

சிந்தியா ஸ்ரீகேசவன்
அக்டோபர்-12: உலக மூட்டழற்சி நாள்
ஆஸ்டியோ-ஆர்த்ரைடிஸ் எனப்படும் கீல்வாதம், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களை, குறிப்பாகப் பெண்களை அதிகம் பாதிக்கிறது. 2050-ல், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 20 சதவீதத்தினர் முழங்கால் கீல்வாத வலியால் பாதிக்கப்படுவர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
பெரும்பாலானோருக்கு, கீல்வாதம் முழங்கால் மூட்டில் ஏற்படும். சிலருக்கு, இடுப்பு, தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளைப் பாதிக்கும். கீல்வாதத்தில், மூட்டின் இரு பக்கமுள்ள எலும்புகளின் எலாஸ்டிக் போன்ற குருத்தெலும்பு உறை சேதமடையும். கீல்வாதத்தால், எலும்புகள் நேருக்கு நேராக உராய்ந்து, வலி, மூட்டு இறுக்கம் ஏற்பட்டு, நாள்பட, மூட்டு அசைவுகள் குறையத் தொடங்கி, மூட்டைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனப்படும்.
முழங்கால் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், முழங்காலை நீட்டி மடக்க முடியாமல், அன்றாட வேலைகளைச் செய்வதிலும் வீட்டு விசேஷங்கள், பொழுது போக்குகளில் பங்கேற்பதிலும் சிரமங்களைக் கொண்டிருப்பர். சிலருக்கு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு வலியும் செயல்பாடின்மையும் ஏற்படும்.
அபாய காரணிகள்
முழங்கால் கீல்வாதம் உண்டாவதற்கு மாற்ற முடியாத (எ.கா. முதுமை, பெண் பாலினம்), மாற்றத் தகுந்த என இரு பிரிவு அபாய காரணிகள் உள்ளன. அவற்றில், உடல் பருமன், தசைகளில் வலிமையின்மை, இளவயதில், விளையாடும்போது ஏற்பட்ட முழங்கால் மூட்டுத் தசை நார்களில் ஏற்பட்ட காயம் ஆகியவை மாற்றக் கூடிய முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன.
உடல் எடையில் கவனம்
நமது உயரத்துக்குத் தகுந்த எடையைக் கணக்கிட ‘உடல் நிறை குறியீடு (Body Mass Index, BMI)' பயன்படுகிறது. உங்களின் உயரம் (மீட்டர்), எடையை (கிலோ) பிஎம்ஐ = kg/m2 என்ற சூத்திரத்தில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 18.5 to 24.9 வரை பிஎம்ஐ என்பது ஆரோக்கியமான உடல் எடையைக் குறிக்கும். உலக சுகாதார நிறுவனம், பிஎம்ஐ 25 முதல் 30-க்குள் இருந்தால், ‘அதிக எடை கொண்டவர்கள்’ என்றும், 30-க்கு மேலிலிருந்தால் ‘உடல்பருமன் கொண்டவர்கள்’ என்று வரையறுக்கிறது.
இடுப்புச் சுற்றளவையும் இன்னொரு கணக்கீடாகக் கொள்ளலாம். இடுப்பு சுற்றளவு, ஆண்களுக்கு 94 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும், பெண்களுக்கு 80 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும் இருந்தால், கண்டிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்கு ஆரம்பிக்க வேண்டும். ஆண்களுக்கு 102 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும், பெண்களுக்கு 88 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும் இடுப்பு சுற்றளவு இருந்தால், சர்க்கரை நோய், புற்று நோய், இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
முழங்கால் கீல்வாதம் உண்டாவதற்கும் மோசமாவதற்கும் உடற் பருமனை முக்கியக் காரணியாக மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதிகரிக்கும் ஒவ்வொரு 5 கிலோ எடைக்கும், முழங்கால் கீல்வாதம் ஏற்படும் அபாயம் 36 சதவீதம் வரை அதிகரிக்கிறது. மேலும், அதிக நேரம் முட்டி போட்டோ குத்த வைத்தோ வேலை செய்பவர்களுக்குத் தொடர்ந்து ஏற்படும் அழுத்தங்கள், மூட்டுகளைச் சேதமடையச் செய்யும்.
சமச்சீரான குறைந்த-கலோரி உணவு முறை, உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைத்து, மீண்டும் ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். ஜிம்முக்குச் சென்று முறையான உடற்பயிற்சியைச் செய்ய முடியாதவர்கள், நல்ல உணவு முறையோடு, சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளைச் செய்வது, அதிக நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்ப்பது, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நடப்பது, லிஃப்டைப் பயன்படுத்தாமல் படிகளில் செல்வது போன்ற அன்றாட வாழ்க்கை முறைக்குத் தகுந்த பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
தசைகளை வலிமையாக்குவோம்
தொடை முன்பகுதியில் உள்ள குவாட்ரீசெப்ஸ் எனப்படும் தசையில் வலிமையின்மை, முழங்கால் கீல்வாதம் ஏற்பட ஒரு காரணியாகக் கூறப்படுகிறது. வலிமையான தசைகள், தசைத் திறனையும் உடல் செயல்பாட்டையும் அதிகரித்து, மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தைச் சீரான முறையில் பகிர்ந்து மூட்டுகளைக் காக்கும். உங்களுக்கேற்ற முழங்கால் தசை வலிமை பயிற்சிகளை உங்கள் பிசியோதெரபிஸ்டிடம் ஆலோசித்துப் பெற்றுக் கொள்ளுங்கள்.
காயங்களைத் தவிர்ப்போம்
இளவயதில், விளையாட்டுகளின் போது, முழங்கால் மூட்டுத் தசை நார்களில் (Anterior cruciate ligament) அடிபட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில், 50 சதவீதத்தினருக்கு , அவர்களின் 30-40 வயதுகளிலேயே முழங்கால் கீல்வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விளையாடும் குழந்தைகள்/இளவயதினர்க்கு, முழங்கால் மூட்டில் அடிபட வாய்ப்புகள் எவ்வாறு நேரிடக் கூடும், அதனைக் கையாளும் முறைகள் பற்றி விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.
அதனோடு, வாரத்திற்கு 2-3 முறை, தசை, நரம்புச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பிரத்யேகப் பயிற்சிகள் (Neuromuscular training) 50 சதவீதம் வரை தசை நார் விபத்துகளைத் தவிர்க்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. காயம் ஏற்பட்டாலோ அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்திலோ அதன் பின் பரிந்துரைக்கப்படும் சிகிச்சையைக் கவனத்துடன் சரிவர எடுத்துக்கொள்வதன் மூலம் கீல்வாதம் வருவதைத் தவிர்க்கலாம்.
| இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம். அரும்பு கோணிடில் அதன் மணம் குன்றுமோ - சித்தர் பாடல் |
கட்டுரையாளர்,
பிசியோதெரபி ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: csrikesavan@gmail.com