Published : 07 Sep 2019 10:56 AM
Last Updated : 07 Sep 2019 10:56 AM

செவிலியரைப் போற்றுவோம்

பேச்சு மூச்சில்லாமல் இருந்த அந்தக் குழந்தையின் பெற்றோர் முகத்தில் தாங்க முடியாத வருத்தம். மருத்துவ மனையின் இளம் மருத்துவர் குழந்தையைப் படுக்க வைத்துச் சோதித்துப் பார்த்ததில், அவருக்கு முதலில் ஒன்றும் பிடிபடவில்லை.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அந்த மூத்த செவிலி, மருத்துவரிடம் ‘உங்கள் அனுமதியுடன்’ என்று சொல்லிவிட்டு ஒரு கையால் குழந்தையின் இருகால்களையும் ஒரு சேரத் தலைகீழாகப் பிடித்து தன் இன்னொரு கையால் குழந்தையின் முதுகை லேசாகத் தட்டினார். அவ்வளவுதான்.

குழந்தையின் வாயிலிருந்து சர்க்கரைவள்ளிக் கிழங்கின் சிறு துண்டு ஒன்று தரையில் விழுந்தது. குழந்தைக்கு மூச்சு சீராக வர ஆரம்பித்ததும் பெற்றோர் முகத்தில் தாங்க முடியாத மகிழ்ச்சி. உடனே அந்தச் செவிலியின் காலில் விழுந்துவிட்டார்கள். நோய்வாய்ப்பட்டவர்களிடமும், இறக்கும் தறுவாயில் உள்ளவர் களிடமும் செவிலியர் காட்டும் பரிவு பல நேரம் மருந்தைக் காட்டிலும் அதிகப் பயனுள்ளதாக இருக்கும்.

மருத்துவத் துறையோடு ஒன்றியது செவிலியரின் பணி. அறுவை சிகிச்சையில் அவர்களின் பங்கு மகத்தானது. இளம் மருத்துவர்கள் அறுவைசிகிச்சையின் படிப்படியான வழிமுறைகள், அதன் நுணுக்கங்கள், மிக நேர்த்தியாகச் செய்யும் உத்திகள் போன்றவற்றைப் பல நேரம் மூத்த செவிலியரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். செவிலியர் அறுவை அரங்கினுள் சென்றுவிட்டால் எப்போது வெளியில் வருவார்கள் என்று சொல்ல முடியாது.

ஒவ்வொரு மருத்துவரும் அவர்களுக்குரிய குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளைச் செய்துவிட்டு சென்று விடுவார்கள். ஆனால், அடுத்தடுத்து வரும் மருத்துவர்களுக்கும் செவிலியர் தொடர்ந்து அறுவை சிகிச்சையில் உதவ வேண்டும். அனைத்து அறுவைசிகிச்சைகளும் முடியும்வரை செவிலியர் தொடர்ந்து இறுதிவரை நிற்க வேண்டும். அரங்குக்குள் சென்றுவிட்டால் சாப்பாட்டை மறந்துவிட வேண்டியது தான். அறுவைசிகிச்சை அனைத்தும் முடிந்த பிறகுதான் எல்லாமே.

எதிர்கொள்ளும் சவால்கள்

மருத்துவத் துறையில் சுகாதாரப் பணியாளர்களின் பணி என்பது மிகவும் சவாலான ஒன்று. மருத்துவர் இருக்கும்போது செயல்படுவதைவிட, இல்லாதபோது ஏற்படும் பிரச்சினைகளைத்தான் மிகுந்த கவனத்துடன் சமாளிக்க வேண்டும். சிகிச்சை அளிக்கும்போது, குறிப்பாக ஊசி போட்டவுடனோ மருந்து கொடுத்தவுடனோ நோயாளிக்கு மயக்கமோ திடீரென வேறு மாதிரியான விளைவுகளோ ஏற்பட சாத்தியம் உள்ளது.

சில நேரத்தில் நோயாளியின் உறவினர்கள் பணியாளர்களைத் தாக்கக்கூடச் செய்வார்கள். அனைத்தையும் பொறுமையாகச் சமாளிக்க வேண்டும். எந்த ஒரு சுகாதாரத் திட்டமும் வெற்றி பெற வேண்டுமெனில் அதன் பணியாளர் களின் மனநிலை ஆரோக்கியமாக இருப்பதற்கேற்பப் பணிச் சூழலும் இருக்க வேண்டியது அவசியம்.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று எல்லோராலும் பகிரப்பட்டது. அதில் கோவையைச் சார்ந்த பிரபல மருத்துவர் ஒருவர், நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து, பொம்மை உடலை வைத்து செயல்முறையாக விளக்கிப் பேசுவார். அவர் பக்கத்தில், இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் நிற்பார்கள். இது போன்ற முதலுதவி சிகிச்சை செய்வதில் மருத்துவர்களைக் காட்டிலும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிக நுணுக்கங்கள் தெரியும் என்று அவர்களைப் பாராட்டிப் பேசுவார். இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும் சுகாதாரப் பணியாளர்களுக்கு?

பணியில் உள்ள பாதிப்பு

ஆய்வக நிபுணர்கள், வேலையில் என்னதான் கவனமாகப் பாதுகாப்புடன் இருந்தாலும் எய்ட்ஸ் போன்ற கடும் தொற்று நோய் பாதித்த நோயாளியிடமிருந்து ரத்தம் எடுக்கையில் அந்த ஊசியானது ஆய்வாளர்களின் கையில் குத்தி அதனால் இவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட சாத்தியம் இருக்கிறது. இதேபோல்தான் காசநோய்ப் பணியாளர்களின் நிலைமையும். நுண் கதிர் (எக்ஸ்ரே) படம் எடுக்கும் பிரிவில் பணி செய்யும் பணியாளர்கள் என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும், நுண்கதிர் வீச்சினால் ஏற்படும் உடல் நலக்குறைவை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

சுகாதாரத் திட்டங்களின் ஆணிவேர்

தாய்சேய் நலத்திட்டமோ தொழுநோய் ஒழிப்புத் திட்டமோ காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டமோ பார்வை இழப்புத் தடுப்புத் திட்டமோ எந்தத் திட்டமாகட்டும், திட்டங்களைச் சிற்றூர் அளவில் கடைக்கோடி கிராம மக்களையும் சென்று சேர்ப்பதில் மிக முக்கியப் பங்கு சுகாதாரப் பணியாளர்களையே சாரும். சுகாதாரத் திட்டங்களின் ஆணிவேர் இவர்களே. பிரபல கண்மருத்துவர் மறைந்த டாக்டர். வி. என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர்.ஜி.வெங்கடசாமி அடிக்கடி இவ்வாறு சொல்வார். ‘மருத்துவர்களுக்கு இணையான பொறுப்பு மருத்துவப் பணியாளர்களுக்கும் இருக்கிறது. இவர்களுக்கிடையே அதிக இடைவெளி இல்லாதபோதுதான் எந்த ஒரு சுகாதாரத் திட்டமும் வெற்றி பெறும் என்று”. அது உண்மைதான். அப்போதுதான் மருத்துவப் பணியும் ஆரோக்கியம் பெறும்.

மருத்துவத்துறை என்றால் மருத்துவர் மட்டுமே பொதுவாக நம் நினைவுக்கு வருவார்கள்; கண்ணுக்குத் தெரிவார்கள். மருத்துவர்களோடு சுகாதாரப் பணியாளர்களும் சேர்ந்ததுதான் மருத்துவத் துறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது அங்குள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு வாழ்த்துச் சொல்லி மகிழுங்கள். அது அவர்களின் பணி மேலும் சிறக்க உதவக்கூடும்.

- மு. வீராசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x