Published : 07 Sep 2019 10:56 am

Updated : 10 Sep 2019 16:25 pm

 

Published : 07 Sep 2019 10:56 AM
Last Updated : 10 Sep 2019 04:25 PM

தற்கொலை ஒற்றை இழப்பு அல்ல!

suicide-prevention-day

- நிலவன்

மற்ற உயிரினங்களுக்கு அரிதாகவே தீங்கு செய்ய நினைக்கும் மனித மனம், சட்டென ஒரு நொடிப் பொழுதில் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுப்பது, மானுட வாழ்வின் புரியாத புதிர்களில் ஒன்று.

அதிர்ச்சி தருவதாக இருந்தாலும், ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் தற்கொலைசெய்துகொள்கிறார்கள். அதாவது, நாற்பது நொடிகளுக்கு ஒருவர், உலகின் ஏதோ ஒரு மூலையில் தற்கொலைசெய்துகொள்கிறார் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

நடப்பு ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் மரணங்களுக்கான முக்கிய காரணங்களில், தற்கொலை 15-ம் இடத்தில் இருக்கிறது. மொத்த மனித உயிரிழப்புகளில் 1.4 சதவீதம், தற்கொலைதான்!

ஆண்கள் அதிகம்

மக்கள்தொகை அடிப்படையில் தற்கொலைவீதம் ஒரு லட்சம் பேருக்கு 11.4 என்கிற அளவில் உள்ளது. ஆண், பெண் எனத் தனித்தனியாகப் பார்த்தால், ஒரு லட்சம் ஆண்களுக்கு 15 ஆகவும் ஒரு லட்சம் பெண்களுக்கு 8 ஆகவும் தற்கொலைவீதம் உள்ளது.

பெரும்பாலும், குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில்தான் இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். இன்னொரு பக்கம், நன்கு வளர்ச்சியடைந்த பல ஐரோப்பிய நாடுகளில் 15 முதல் 24 வரையிலான வயதினர் தற்கொலையால்தான் அதிக அளவில் இறக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. பொதுவாக மட்டுமல்ல, இந்த வயதுப் பிரிவினரிலும் பெண்களைவிட ஆண்களே அதிகமாகத் தற்கொலைசெய்துகொள்கின்றனர்.

தடுப்பு நாள்

அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கவும் தற்கொலைக்கு முயல்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குணப்படுத்தவும் உலக அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஐ.நா. சபையின் உலக சுகாதார நிறுவனமும் (WHO) தற்கொலைத் தடுப்புக்கான உலக அமைப்பும் (IASP) இணைந்து கூட்டாகப் பணியாற்றுகின்றன. ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதியன்று உலகளாவிய தற்கொலைத் தடுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில், ‘அனைவரும் இணைந்து தற்கொலையைத் தடுப்போம்’ எனும் மையக்கருத்து எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டில், அதே கருத்து கூடுதல் வலுவுடன் கொண்டு செல்லப்படவுள்ளது.

10.8 கோடி பேருக்குப் பாதிப்பு!

ஒரு தற்கொலையில் ஒருவரே இறந்துபோகிறார் என்றாலும், ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் 25 பேர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, உயிர் தப்புகிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். மேலும், தற்கொலை செய்துகொள்ளும் ஒருவருடன் அந்தத் துயரம் முடிந்துவிடுவதில்லை; அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

2019 நிலவரப்படி, ஒரு தற்கொலையால் 135 பேர் இப்படிப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உலக அளவில் மொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வோர் ஆண்டும் மொத்தம் 10.8 கோடி பேர் தற்கொலை நிகழ்வுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.

குறைக்க இலக்கு

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2013ஆம் ஆண்டில் கூடிய உலக சுகாதாரப் பேரவையில், உலக சுகாதார நிறுவனமானது ‘மனநலச் செயல்பாட்டுத் திட்ட’த்தை முன்வைத்தது. அதில், தற்கொலைத்தடுப்பை முக்கியப் பணியாக முன்னிறுத்தியது. அந்தத் திட்டத்தின்படி, உலக சுகாதாரப் பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டுக்குள் தற்கொலைகளின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வளவுதான் திட்டங்களும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சொல்லிக்கொள்ளும்படியாக முன்னேற்றம் ஏற்படவில்லை. அரசு அளவில், மருத்துவத் துறை அளவில், சமூக அளவில், தனிநபர் அளவில் இன்னும் கூடுதலான கவனமும் அக்கறையும் செலுத்தப்படவேண்டும்!

தேசிய அளவிலான உத்திகள்!

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உலக சுகாதார நிறுவனமானது, ஒவ்வொரு நாட்டுக்கும் தற்கொலைத் தடுப்புக்கான தேசிய உத்திகளை வகுக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டிவருகிறது. ஆசியப் பிராந்தியத்தில் பூட்டான், தென்கொரியா, ஜப்பான் ஆகியவை தேசிய உத்திகளைச் செயல்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.

நம் நாட்டுக்கு அந்த இடம் கிடைக்காமல் போனதற்குச் சில பிரச்சினைகள் காரணமாக இருக்கின்றன. தற்கொலைத் தடுப்பில் தேசிய உத்திகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்குத் தேசிய புள்ளிவிவரங்களும் முதன்மையானவை என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதன் கணக்குப்படி, 80 நாடுகள் மட்டுமே தற்கொலை விவரங்களை முறையாக ஆவணப்படுத்துகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, விபத்துகள், தற்கொலையால் உயிரிழந்தவர்களின் புள்ளிவிவரத்தைத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் பராமரித்துவந்தது. கடந்த 15 ஆண்டுகளாக நம் நாட்டில் உழவர்கள் ஆயிரக்கணக்கில் தற்கொலைசெய்துகொண்டது, அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கியது. 1995 - 2015 காலகட்டத்தில் மூன்று லட்சம் உழவர்கள் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர் எனும் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாக, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகள் உருவாயின. அதையடுத்து, தற்கொலைக் கணக்கெடுப்பு மூடுமந்திரமாகவும் குழப்படியாகவும் ஆக்கப்பட்டது.

இந்தியாவில் கணக்கெடுப்பு மர்மம்!

2014 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கணக்கெடுப்பு முறையையே மாற்றிவிட்டார்கள் என்கிறார், ஊரக விவகார ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான சாய்நாத். ”உழவர்களில் கணிசமானவர்களை, மற்ற தொழில்புரிவோர் எனும் பிரிவுக்கு மாறிவிட்டார்கள். இதனால் உழவர் தற்கொலையின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது; ஆனால் ’மற்ற தொழில்புரிவோர்’ வகையினரின் தற்கொலைவீதம் 128 சதவீதமாக அதிகரித்திருக்கிறது” என மர்மத்தை அவர் போட்டுடைத்தார்.

பிறகு, 2016-ல் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் சார்பில் உழவர்கள் தற்கொலை விவரத்தை மட்டும் வெளியிடாமல் அரசு நிறுத்திவைத்தது; போலீஸ் ஆய்வு - மேம்பாட்டுக்கான அமைப்புடன் ஆவணக் காப்பகத்தை இணைத்ததையும் 2018-ல் மீண்டும் தனித்தனியாகப் பிரித்ததையும் அண்மையில் அவர் கவனப்படுத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவரும் குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த தற்கொலை மரணங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை. 55 ஆண்டுகளாக வருடாந்திர தற்கொலை மரண விவரங்களை ஆவணப்படுத்திய ஒரு நாடு, தற்போது இதைச் செய்யமுடியாமல் போவது ஏன்? பிறகு எப்படி நாட்டின் நலனையும் மக்களின் நலனையும் பாதுகாக்க முடியும்?

‘ஸ்பாக்’ மாடல்!

தற்கொலைத் தடுப்புக்கான இலவசத் தொலை பேசி ஆலோசனை வழங்க தமிழக அரசின் 104 ஹெல்ப்லைன் வசதி செயல்பட்டுவருகிறது. இளம் வயதினரிடம் அதிக அளவில் தற்கொலை பாதிப்பு இருப்பதால், கல்வி நிறுவனங்கள் அளவில் விழிப்புணர்வு, ஆலோசனை உதவி வழங்கப்படுவது அவசியம்.

தமிழ்நாட்டில் முன்மாதிரியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் மனநலத் துறையின் சார்பில், (Suicide Prevention and Crisis Helpline - SPACH) ஸ்பாக் என்னும் உதவி மைய எண் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. எம்.பி.பி.எஸ்., செவிலியர் படிப்புகள், மருத்துவம்சார் பிற படிப்புகள் என இங்கு படிக்கும் 2 ஆயிரம் மாணவர்கள் அளவில் இத்திட்டம் முதலில் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், 24 மணி நேரம் இயங்கும் செல்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு, தங்களுக்குத் தோன்றும் தற்கொலை தொடர்பான எண்ணங்களை, சந்தேகங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவற்றுக்குக் கூடிய விரைவில் தீர்வுகாண மனநலத் துறையின் பேராசியர்கள், மருத்துவர்கள், முதுநிலைப் பட்ட மாணவர்கள் உதவுவார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் இதுபோன்ற ’ஆலோசனை உதவி’ மையத்தை ஏற்படுத்தினால், இளம் வயதினரின் தற்கொலையை மட்டுமின்றி, மாணவர்கள் மூலம் சமூகத்தின் மற்ற பிரிவினரின் தற்கொலையையும் கணிசமாகக் குறைக்கமுடியும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Suicide preventionதற்கொலை தடுப்புஆண்கள் தற்கொலைதற்கொலை ஆய்வுதற்கொலை கணக்கெடுப்புஸ்பாக் மாடல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author