Published : 19 Oct 2019 10:29 am

Updated : 19 Oct 2019 10:30 am

 

Published : 19 Oct 2019 10:29 AM
Last Updated : 19 Oct 2019 10:30 AM

துயிலாத இரவுகள்

thuyiladha-iravugal

நிஷா

சுவாசத்துக்கும் உணவுக்கும் அடுத்தபடியாகத் தூக்கமே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. மனித ஆயுளின் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. வாழ்வின் வளமையும் உடல்நலத்தின் மேன்மையும் மனநலத்தின் செழுமையும் பேரளவு தூக்கத்தையே சார்ந்துள்ளன.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்தபோது, உலகமே மகிழ்ச்சியில் மிதந்தது. இரவும் இருளும் தூக்கத்துக்கு எந்த அளவு அவசியம் என்பது மனித இனத்துக்கு அப்போது புரியவில்லை. ஆனால், தூக்கமின்மைக்கும் அதனால் நேரும் எண்ணற்ற நோய்களுக்கும் ஒளிர் விளக்குகளும் ஒரு காரணம் என்று விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஒருமித்த குரலில் இன்று கூறுகின்றனர்.

தூக்கக் கோளாறுகள்

உடலின் கடிகாரத்தால் ஏற்படுத்தப் படும் தூக்கம், நமது உடலின் ஓய்வுக்கும் புத்துணர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. நாம் தூங்கும்போது உடலின் உடலியல் செயல்முறைகளைச் சீரமைக்கும் / மீட்டெடுக்கும் மூளையின் பகுதி மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் தூங்கும்போது நமது நினைவுகளை மூளை ஒருங்கிணைக்கிறது. மேலும், தூங்கும்போது, உடலானது தனது செயல்களைத் தளர்த்தி ஓய்வு எடுப்பதன் மூலம் ஆற்றலைச் சேமிக்கிறது.

தூக்கத்தின் கூறுகளுக்கும் அதன் அனைத்து செயல்பாடுகளுக்குமான ஆய்வுகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. போதுமான தூக்கம் வராதபோதோ, வாழ்க்கை முறை, ஜெட் லாக் அல்லது ஷிப்ட்வொர்க் காரணமாக நம் தூக்க நேரம் மாறும்போதோ நமது உயிரியல், அறிவாற்றல் செயல்பாடுகள் என்னென்னவாகின்றன என்பதைக் கண்டறிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தூக்கக் கோளாறுகள் என்று எடுத்துக்கொண்டால், அவற்றில் 80-க்கும் மேற்பட்ட வகை உள்ளன. தூக்கமின்மை (தூக்கத்தில் கீழே விழுவது அல்லது தூங்குவதில் சிக்கல்), மூச்சுத்திணறலால் தடைப்படும் தூக்கம் (தூக்கத்தின்போது தொண்டையின் சுவர்கள் தளர்ந்து குறுகும்போது, காற்றுப்பாதையில் தடை ஏற்பட்டு சுவாசம் சீர்குலைதல்), ரெஸ்ட்லெஸ் லெக் சிண்டிரோம் (கால்களை அசைப்ப தற்கான தூண்டுதல்) ஆகியவை இவற்றில் அடங்கும்.

பொருளாதார இழப்பு

தூக்கமின்மையின் அளவு குறித்து இந்தியாவில் குறைந்த அளவே ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ‘தி நீல்சன் நிறுவனம்’ நடத்திய ஆய்வின்படி, 35-65 வயதுக்குட்பட்ட நகர்ப்புற இந்தியர்களில் 93 சதவீதத்தினர் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ஹீதர் நடத்திய ஆய்வு, சென்னையில் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் ஒவ்வோர் இரவும் ஐந்து முதல் ஐந்தரை மணிநேரத் தூக்கத்தை மட்டுமே பெறுகிறார்கள் என்று தெரிவிக்கிறது. அதற்கு அவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களும் வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம்.

நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல்; கிராமப்புறங்களிலும் தூக்கமின்மையால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பணக்காரர், ஏழை, கிராமவாசி, நகரவாசி என எவராக இருந்தாலும், தூக்கமின்மைக் காரணிகளால் அவர்கள் சூழப்பட்டுள்ளனர். தூக்கக் கோளாறுகளால், வாழ்க்கை முறையில் பாதிப்பும் பிற நோய்களுக்கான ஆபத்தும் அதிகரிப்பது மட்டுமல்லாமல்; பொருளாதாரத்துக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. தூக்கக் கோளாறுகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு மிக அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

தூக்கமின்மைக் காரணிகள்

நமது உடலின் சிர்க்காடியன் கடிகாரம், பூமியின் 24 மணி நேரச் சுழற்சிக்கு ஒத்திசைவாக உள்ளது. இந்த சிர்க்காடியன்தான் நாம் எப்போது தூங்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த உடல் கடிகாரத்தை மரபணுக் காரணிகள் தீர்மானிக்கின்றன. ஆனால், வாழ்க்கை முறையும் சூழல் காரணிகளும் மரபணு வரைபடத்தில் தலையிட்டு, தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. தூக்கமின்மைக்கு 33-38 சதவீதம் மட்டுமே மரபணுக் காரணிகள் காரணமாக உள்ளன. மீதமுள்ளவை சூழலால் தூண்டப்படுகின்றன. ஒலி மாசுபாடு, ஒளி மாசுபாடு, வெப்பநிலை, ஈரப்பதம், வாழ்க்கை முறை மாற்றங்கள், ஷிப்டுகளில் பணிபுரிதல், நேர மண்டலங்களில் பயணம் செய்தல் எனத் தூக்கமின்மைக்குப் பல காரணிகள் உள்ளன.

தூக்கத்தைப் பாதிக்கும் செயற்கை ஒளி

கணினிகள், மொபைல் போன்கள் போன்றவை வெளிப்படுத்தும் செயற்கை ஒளி தூக்கமின்மைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. கனெக்டிகட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் பேராசிரியரான ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ், “இருளை இழந்ததால் மக்களால் தூங்க முடியவில்லை” என்று கூறுகிறார். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாத பகுதிகளில் இருப்பவர்களைவிடக் குறைவாகத் தூங்குகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு ஆய்வை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

மாலையில் அதிக வெளிச்சம் இருந்தால், அது தூக்கமின்மையை ஏற்படுத்தும் என்பதே அவரது வாதத்தின் சாரம். “கேம்ப்ஃபயர் அல்லது மெழுகுவர்த்தி ஆகியவற்றின் ஒளி இந்த மாற்றத்தைத் தாமதப்படுத்தாது, தற்போது பயன்பாட்டில் உள்ள பிரகாசமான காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் லைட் (சி.எஃப்.எல்), மாலையில் உடலில் ஏற்படும் மாற்றத்தைத் தாமதப்படுத்துகிறது” என்று அவர் விளக்குகிறார்.

தூக்கத்தைப் பாதிக்கும் உணவுப் பழக்கம்

அரிசோனா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் மைக்கேல் ஏ கிராண்ட்னர் கருத்துப்படி, “உணவில் ஏற்படும் மாற்றங்கள் தூக்கத்தின் தரத்தையும் பாதிக்கின்றன. மோசமான உணவுப் பழக்கத்தால் தூக்கத்தின் தரம் கெடுகிறது. தரமற்ற தூக்கத்தால், மோசமான உணவுப் பழக்கம் ஏற்படுகிறது.” பதப்படுத்தப்பட்ட, துரித உணவு வகைகளில் பொதுவாகக் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பால்மிடேட், சிர்க்காடியன் கடிகாரத்தைப் பாதிக்கிறது. தூக்கச் சிக்கலை ஏற்படுத்துகிறது.

தூக்கத்தைப் பாதிக்கும் ஒலி

வீடுகளிலும் தூக்கத்தை ஒலி பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 2016-ல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, விமான நிலையத்துக்கு அருகில் வசிக்கும் மக்களின் தூக்கத்தை விமான ஓசை பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. பரபரப்பான சாலையின் அருகே வசிப்பதும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தும். தூக்கக் கலக்கம், தடைப்பட்ட தூக்கம், தூக்கக் கோளாறுகள் ஆகியவற்றை இரவு நேரப் போக்குவரத்து சத்தம் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். எங்கும் சத்தம் நிறைந்திருப்பதால், தூக்கக் கலக்கம், தூக்க இழப்பு ஆகியவற்றில் இதன் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஷிப்ட் வேலையும் தூக்கமின்மையின் தூண்டுதல்களில் ஒன்றாக உள்ளது.

முறையான சிகிச்சை

தூக்கமின்மை பிரச்சினைக்கு சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், இந்திய மக்கள் தொகையில் தூக்கமின்மை, அதன் பாதிப்புகள் ஆகியவற்றின் உண்மையான அளவைக் கண்டறிய பெரிய அளவிலான ஆய்வை மேற்கொள்வது அவசியம். தூக்கமின்மை பற்றிய தரவு இந்தியாவில் மோசமாக உள்ளது என்று இந்தியத் தூக்கக் கோளாறு சங்கத்தின் தலைவர் எம். எஸ். கன்வர் தெரிவித்துள்ளார். துல்லியமான தரவுகளுக்கு, அனைத்துக் குடும்பங்களையும் தொடர்புகொள்ள வேண்டும்.

அதற்கு மிகுந்த ஆட்பலமும் பணபலமும் தேவைப்படும். தூக்கமின்மைக்கு, எல்லோரும் மருத்துவ உதவியை நாடுவதில்லை. 2013-ல் எய்ம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஓர் ஆய்வில், எட்டு ஆண்டுகளில் 700 நோயாளிகள் மட்டுமே, தூக்கமின்மைக்கான சிறப்பு மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாமை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அது தெரிவிக்கிறது.

சிகிச்சைக்கான தடை

“சரியான வழிமுறை எதுவென்றால், தூக்கத்தில் சிக்கல் உள்ளவர்கள் முதலில் ஒரு மருத்துவரை அணுக வேண்டும், அந்தச் சிக்கலைப் புரிந்துகொள்ள மருத்துவர் பாலிசோம்னோகிராபி அல்லது தூக்க ஆய்வு செய்ய வேண்டும்” என்று கன்வர் கூறுகிறார். தூக்கத்தின்போது நிகழும் பல உயிரியல் செயல்பாடுகளைப் பற்றிய தரவை பாலிசோம்னோகிராம் வழங்குகிறது, தலை, மார்பு, கால்களில் வைக்கப்பட்டுள்ள மின்முனைகள் வழியாக மூளை அலை செயல்பாடு, கண் இயக்கம், தசைக் குரல், இதயத் துடிப்பு போன்றவற்றின் செயல்பாடுகளைப் பற்றிய தரவை இந்தச் சோதனை வழங்குகிறது. “இந்தச் சோதனைக்கு ரூ. 16,000-20,000 வரை செலவு ஆகும். இது காப்பீட்டின்கீழ் வராததால், மக்கள் தங்கள் கைகளிலிருந்தே பணம் செலுத்த வேண்டும். தூக்கமின்மை சிகிச்சைக்கு இதுவே ஒரு பெரும் தடையாக உள்ளது” என்கிறார் டெல்லியில் நரம்பியல், தூக்க மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் மன்வீர் பாட்டியா.

நம்பிக்கையளிக்கும் எதிர்காலம்

தூக்கமின்மைக் காரணிகளுக்கும், தூக்கம், சிர்க்காடியன் கடிகாரம், வளர்சிதை மாற்றம், ஹார்மோன் செயல்பாடு, பிற உடலியல் செயல்முறைகள் ஆகியவற்றுக்கும் இடையிலான இணைப்புகளைக் கண்டறிவதன் மூலமாக மட்டுமே, தூக்கமின்மைக்குப் பயனளிக்கும் துல்லியமான, தீர்க்கமான தீர்வுகளை உருவாக்க முடியும். விரைவில் அது சாத்தியம் ஆகும் என்று நம்புவோம்.


துயிலாத இரவுகள்உணவுமனித வாழ்க்கைதூக்கம்பொருளாதார இழப்புதூக்கமின்மைசெயற்கை ஒளிஉணவுப் பழக்கம்பாதிக்கும் ஒலிமுறையான சிகிச்சைஎதிர்காலம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author