Published : 21 Sep 2019 09:40 AM
Last Updated : 21 Sep 2019 09:40 AM

முதுமையும் சுகமே 23: வெறும் காற்றடைத்த பையல்ல

டாக்டர் சி. அசோக்

முதுமையில் ஏழில் மூன்று முதியவர்கள் ஏதேனும் ஒரு நுரையீரல் சார்ந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உலக அளவில் மனித உயிரிழப்புக்குக் காரணமாக இருப்பனவற்றில் மூன்றாம் இடத்தில் இருப்பது நுரையீரல் சார்ந்த நோய்களே என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.

சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 15-18 முறை சுவாசிக்கிறோம் என்றால், ஒரு நாளைக்குச் சராசரியாக 23,000-25,000 முறை சுவாசிக்கிறோம். நமது நுரையீரல் காற்றை உள்ளிழுத்து வெளித்தள்ளும் வேலையை மட்டும் செய்யவில்லை. அதன் பணிகளைப் பட்டியலிட்டால், அடடா இத்தனை வேலைகளையா அது செய்கிறது. இப்படிப்பட்ட நுரையீரலையா நாம் இந்தப் பாடு படுத்துகிறோம் என நினைக்கத் தோன்றும்

நுரையீரலின் முக்கியப் பணிகள்

# உடலின் அமில காரத் தன்மையைச் சமநிலைப் படுத்துதல்
# சுவாசத்தின்போது உள்ளே நுழையும் நுண்கிருமிகள், மாசுக்களை வடிகட்டுதல்
# ரத்த ஓட்டத்தில் சுழன்று வரும் நுண் ரத்தக் கட்டிகளை, காற்றுத் திரள்களைக் களைந்தெடுத்தல்
# இதயத்தைப் பாதுகாக்கும் அரண்
# நுரையீரலின் மென்சவ்வுகளில் சுரக்கும் ஒருவகை வேதிப்பொருளான IgA நுரையீரலில் நோய்தொற்றுக்கள் உள் நுழையாமல் பார்த்துக்கொள்கிறது
# இதயத்துடன் ஒத்திசைவாகப் பணியாற்றி உடல் வளர்ச்சிக்கு, மூளை வளர்ச்சிக்குச் சீரான, தரமான, சுத்தமான ரத்தத்தை மில்லி விநாடிகூட ஓய்வு எடுக்காமல் அனுப்புகிறது
# ரத்த அழுத்தத்தைச் சமநிலைப் படுத்தும் அரும்பணியையும் செய்கிறது

முதுமை நுரையீரல் நோய்கள்

1. தொற்று நோய்களால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள்
2. தொற்று அல்லாத நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள்

தொற்று நோய்கள்

1. நிமோனியா (Aspiration & Community acquired Pneumonia)
2. காசநோய் (Tuberculosis)
3. வைரஸ், பாக்டீரியா
4. பூஞ்சைத் தொற்றுகள்

தொற்று அல்லாத பாதிப்புகள்

1. சி.ஓ.பி.டி. (COPD-Chronic obstructive pulmonary disease)
2. ஆஸ்துமா (Asthma)
3. நுரையீல் புற்று
4. நுரையீரலில் ரத்தக்கட்டு (Pulmonary embolism)

ஏன் ஏற்படுகிறது?

வயது ஏற ஏற உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே சுவாச மண்டலத்தின் செயல் திறனும் குறையும்.
1. நெஞ்சு, விலா, தண்டுவட எலும்புகளின் வடிவமைப்பில், தசைகளின் கட்டுமானத்தில் மாற்றமும் பலவீனமும் ஏற்படுதல், கூன் விழுதல். இதனால் நுரையீரலுக்குள் ஆக்சிஜன் செல்வதிலும், கரியமில வாயு வெளியேறுவதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் மூச்சுத் திணறல், சிறு உழைப்புக்கும் அதிக களைப்பு ஏற்படுகிறது
2. நுரையீரல் தசைகளின் கட்டுமானமும் நெகிழ்வுத்தன்மையும் (Elasticity) தளர்வடைகின்றன
3. ஏற்கெனவே உள்ள இதயம், மற்ற நோய்கள் காரணமாக
4. மூளைக்கும் சுவாச மண்டலத்துக்குமான கட்டுப்பாட்டில், தகவல் தொடர்பில் நடக்கும் குளறுபடிகள். இதனால் நுரையீரலில் சுரக்கும் கோழை, உள்நுழையும் நச்சுக்களை, கிருமிகளை வெளித்தள்ள முடியாமல் ஏற்படும் பிரச்சினைகள்
5. உறக்கத்தில் ஏற்படும் குளறுபடிகள்
6. உடல் நோய் எதிர்ப்பாற்றல் குறைதல்
7.முத்தாய்ப்பாகப் புகைப்பிடித்தல், சுற்றுப்புறத்தைத் தொடர்ந்து மாசுபடுத்துதல்

மூச்சுவிடுவதில் சிரமமா?

இதயம், நுரையீரல் சார்ந்த பிரச்சினை காரணமாக, வேறு பல காரணங்களால் மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கலாம் அதனால் அலட்சியமாக இல்லாமல், தகுதி வாய்ந்த மருத்துவரிடம் அவசியம் ஆலோசிக்க வேண்டும்

நிமோனியா எச்சரிக்கை

முதுமையில் பல்வேறு நோய்த்தொற்றுகள் தாக்கினாலும் மரணம்வரை கொண்டு செல்லும், அதிக துயரத்தைத் தரும் பாதிப்புகளில் ஒன்று நிமோனியா நோய்த்தொற்று. இது இரண்டு காரணங்களால் வருகிறது
1. முதுமையில் நோய் எதிர்ப் பாற்றல் குறைவதாலும், சுற்றுப்புற சுகாதாரமின்மையாலும் பரவலாம் (Community acquired pneumonia)
2. பக்கவாதம் போன்ற நோய்நிலைகளில் வாயில் ஊறும் உமிழ்நீர், இரப்பையில் சுரக்கும் செரிமானச் சுரப்புகள், நுரையீரலுக்குள் உணவு செல்வதால் வருகிற நிமோனியா (Aspirational Pneumonia)

நுரையீரலுக்கான பரிசோதனைகள்

# மார்பக எக்ஸ்ரே
# நுரையீரல் செயல் திறன் பரிசோதனை (PFT)
# நுண் ரத்தக் குழல்களில் ஆக்சிஜன் அடர்வைக் கண்டறிதல் (ABG analysis)
# மார்பக சி.டி. ஸ்கேன் (CT Chest)
# பொதுவான ரத்தப் பரிசோதனைகள்
# காச நோய் பரிசோதனை
# ஒவ்வாமைக்கான பரிசோதனைகள்
# நுரையீரல் புற்று போன்றவற்றுக்கான சிறப்புப் பரிசோதனைகள்

கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x