

நஸ்ரின்
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த சில வருடங்களாக டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ளது. தற்போது சென்னை அரசு மருத்துவமனைகளில் மட்டும் 100 பேருக்கும் மேல் டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இருப்பினும், மக்களிடையே டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இன்றும் ஏற்படாமல் உள்ளது என்பதே நிதர்சனம்.
மருத்துவக் கண்காணிப்பு அவசியம்
தலைவலி, காய்ச்சல், தோலில் தடிப்புகள், உடம்பு வலி, களைப்பு, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சையைத் தொடங்க வேண்டும். டெங்குக் காய்ச்சலுக்கு மருத்துவக் கண்காணிப்பு மிகவும் அவசியம். எனவே, கவனக்குறைவாக இருப்பது ஆபத்தில் முடியக்கூடும்.
டெங்கு ஷாக் சிண்ட்ரோம்
சிலருக்கு ரத்தக்கசிவு, ‘டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ ஆகியன ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. தட்டணுக்கள் அளவு குறைந்து, நுரையீரலின் கூட்டுப் பகுதியில் நீர் தேங்கிவிடுவதே ‘டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’. இது அபாயகரமான நிலை, உடனடியாகச் சிகிச்சையளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு.
மீளும் வழி
காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக, ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்குத் தட்டணுக்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம்.
எனவே, பிளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும். காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரையும் உடல்வலிக்கு வலி நிவாரண மாத்திரைகளும் மருத்துவர்களால் தரப்படலாம். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாகத் தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்படலாம். உடலிலுள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கப் பழச்சாறு, தண்ணீர் போன்றவற்றைத் தொடர்ந்து அருந்துவது நன்று.
நிலவேம்புக் கஷாயம்
டெங்குக் காய்ச்சல் வந்தவர்களுக்கு அது மீண்டும் வர வாய்ப்பு இருப்பதால், மிகக் கவனமாக இருக்க வேண்டும். டெங்குக் காய்ச்சலிலிருந்து மீண்டவர்கள், மருத்துவர் அறிவுறுத்தும்வரை ஓய்விலும் மருத்துவக் கண்காணிப்பிலும் இருப்பது மிகவும் அவசியம். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வது நல்ல பலன் தரும். நிலவேம்புக் கஷாயம் குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க உதவும். இந்தக் கஷாயத்தை அனைவரும் குடிக்கலாம்.
‘ஏடிஸ்’ கொசுக்களை அழிப்போம்
நன்னீரில் உருவாகக்கூடிய ‘ஏடிஸ் எகிப்தி’ என்ற கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. டெங்குவை உருவாக்கக்கூடிய இந்தக் கொசுவின் உடல், கால்களில் கறுப்பு, வெள்ளை நிறப் புள்ளிகள் இருக்கும். ‘ஏடிஸ்’ கொசுக்கள் மூன்று வாரங்களுக்கு மேல் உயிர் வாழும் தன்மையுடையவை.
இவை பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். வீடுகளில் சரியாக மூடப்படாத நீர் சேமிப்புத் தொட்டிகள், குப்பைக் கூளம், டயர்கள், சுத்தம் சுகாதாரமற்ற இடங்கள் உள்ளிட்ட இடங்களில் தேங்கியிருக்கும் நன்னீரில் ‘ஏடிஸ்’ கொசுக்கள் வளர்ச்சி அடைகின்றன. எனவே, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்க முடியும்.
‘ஏடிஸ்’ கொசுக்கள் மூன்று வாரங்களுக்கு மேல் உயிர் வாழும் தன்மையுடையவை. வீடுகளில் சரியாக மூடப்படாத நீர் சேமிப்புத் தொட்டிகள், குப்பைக் கூளம், டயர்கள், சுத்தம் சுகாதாரமற்ற இடங்கள் உள்ளிட்ட இடங்களில் தேங்கியிருக்கும் நன்னீரில் ‘ஏடிஸ்’ கொசுக்கள் வளர்கின்றன.