Published : 21 Sep 2019 10:33 am

Updated : 21 Sep 2019 10:33 am

 

Published : 21 Sep 2019 10:33 AM
Last Updated : 21 Sep 2019 10:33 AM

மரபு மருத்துவம்: இம்காப்ஸ் - 75 ஆண்டு ஆரோக்கிய அரண்

traditional-medicine

வா.ரவிக்குமார்

அலோபதி மருத்துவம் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாக மரபு மருத்துவ முறைகளே மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தன. அந்த வகையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்திய மருத்துவ முறை மருந்துகள், இன்றைக்கும் குறைந்த விலையில் கிடைப்பதற்குக் காரணமாக இருப்பது கூட்டுறவு நிறுவனமான இம்காப்ஸ் (IMCOPS).


வாதம், பித்தம், கபம் சமச்சீரற்ற நிலையில் இருப்பதே பல நோய்களுக்கும் காரணம் என்பதை பட்டறிவின் மூலமாக அறிந்து, அதற்கான மருந்துகளை தங்களின் அனுபவம் மூலமாகக் கண்டு பாடல்களாக புனைந்திருக்கிறார்கள் நமது சித்தர்கள். ‘எவனெவனுக்கு எது எது கிடைக்கணுமோ அது அது அவனவனுக்குக் கிடைக்கும். நீ பறிக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது’ என்பது சித்தர்கள் வாக்கு. சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய இந்திய மரபு சார்ந்த மருத்துவ முறைகளில் மருந்துகளைத் தயாரித்து வருகிறது இம்காப்ஸ். லாபநோக்கமின்றி கடந்த 75 ஆண்டுகளாக இயங்கிவரும் `இம்காப்ஸ்’-இன் முழுப் பெயர் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து உற்பத்தி நிலையம் மற்றும் பண்டகச்சாலை.

மூன்று வகை மருத்துவ முறை

டெல்லியில் உள்ள வேளாண் துறையின்கீழ் இம்காப்ஸ் இயங்கிவருகிறது. 224 மருத்துவர்களோடு (மெம்பர்) கேப்டன் சீனிவாசமூர்த்தியால் 1944-ல் செப்டம்பர் 12 அன்று இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இன்றைக்கு 17 ஆயிரம் மருத்துவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தியாவிலேயே சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கும் ஒரே கூட்டுறவு மருந்து ஆலை இம்ப்காப்ஸ்தான். இதுவே இம்ப்காப்ஸின் தனிச்சிறப்பு.

இந்தியா முழுவதும் 24 இடங்களில் இந்த அமைப்பின் கடைகள் உள்ளன. சென்னை திருவான்மியூரிலும் ஆந்திரத்தின் தாடப்பள்ளியிலுமாக இரண்டு பிரிவுகளில் மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆந்திரத்தின் தாடப்பள்ளியில் உள்ள ஆலை 1966-ல் தொடங்கப்பட்டது. 16 இயக்குநர்களின் தலைமையில் இயங்கிவரும் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பொன்சிங்.

தொடரும் பாரம்பரியம்

லாபநோக்கமின்றி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதையே கொள்கையாகக் கொண்டு தொடங்கப்பட்டு, அதே பாதையில் இம்காப்ஸ் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இன்றைக்கும் டெங்கு காய்ச்சலுக்கான கஷாயத்தை மக்கள் கூடும் இடங்களில் இலவசமாகக் வழங்குவது, மழைக்கால நோய்கள் அண்டாமல் இருப்பதற்கான மருந்துகளை வழங்கும் சேவைகளை இம்காப்ஸ் இலவசமாக செய்துவருகிறது.

“தொடக்கக் காலத்தில் மருந்து தயாரிக்கும் விகிதம் குறித்து எழுதப்பட்ட குறிப்பேட்டை இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறோம். இதை `யோகம்’ என்பார்கள். அந்த `யோக’த்தின் அடிப்படையிலேயே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. திருவான்மியூரில் மட்டுமே தேவையான பொருட்களை கொள்முதல் செய்கிறோம். முறையாக டெண்டர் விடப்பட்டு தகுந்த உழவர்களிடம் பொருட்கள் சேகரிக்கப்பட்டு எங்களை வந்தடையும். தரத்தை எங்களுடைய தரக்கட்டுப்பாட்டுக் குழு பரிசோதித்து சான்றளித்த பிறகுதான், மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்வோம்.

அதேபோல் நாங்கள் தயாரிக்கும் மருந்துகளும் பல கட்டத் தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளைத் தாண்டித்தான் மக்களைச் சென்றடைகின்றன. எத்தனையோ நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் இருந்தாலும், தரத்தில் எந்தச் சமரசத்தையும் நாங்கள் செய்து கொள்வதில்லை. தரத்தின் மீதான இந்தப் பிடிப்பே மக்களிடையே இம்ப்காப்ஸின் மருந்துகளுக்கான நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறது. எதிர்காலத்தில் எங்களுக்குத் தேவைப்படும் மூலிகைத் தாவரங்களை நாங்களே பயிரிடும் எண்ணமும் இருக்கிறது.”

என்கிறார் இம்காப்ஸ் தலைவர் டாக்டர் ஆர். கண்ணன்.
காலத்துக்கேற்ற மருந்துகளை பாரம்பரியமான முறையிலேயே இம்ப்காப்ஸ் இன்றைக்கும் தயாரிக்கிறது. பல்வேறு நோய்களை குணமாக்கும் 750 வகையான மருந்துகள் இம்காப்ஸில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் சித்தா முறையில் 250 மருந்துகளும், ஆயுர்வேத முறையில் 400 மருந்துகளும், யுனானி முறையில் 100 வகை மருந்துகளும் அடங்கும்.

காலத்துக்கேற்ற மருந்து

உணவு முறை, வாழ்க்கை முறை, பண்பாடு மாறியிருப்பதுபோல், நோய்களின் தன்மையும் மாறியிருக்காதா என்னும் கேள்வி பலருக்கு இயல்பாகவே எழும். அன்றைக்கே எச்.ஐ.வி. நோய்க்கான கூறுகளைப் பற்றி சித்தர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். தற்போது பரவலாக அறியப்படும் நீரிழிவு நோயை, சித்தர்கள் மதுமேகம் என்று வகைப்படுத்தியிருக்கின்றனர். டெங்குக் காய்ச்சலுக்கு பப்பாளி இலைச் சாறும் நிலவேம்புச் சாறும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

வேறு எங்கும் கிடைக்காத அரிய மருந்துகளை லாப நோக்கின்றி இம்காப்ஸ் வழங்கிவருகிறது. இதில் `பேரண்ட புஷ்பம்’ மன நோய்களுக்கு பயன்படுவது. `நவஉப்பு மிளகு’ வாத நோய்களுக்குப் பயன்படுவது. விந்து உற்பத்தியை அதிகரிக்கும் லபுகபீர், லபுஷெகிர், தங்கபஸ்பம் போன்றவை இம்காப்ஸின் தனிச் சிறப்பு முத்திரை பெற்றவை. இந்த மருந்துகளின் சிறப்பு இந்தியாவையும் தாண்டி அயல் நாடுகளிலும் பிரபலமாகியிருக்கின்றன.

மருந்துகள் மட்டுமில்லாமல் மூலிகை எண்ணெய் மசாஜ், நீராவிக் குளியல் போன்ற சிகிச்சை முறைகளை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குறைந்த கட்டணத்தில் இம்காப்ஸில் பெறலாம். பஞ்சகர்மா போன்ற சிகிச்சையும் திருவான்மியூர் இம்காப்ஸ் வளாகத்தில் வழங்கப்படுகிறது. நாள்தோறும் 40 பேர் இந்த வசதியைப் பெறுகிறார்கள்.

இம்காப்ஸின் ஆண்டு விற்பனை மதிப்பு ரூ. 45 கோடியை எட்டியிருக்கிறது. இன்னும் பலப்பல புதிய உத்திகளுடன் மக்களின் ஆரோக்கியத்தை காக்கும் சேவையில் இம்காப்ஸ் தன்னை புதுப்பித்துக்கொண்டே வருகிறது. மருத்துவம் வணிகமயமாகிவரும் இந்தக் காலத்தில், இம்காப்ஸ் போன்ற நிறுவனங்களின் சேவை இன்றைக்கு மக்களுக்கு அவசியமாகியிருக்கின்றன. மக்களின் மனதில் நம்பிக்கை கோட்டை கட்டியிருக்கும் இம்காப்ஸின் சேவை இதே பாதையில் இன்னும் பல பெருவிழாக்களைக் காண வேண்டும் என்பதே அதன் பயனாளிகளின் விருப்பம்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: ravikumar.cv@hindutamil.co.in

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைஇம்காப்ஸ்மரபு மருத்துவம்ஆரோக்கிய அரண்மருந்துமருத்துவ முறைகாலத்துக்கேற்ற மருந்துபாரம்பரியம்அலோபதி மருத்துவம்மூலிகை எண்ணெய் மசாஜ்நீராவிக் குளியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author