Published : 05 Oct 2019 09:49 am

Updated : 05 Oct 2019 09:49 am

 

Published : 05 Oct 2019 09:49 AM
Last Updated : 05 Oct 2019 09:49 AM

மருத்துவம் தெளிவோம் 03: எதிரிகள் ஆகும் துரித உணவு!

fast-food

டாக்டர் கு. கணேசன்

கடந்த கால் நூற்றாண்டில் நம் உணவுப் பண்பாடு நிறைய மாறிவிட்டது. இந்திய மரபு உணவை மறந்துகொண்டிருக்கிறோம். கண்ணைக் கவரும் நிறம், மூக்கைத் துளைக்கும் மணம், நாவைச் சொக்க வைக்கும் ருசி, சமைப்பது எளிது, சமைக்கும் நேரம் குறைவு போன்ற காரணிகளால் துரித உணவு வகைகள் அட்டைபோல் நம்முடன் ஒட்டிக்கொண்டுவிட்டன.

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறையில் துரித உணவை நம்மால் தள்ளிவைக்க முடியவில்லை. இந்த அந்நிய உணவு வகைகளால் ஆரோக்கியத்துக்கு ஆபத்து எனத் தெரிந்தே அதிக இடம் கொடுத்துவிட்டோம் என்பதுதான் துயரம்.

துரித உணவுக்கு நாம் ஏன் அடிமையாகிறோம்?

நாகரிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் ஒருபுறம் இருக்க, வித்தியாசமான ருசிக்கு ஏங்குவதுதான் இதற்கு முக்கியக் காரணம். இந்த ஏக்கம் எந்த வயதிலும் வரலாம். அப்படி ஆட்படும்போதுதான் அதிக இனிப்பு, உப்பு, காரம், மசாலா, காஃபீன், ஆல்கஹால் போன்றவற்றைத் தேடிச் செல்கிறோம். வழக்கமான வீட்டு உணவு வகைகளில் இவை அளவோடுதான் இருக்கும்.

துரித உணவு வகைகளில் இவை தூக்கலாகவே இருக்கும். அதனாலேயே அவற்றைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பிய உணர்வையும் பசி அடங்கிய திருப்தியையும் அடைகிறோம். இவற்றிலுள்ள வேதிப் பொருட்கள் போதை ஊட்டுபவை. நாம் அடிக்கடி இவற்றைச் சாப்பிட விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இன்றைய வாழ்க்கை முறை மன அழுத்தம் மிகுந்ததாக மாறிவிட்டது. நாம் மன அழுத்தத்துக்கு ஆட்படும்போதெல்லாம் உடலில் மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய செரட்டோனின் ஹார்மோன் மிகவும் குறைந்துவிடுகிறது. அப்போது நாம் மகிழ்ச்சியான சூழலுக்கு மாறிக்கொள்ள விரும்புகிறோம்.

அதற்குத் துரித உணவு வகைகளே உடனடியாக உதவிக்கு வருகின்றன. நாம் மிகவும் விரும்பிச் சாப்பிடும் இந்த உணவு வகைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும் வயிற்றுக்குத் திருப்தியையும் தருகின்றன. அதேநேரத்தில், இந்த உணவு வகைகளில் குவிந்திருக்கும் உப்பும் இனிப்பும் கொழுப்பும் நமக்கு வெகு சீக்கிரத்தில் ‘நோயாளிப் பட்டத்தை’ வழங்குகின்றன என்பதை மறந்துவிடுகிறோம்.

துரித உணவு நம் எதிரியாவது ஏன்?

பெரும்பாலான துரித உணவு வகைகள் பதப்படுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன. அவை நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு அவற்றில் கலக்கப்படும் உப்பும் பல வேதிப்பொருட்களும் நம் ஆரோக்கியத்தையே அசைத்துப் பார்க்கும் தன்மை உடையவை. அவற்றில் ஊட்டச்சத்து அவ்வளவாக இல்லை; கொழுப்பும் கலோரிகளுமே அதிகம். இதனால் உடல் எடை கூடும்.

அப்போது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மட்டுமல்லாமல், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசத்தடை நோய்களும் ஆரம்பிக்கும். பேக்கரி பண்டங்கள், ஃபிரஞ்சு ஃபிரை, பீட்சா, பர்கர், பேஸ்ட்ரி, குக்கீஸ், கிராக்கர்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளில் ஊடுகொழுப்பு (Trans fat) அதிகம்.

இது கெட்ட கொலஸ்ட்ராலைக் கூட்டும். இது இதயத்துக்கு ஆபத்து. அப்போது மாரடைப்பு ஏற்படும். இதேபோல், மூளைக்கு ரத்தம் பாய்வது தடைபடும்; பக்கவாதம் வரும். துரித உணவு வகைகளில் உள்ள தாலேட் எனும் வேதிப் பொருள் பெண்கள் கர்ப்பமாவதற்குத் தடைபோடுகிறது; குழந்தைகளுக்குப் பிறவி ஊனம் ஏற்படுவதற்குக் காரணமாகிறது. ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இளமையிலேயே எலும்புகள் பலவீனம் ஆவதற்கும் பி.சி.ஓ.டி. பிரச்சினைக்கும் துரித உணவுகள் பாலம் அமைக்கின்றன.

ஒதுக்கப்படும் நார்ச்சத்து!

நம் ஆரோக்கியம் காக்கும் உணவுச்சத்துகளில் நார்ச்சத்துக்கு அதிக இடமுண்டு. இந்த நார்ச்சத்து உணவுச் செரிமானத்துக்கு உதவுகிறது; மலச்சிக்கலைப் போக்குகிறது; புற்றுநோய் வராமல் தடுக்கிறது; சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அதிகமாகாமல் பார்த்துக்கொள்கிறது; ரத்தத்தில் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.

இது முழுத் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு, கோதுமை, கேழ்வரகு, கொள்ளு, கீரை, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கொய்யாப்பழம், அத்திப்பழம் போன்றவற்றைச் சொல்லலாம்.

தவிர, மஞ்சள், மிளகு, வெந்தயம், சீரகம், லவங்கம், ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்ற உணவுத் தயாரிப்புப் பொருள்களிலும் இருக்கிறது. ஆனால், இன்றைய தலைமுறையினர் காய்கறிகளைக் குறைவாகவே சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் துரித உணவு வகைகளிலும் நொறுக்குத் தீனிகளிலும் நார்ச்சத்து சிறிதுகூட இல்லை. ஊட்டச்சத்தின் இடத்தை துரித உணவுகள் ஆட்கொண்டுவிடுவதால், இளமையிலேயே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடற்பருமன், புற்றுநோய் போன்றவை இடம் பிடிக்கின்றன.

துரித உணவுகள் விஷயத்தில் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

துரித உணவு வகைகளுக்கு அதிகமாக அடிமையாவது குழந்தைகள் தானே. ஏற்கெனவே இன்றைய குழந்தைகளுக்கு விளையாடும் நேரம் குறைந்துவிட்டது. தொலைக்காட்சி, அலைபேசி, கேட்ஜெட்ஸ் என அமர்ந்த இடத்திலேயே பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போகிறது. இதனுடன் பீட்சா, பர்கர், பரோட்டா, சிப்ஸ், நூடுல்ஸ், பானிபூரி போன்ற துரித உணவு வகைகளும் சேருவதால், குழந்தைப் பருவத்திலேயே உடற்பருமனால் அவதிப்படுகின்றனர்.

இவர்கள் துரித உணவைச் சாப்பிட்டதும் செயற்கைக் குளிர்பானங்களையும் குடிக்கின்றனர். அவற்றில் செயற்கை இனிப்புகளும், ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வேதிப் பொருட்களும் அதிகம். உதாரணத்துக்கு, ஒரு புட்டியில் 8 தேக்கரண்டி சர்க்கரை இருக்கிறது. இது 40 கிராம் சர்க்கரைக்குச் சமம். குளிர்பானம் குடிப்பது அன்றாடப் பழக்கமாக மாறினால், இளமையிலேயே நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

நம் பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு இப்படிக் குளிர்பானங்களைக் குடிக்கும் வழக்கம் இருக்காது. ஆகவே, நம் முன்னோர் பின்பற்றிய உணவு வகைகளையே நம் குழந்தைகளும் பின்பற்றுவதற்குப் பெற்றோர்தான் வழிவகை செய்ய வேண்டும்; குழந்தைகள் உடற்பயிற்சி செய்வதையும் விளையாடுவதையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com


மருத்துவம் தெளிவோம்துரித உணவுஎதிரிபாரம்பரிய உணவுஉணவு வகைகள்உணவுப் பண்பாடுமரபு உணவுஆரோக்கியம்தானியங்கள்காய்கறிகள்பழங்கள்குளிர்பானங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author