Published : 31 Aug 2019 09:44 am

Updated : 31 Aug 2019 09:44 am

 

Published : 31 Aug 2019 09:44 AM
Last Updated : 31 Aug 2019 09:44 AM

முதுமையும் சுகமே 20: இது ஓர் இடியாப்பச் சிக்கல்

mudhumaiyum-sugamey

டாக்டர் சி. அசோக்

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற வாக்கியத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் இப்படித்தான் காலைக் கடனைச் சரிவரக் கழிக்க முடியாதவர்களும், கலங்கிப் போய் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
மனச் சிக்கலைவிட, பணச் சிக்கலைவிட, குடும்பச் சிக்கலைவிடப் பெரும் சிக்கல் தருவது மலச்சிக்கல். அதுவும் முதுமையில் உடலையும் மனதையும் ஒருசேர நெருக்கடிக்கு உள்ளாக்கும். இதன் நதிமூலம், ரிஷிமூலம் அறிந்துகொள்வதன் மூலம், மூல நோய் முதல் புற்றுவரை ஆசன வாயை அடைக்காமல் காப்பாற்றிக்கொள்ளலாம்
வாழ்க்கை முறை சார்ந்து முதுமையில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்

வாழ்க்கை முறை சார்ந்தவை:

# குறைந்த நார்ச்சத்து உணவுகள்
# போதுமான அளவு ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணாமல் போவது, தேவையான அளவு நீரைப் பருகாமல் இருப்பது
# இரும்புச் சத்து, கால்சியம் சத்து மாத்திரைகளை நாமாகவே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் உட்கொள்வது
# உடற்பயிற்சி செய்வதை அயர்ச்சியாக நினைப்பது
# உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை
# மலமிளக்கி (Laxatives), பேதி (Purgations) ஆகிய மருந்துகளைச் சித்தம் போக்கு சிவன் போக்காகப் பயன்படுத்துதல்.
# மலம் கழிக்க வேண்டிய உந்துதல் எழும்போது, அதை அடக்கியாள நினைப்பது

குடல் பாதைக் குறைபாடு

குடல் பாதையின் அசைவுக் குறைவாலும் மலச்சிக்கல் வரும்
#காரணமே இல்லாமல் குடல் பாதையில் நாட்பட்டு இருக்கும் அடைப்பு
# தைராய்டு சுரப்புக் குறைபாடு
# முதுமையில் இயல்பாகவே குடல் பாதையின் செயற்பாடு குறைவது, கூடவே குடல் பாதை நரம்புக்கற்றைகளின் செயற்பாடு குறைந்துபோவது
# வளர்சிதை மாற்றம், நாளமில்லாச் சுரப்புக் கோளாறுகளால் (எடுத்துக்காட்டு: நீரிழிவு நோய் போன்றவை)

நரம்பியல் சார்ந்து நரம்பியல் நோய்களைத் தொடர்ந்துவரும் மலச்சிக்கல்:

# மூளை நடுக்கு வாதம் (Parkinson’s), பக்கவாதம், இடுப்புவாதம் போன்றவை
# தசை நரம்புகள் செயலிழப்பு (Muscular dystrophy)
# மூளை வளர்ச்சி குன்றியவர்கள் (Cerebral palsy)
# மூளை, தண்டுவட நரம்பு சார்ந்து ஏற்படும் விபத்துகள்

இடுப்புப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து:

# கர்ப்பிணிப் பெண்கள்
# மலத்தை உந்தித் தள்ள வேண்டிய தசைகளுக்குள் ஒத்திசைவின்மை

சில வகை மருந்துகளால்

# கடுமையான உடல்வலி, புற்று நோய்களுக்குக் கொடுக்கப்படும் சில வகை ஓபியேட் மருந்துகளால்
# சில வகை அதிக ரத்த அழுத்த மருந்துகள் (Calcium channel antagonists)
# ஒவ்வாமைக்கான மருந்துகள்
# மனச்சோர்வுக்கான மருந்துகள் (Tricyclic antidepressants)

மற்ற காரணங்கள்

# ஆசன வாய் வெடிப்பு
# குடல் பகுதி அழற்சி நோய்
# மேல் குடல், கீழ் குடல் பாதை நோய்கள்
# பிறவியிலேயே ஆசன வாய், மலக்குடல் வடிவமைப்பில் கோளாறு ஏற்பட்டிருந்தால்
# இளமையில் வளர்த்த தொப்பை முதுமையில் தளர்ந்து போய் வயிற்றுத் தசைகள் சரிவதால், மலத்தைச் சரிவர உந்தித்தள்ள முடியாமல் போகும்

மலச்சிக்கலைத் தவிர்க்க

போதுமான அளவு கரையும் அல்லது கரையா நார்ச்சத்துள்ள உணவான பழங்கள், காய்கறி, கீரை, முழுத் தானியங்கள், கொட்டைகள், முழுப் பயறு வகைகள் (பொதுவாக ஒரு நாளைக்கு 25-30 கிராம் அளவு). உணவுவழியாக எடுக்க முடியாதவர்கள் மருந்துக் கடைகளில் கிடைக்கும் நார்ச்சத்துத் துணை உணவை மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.

பட்டை தீட்டப்பட்ட, பாலிஷ் போடப்பட்ட, பட்டி டிங்கரிங் செய்யப் பட்ட, பதப்படுத்தப்பட்ட, மேக்கப் போடப்பட்ட, வேதிப்பொருட்களால் குளிப்பாட்டப்பட்ட உணவு வகைகள், துரித உணவு, எண்ணெயில் பொரித்த உணவு, பேக்கரி தின்பண்டங்கள் ஆகியவற்றின் மீதான ஆர்வம் மலச்சிக்கலை மேலும் சிக்கலாக்கும்.
தினசரி இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்

தேவை கூடுதல் கவனம்

# அளவுக்கு மீறிய நார்ச்சத்தும் நல்லதல்ல. அதாவது, தினசரி 50 கிராமுக்கு அதிகமாக
# நீங்களாகவே கடைகளில் மலமிளக்கிகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள், எனிமா கொடுத்துக்கொள்ளாதீர்கள்

தவிர்க்க வேண்டியவை

அதிக அளவு வயிற்றுப் பொருமலை (Gas) ஏற்படுத்தும் கீழ்க்காணும் உணவு வகைகளை முதுமையில் குறைத்துக்கொள்ளுங்கள்
# அவரை போன்ற கொட்டை வகைகள்
# காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பிராக்கோலி, வெங்காயம், காளான், தண்ணீர்விட்டான் கிழங்கு (asparagus)
# பழங்கள்: ஆப்பிள், பேரிக்காய் வகைகள்.
# முழுத் தானியங்கள்: கோதுமை, தவிடு அதிகம் கொண்ட உணவு வகைகள்
#சோடா, பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள்
# பால், பால் சார்ந்த பொருள்கள்: பாலாடைக் கட்டி, பனீர், பனிக்கூழ் (ice cream), கெட்டித் தயிர்.
# சர்க்கரை, செயற்கை இனிப்பு
முதுமையில் மலச்சிக்கல் பெரும் துயரத்தைத் தரும். அதற்கான சரியான காரணத்தைத் தகுந்த பரிசோதனையுடன், உரிய மருத்துவர் துணையுடன் அணுகுவது மலத்தை மட்டுமல்ல மனதையும் இளக்கி மகிழ்வைத் தரும்.

புரிந்துகொள்ள…

மலச்சிக்கலைப் புரிந்துகொள்ள இவற்றில் கவனம் தேவை:
# 25% நேரம் மலத்தை முக்கி கழிக்க வேண்டி இருக்கிறதா?
# 25% நேரம் மலம் கட்டிப்பட்டு, கடினப்பட்டு வருகிறதா?
# 25% நேரம் மலம் கழித்த உணர்வு முழுமை பெறாமல் இருக்கிறதா?
# 25% நேரம் ஆசன வாய் அடைப்பு ஏற்பட்டதுபோல உணர்கிறீர்களா?
# 25% நேரம் விரலை விட்டு மலத்தை வெளித்தள்ள வேண்டியிருக்கிறதா?
# 25% நேரம் மலமிளக்கி பயன்படுத்தாமலேயே வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா?
மேலே சொன்ன அறிகுறிகள் குறைந்தது ஆறு மாத கால அளவில் தொடங்கி மூன்று மாத கால அளவில் கணக்கிடப்பட வேண்டும் மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பொருந்தி இருக்க வேண்டும்

கட்டுரையாளர்,
குடும்ப நல - முதியோர்
மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com


முதுமையும் சுகமேஇடியாப்பச் சிக்கல்சிக்கல்நார்ச்சத்து உணவுகள்குடல்நரம்பியல் நோய்கள்இடுப்புப் பகுதிகுடல் பாதைஇரும்புச் சத்துகால்சியம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author