந்த கண்ணைத் தொடவோ தேய்க்கவோ முயலக் கூடாது.
* காயமடைந்த கண்களைச் சுத்தமான துணியால் மூடி மறைக்க வேண்டும்.
* குழந்தைகளுக்குச் சிறிது ஓய்வு அளித்த பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறிய தீக்காயங்கள்

சிறிய தீக்காயங்களால், சருமம் சிவக்கும். ஒன்றோ இரண்டோ கொப்புளங்கள் உருவாகும். தீப்பொறிகள், எரிந்த பட்டாசுகள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள் போன்றவற்றால் இந்தத் தீக்காயங்கள் ஏற்படுகின்றன.
பின்பற்ற வேண்டிய முறைகள்
* சுமார் 5 நிமிடங்கள் குளிர்ந்த நீரைக் காயத்தின் மீது ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
* தீக்காயத்துக்கு ஐஸ் க்யூப்களைப் பயன்படுத்தக் கூடாது.
* காயத்தைச் சுற்றியுள்ள ஆடை ஆபரணங் களை உடனடியாக அகற்ற வேண்டும்.
* காயம் மீது மருந்துக் களிம்போ கற்றாழை சோற்றையோ தடவலாம். வெண்ணெய், தக்காளி போன்றவற்றைக் காயத்தில் தடவக் கூடாது
* காயத்துடன் ஒட்டிக்கொள்ளாத பொருட்களால், காயத்தை மூட வேண்டும். முக்கியமாக, காயத்தின் மீது துணியால் கட்டக் கூடாது.
* முதலுதவிக்குப் பின்னர், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

* தீக்காயங்களைச் சமாளிப்பது மிகவும் கடினமானது. அது ஏற்படாமல் தவிர்ப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
* புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து நல்ல தரமான பட்டாசுகளை வாங்க வேண்டும். போலிகள் ஆபத்தானவை.
*பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக, அதை எப்படி வெடிக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* ஒரு வாளி தண்ணீர், நீர் செலுத்தும் குழாய், தீயை அணைக்கும் கருவி ஆகியவற்றை அருகில் வைத்திருக்க வேண்டும்.
* ஒரு நேரத்தில் ஒரு பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும்.
* பட்டாசு பற்றவைக்கும்போது, குழந்தைகள் நமக்கு அருகில் எங்கும் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு பாதுகாப்பான தூரத்தில் அவர்கள் நிற்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்,
* பற்றவைத்தபின், பட்டாசு வெடிக்காவிட்டால், அதன் அருகில் சென்று ஆராய முயலக் கூடாது. எதிர்பாராத விதமாக அது வெடிக்கச் சாத்தியம் உண்டு. அதன்மீது தண்ணீர் ஊற்றுவதே சரியான வழிமுறை.
* பட்டாசுகள் மொத்தமாக இருக்கும் இடத்துக்கு அருகில் பட்டாசைப் பற்றவைக்கக் கூடாது.
* எரியும் பட்டாசுகளைக் கையில் பிடிப்பதோ பிறர் மீது குறி வைத்துப் வீசுவதோ அறவே தவிர்க்கப்பட வேண்டும். இந்தச் சாகசச் செயல்கள் குழந்தைகளுக்கு மோசமான முன்மாதிரி என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது.
* பட்டாசுகள் வெடித்து முடித்த பின்னர், கனன்று கொண்டிருக்கும் கங்கு மீது தண்ணீரை ஊற்றியோ மணலைக் கொட்டியோ அவற்றை முற்றிலும் அணைக்க வேண்டும்.

என்ன அணியலாம்?

வெளிர் நிறமான பருத்தி உடைகளையும் மூடிய பாதணிகளையும் அணிவது நல்லது. தளர்வான ஆடை களைக் கண்டிப்பாக அணியக் கூடாது. ஏனெனில், எளிதில் தீப்பற்ற அது ஏதுவாக இருக்கும். இவற்றுடன், நீண்ட கூந்தலை முடிந்து கட்டிக்கொள்ள வேண்டும். பாதுகாப்புக் கண்ணாடிகளையும் அணிந்துகொள்ளலாம்.

ஒளிரட்டும் தீபாவளி

தீபாவளிக்குப் புத்தாடைகளும் பரிசுகளும் இனிப்புகளும் பட்டாசுகளும் மட்டும் முக்கியமல்ல; பாதுகாப்பும் முக்கியம். பட்டாசு ஆபத்தானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். பண்டிகைக் கொண்டாட்டங்களுக்காக வெடிக்கப்படும் அந்தப் பட்டாசுகள், ஒரு பேரழிவுக்கான காரணியாக மாறிவிடக் கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனமாக இருந்தால், அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளியாக அமையும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு:
mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x