Published : 28 Sep 2019 09:55 AM
Last Updated : 28 Sep 2019 09:55 AM

முதுமையும் சுகமே 24: உயிர் மூச்சுக்கு உதவுவோம்

டாக்டர் சி. அசோக்

சி.ஓ.பி.டி. (COPD) என்கிற நாட்பட்ட நுரையீரல் பாதிப்பில் சுவாசத்தைச் சீராக இழுத்துவிடும் திறன் செயலிழந்துவிடுகிறது. காரணம் மூச்சுக் குழல்களும், நுண்காற்றுக் கண்ணறைகளும் பழுதடைந்து வீங்கி, சளி சுரந்து அதை வெளித்தள்ள முடியாமல் வருகிற பிரச்சினை. இதற்கு முக்கியக் காரணம் புகைப்பிடித்தல், அடுப்புப் புகை, காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு. இதைத் தொடக்கத்திலேயே கணித்து உரிய மருத்துவம் செய்யாமல் போனால் இதய பாதிப்பு, புற்றுநோய், நுரையீரல், ரத்தக்குழல்களில் அழுத்தம், மனச்சோர்வு ஏற்படும்.

நோய் அறிகுறிகள்

* சுவாசத் திணறல், குறிப்பாக மிகக் குறைந்த உழைப்பைச் செலுத்தும்போதும்
* மூச்சை இழுத்துவிடும்போது மென்மையான விசில் சத்தம் கேட்பது
* அதிக சளி சுரப்பது, அதை வெளித்தள்ள அடிக்கடி இருமல் - செருமல்
* இருமலுடன் வெள்ளை (அ) மஞ்சள் (அ) பச்சை நிறத்தில் கோழை
* உதடும் நகத்தின் அடிப்பக்கமும் நீல நிறமடைதல்
* அடிக்கடி நுரையீரல் நோய்த்தொற்றுகள்
* எப்போதும் ஒருவித களைப்பு - ஆயாசம்
* உடல் எடை குறைதல்
* கணுக்கால், பாதம், கால் வீக்கம்

எப்படித் தவிர்ப்பது?

* புகையைப் பகையாய் நினைத்துத் தவிர்க்க வேண்டும்
* மூச்சு பயிற்சி –யோகப் பயிற்சி மிகவும் நல்லது
* தசைகள், எலும்புகளை வலிமைப்படுத்த அன்றாட உடற்பயிற்சிகள்
* பிசியோதெரபி
* சரிவிகித - சத்தான உணவு முறை
* முறையான மருத்துவம்
* ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை

சிறப்பு உணவுகள்

ஊட்டச்சத்துக் குறைபாடு நுரையீரல் தசைகள், நுரையீரலின் செயல் திறனைக் கடுமையாகப் பாதிப்பது மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குன்றி பல நோய்களுக்கு வாசற் கதவைத் திறந்தே வைத்திருக்கும். அவற்றைத் தவிர்க்க:
* இரும்பு, புரதச்சத்து கொண்ட உணவு
* வைட்டமின் சி, டி, ஓமேகா 3 & 6 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு
* பெரு – நுண் கனிமச்சத்து கொண்ட உணவு (கால்சியம், பாஸ் பரஸ், பொட்டாசியம், மக்னீசியம்)
* மூன்று வேளை உணவுக்குப் பதிலாக 5-7 முறை குறைந்த அளவிலும் அதேவேளையில் அதிக ஆற்றல் தரும் உணவாகவும் உணவுத் திட்டம் அமைய வேண்டும்


* சோடியம், பொட்டாசியம், குளோரின், பைகார்பனேட் போன்ற தாது உப்புக்களை உடலில் சரியான விகிதத்தில் பராமரிக்க வேண்டும்
* பழங்கள், காய்கறி, கீரைகள், முழுத் தானியங்கள், விதை-கொட்டை வகைகள், பருப்பு வகைகளைத் தேவை அறிந்து உண்ண வேண்டும்
* ஒவ்வாமை உணவு வகைகளை இனம் கண்டறிந்து ஒதுக்க வேண்டும்
* விலங்கு எண்ணெய்களைத் தவிர்த்து தாவர எண்ணெய் வகைகள், தவிட்டு எண்ணெய் வகைகள் நல்லது
* துரித, எண்ணெய்யில் பொரித்த, வண்ணம் ஏற்றப்பட்ட, செயற்கை நிறமிகள் தாங்கிய, பதப்படுத்தப் பட்ட, பட்டை தீட்டப்பட்ட உணவு வகைகள், குளிர்பானங்கள், பேக்கரி உணவு வகைகள் நல்லதல்ல.

செப்பனிடும் மூலிகைகள்

இஞ்சி, பூண்டு, மஞ்சள், அதிமதுரம், துளசி, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, சீந்தில், நஞ்சறுப்பான், வெள்ளை எருக்கு, தூதுவேளை, குங்கிலியம், கண்டங்கத்திரி, ஆடாதோடா, வெள்வேங்கை, பூலாங்கிழங்கு, முசுமுசுக்கை, பவளம், பூரணசந்திரோதயம் போன்றவை நுரையீரல் நோய்களுக்குப் பயனளிக்கும். தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்களைக் கலந்து ஆலோசித்துப் பயன்படுத்தலாம்.

நவீன மருத்துவம்

தரமான பல நவீன மருந்துகள் உண்டு. நுரையீரல் சார்ந்த நோய்களுக்குத் தடுப்பு ஊசிகள் உண்டு. தகுதி வாய்ந்த மருத்துவரைக் கண்டறிந்து, தேவைப்படும் பரிசோதனகளை செய்து முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். “காற்றை (சுவாசம்) பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு கூற்றை (எமனை) உதைக்கும் குறியதுவாமமே” என்று திருமூலர் சொன்னதை நினைவுகொள்வோம்.

கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x