செய்திப்பிரிவு

Published : 07 Sep 2019 10:56 am

Updated : : 07 Sep 2019 10:57 am

 

காயமே இது மெய்யடா 49: கொஞ்சம் நடக்கலாமா?

kaayame-idhu-meyyada-series

நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு நிலைகளாக (சாரம், ரத்தம் என} மாற்றப்படும் ஆற்றல் இறுதியாக எலும்பினுள் மஜ்ஜையாகச் சேமிக்கப்படுகிறது. ஒருவர் நோய் வாய்ப்பட்டு ரத்தம் வற்றி, தோல் வறண்டு, சதை தளர்ந்து கொழுப்பு அத்தனையும் கரைந்துவிட்ட பின்னர் மீண்டு வருவதற்கு ஆணிவேரைப் போன்ற பங்களிப்பது எலும்பு மஜ்ஜைதான்.

நமது உயிரின் ஆற்றல் சேமிக்கப்படும் இடம் எலும்பு மஜ்ஜை (plasma fluid). எலும்பு மஜ்ஜையின் தரத்தைப் பொறுத்தும் உண்ணும் உணவின் தரத்தைப் பொறுத்தும்தான் உருவாகும் ரத்தத்தின் தரம் தீர்மானிக்கப்படுகிறது. எலும்பு உறுதியாகவும், எலும்பு மஜ்ஜைத் தரமாகவும் இருக்க வேண்டுமானால் சிறுநீரகம் முழுத் திறனுடன் இயங்க வேண்டும். சிறுநீரகத்தின் திறனே நமது உடலின் ஆரோக்கியத்துக்கும், குழந்தைப் பேற்றுக்கும், குழந்தையின் ஆரோக்கியத் துக்கும் ஆதாரமாகும்.

மிகை ரத்த அழுத்தம்

உணவின் சாரம் வயிறு, சிறுகுடல், பெருங் குடல் எனப் பல்வேறு படிகளாகக் கல்லீரலால் உறிஞ்சப்படுகிறது. எலும்பின் மையமான கிட்டத்தட்டக் குழல் போன்ற பகுதியில் சேமிக்கப்பட்ட மஜ்ஜை எனும் முதிராத செல்களும் தைமஸ் சுரப்பினுள் சேமிக்கப்பட்ட செல்களும் கல்லீரலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து மண்ணீரலுக்குச் சென்று ரத்தமாதல் முழுமை பெற்ற பின்னர் சிறுநீரகத்தில் தாதுக்கள் சேர்க்கப்பட்டு இதயம் நோக்கி உந்தப்படும் ரத்தத்துக்கு நுரையீரலில் ஆக்ஸிஜன் ஏற்றம் நடைபெறுகிறது.

நடுத்தர வயதின் தொடக்கம்வரை ஒரே சீராக இதயத்துக்குச் செலுத்தப்படும் இந்த ரத்த இயக்கம் அதற்குப் பின்னர் சீர்கெடத் தொடங்குகிறது. பல்வேறு வகைகளில் உடலில் சேரும் கழிவின் காரணமாக இது நிகழ்கிறது. இதயம் நோக்கி உந்தப்படும் ரத்தம் தூய்மைக் குறைவாக இருக்கும்போது அல்லது நுரையீரலில் ஆக்ஸிஜன் ஏற்றம் போதிய அளவு நடைபெறாதபோது சிறுநீரகம் முன்னைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் உந்தப்பட வேண்டியுள்ளது. இந்தக் கூடுதல் வேகத்தைத்தான் மிகை ரத்த அழுத்தம் என்கிறோம்.

கடைசிநிலையே இதயப் பாதிப்பு


ரத்த அழுத்தத்தை நாம் எப்போதும் இதயத்துடனேயே தொடர்புப்படுத்திப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதீத அச்சத்துக்கு ஆளாகிறோம். இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவது இறுதிக் கட்ட நிலையே ஆகும். அதற்கு முன்னர் மேற்சொன்ன படிநிலைகளில் முறையே கல்லீரல், மண்ணீரல், வயிறு, சிறுகுடல். சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளும் படிப்படியாகத் திறன் குன்றிய பிறகே ரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது.

ரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில் தலைசுற்றல், படபடப்பு, சட்டென்று வியர்வை பூத்தல், உடலின் மொத்த இயக்கமும் குன்றிப்போவது நிகழ்கிறது. இப்போதும் மேற்சொன்ன உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வதற்குப் பதிலாக, மருந்துகள் வாயிலாக மிகை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்து வதற்கான முயற்சிகளை மட்டுமே மேற்கொள்கிறோம்.

உடலுள்படியும் கொழுப்பு

உடலின் இயக்கத் தேவைக்கு மிகுதியாகக் கொழுப்பு சேமிக்கப்பட்ட பின்னர் இயக்கமற்ற இடுப்பு, முதுகு, அடிவயிறு என அடுத்தடுத்த கட்டங்களில் கொழுப்பு சேகரம் ஆகிறது. இதுவெல்லாம் நிறைந்த பிறகு உள்முகமாக ரத்த நாளங்களிலும் கொழுப்புப் படிகிறது. அதுபோக உடலினுள் தேங்கும் மிகையான தாது உப்புகளும் நாளங்களில் படிகின்றன. இதுவும் ரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணம் ஆகிறது.

நாம் இந்தக் கொழுப்பு, தாதுப் படிவங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு மாறாக ரத்த நாளங்களின் விட்டத்தை விரிவுபடுத்துவது போன்ற உடலின் இயல்புக்கு முரணான இயக்கத்தை முன்னெடுப்பதால் நாளடைவில் அவற்றின் இயல்பான சுருங்கி விரியும் (elasticity) தன்மை சிதைந்துவிடுகிறது. தொடர்ந்து இயக்கப்படும் பாகங்கள் தவிர்த்து இயக்கமற்ற பிற (தலை, கால்கள்) பாகங்களில் தடையை, அடைப்புகளை உருவாக்கிவிடுகிறது. இத்தகைய பாதிப்புகளை ஏதோ ரத்த அழுத்தத் துக்குத் தொடர்பில்லாத பிரச்சினையாகவே பொதுவாக நாம் கருதுகிறோம்.

தேவை உடற்பயிற்சி

இன்று வாழ்க்கையைச் சொகுசாக்குவதன் பெயரால் குறைந்தபட்ச இயக்கங்களும் கூட குறைக்கப்பட்டுவிட்டன. மறுபுறம் எரிக்கப்படும் ஆற்றலுக்குக் கூடுதலாக உண்கிற பழக்கமும் அதிகரித்துவருகிறது. இந்த இரண்டு முரணான பழக்கங்களால் மனித உடலின் புறக் கட்டமைப்பு நாளுக்குநாள் சிதைந்துவருகிறது. அதுபோக உள்ளுறுப்புகளின் செயல் திறனும் நடுத்தர வயதுக்கு முன்னரே மிக வேகமாகக் குறைந்துவருகிறது.

எனவே,நேரடியான உடல் உழைப்பில் ஈடுபடாத அனைவரும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது. எந்த வயதினரும் வருமானப் பிரிவினரும் மேற்கொள்ளத் தகுந்த பணச் செலவற்ற பயிற்சி, மிக அற்புதமான பயிற்சி வாரத்தில் ஐந்து நாட்களேனும் மேற்கொள்ள வேண்டியது நடைப் பயிற்சி. நடைப் பயிற்சியையும் வியர்க்க விறுவிறுக்க, மூச்சிரைக்கப் போக வேண்டும் என்பதில்லை. ஒரே சீரான வேகத்தில் 20 நிமிடங்களிலிருந்து 40 நிமிடம்வரை காலை ஏழரை மணிக்குள்ளோ இரவுப் படுக்கச் செல்லும் முன்னரோ (வயிறு இளக்கமான நிலையில்) சென்று வருதல் போதுமானது. உடலின் கொழுப்பைக் கரைப்பதையோ வியர்வையின் வாயிலாக உப்புக்களை வெளியேற்றுவதையோ இலக்காக வைத்துக்கொள்ளாமல் கடனே என்று செல்லாமல் முழு மனநிறைவோடு நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

புத்துணர்வைப் பெறுவோம்

ஒரே சீரான உடலியக்கம் நிணநீரோட்டத்தை விரைவுபடுத்தும். நிண நீரோட்டம் உடல் முழுதும் நடைபெறும்போது நமது காது மடல்களுக்கும் காலின் சுண்டு விரல்களுக்கும் ரத்தம் முழுமையாகச் சென்று திரும்பும். ஒரே சீரான இயக்கத்தில் மட்டுமே உடலின் செல்கள் அனைத்தும் அன்றாடம் புத்துணர்வைப் பெற இயலும். செல்கள் புத்துணர்வு பெற்றால் உள்ளுறுப்புகள் அனைத்தும் தமக்குரிய கடமைகளை முழுச் செயல்திறனுடன் செய்ய இயலும்.

உடல் இயக்கத்தைச் சீராக்குவதுதான் பயிற்சியின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர கலோரியை எரித்து, சதையைக் கரைத்து அல்லது ஆற்றலை இழந்து கைகால்களில் வலியை உருவாக்குவதல்ல உடற்பயிற்சி. மாறாக ஆற்றலை உள்ளுக்குள் ஈர்ப்பதே சரியான பயிற்சி.

உள்ளுறுப்புகளைக் கடக்கும் வருடங்களின் கரிய நிழல் படாமல் பாதுகாப்பது எப்படி என்பது குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.

- போப்பு

காயமே இது மெய்யடாநடைபயிற்சிஉடற்பயிற்சி முக்கியத்துவம்




Popular Articles

You May Like

More From This Category

More From this Author