Published : 24 Aug 2019 10:59 am

Updated : 24 Aug 2019 10:59 am

 

Published : 24 Aug 2019 10:59 AM
Last Updated : 24 Aug 2019 10:59 AM

காயமே இது மெய்யடா 47: சிறுநீரகம் சிறக்க

kidney

போப்பு

சிறுநீரகம் ஒருநாளைக்கு 30 முறை ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியைச் செய்கிறது. நிமிடக் கணக்கில் 90 மில்லி ரத்தத்தை எடுத்து அமினோ அமிலம், யூரிக் அமிலம் போன்ற பல்வேறு கூறுகளை வடித்துச் சுத்தப்படுத்துகிறது.
சிறுநீரகத்தின் உட்பாகமான நெப்ரான்கள் ரத்தத்தில் உள்ள கழிவம்சங்களை நீக்கி நல்ல ரத்தத்தை இதயம் நோக்கி உந்தித் தள்ளுகின்றன. சுமார் 1.5 மில்லியன் எண்ணிக்கையில் உள்ள குவளை போன்ற வடிவமுடைய நெப்ரான்கள் சுருங்கும்போது சட்டென்று சுருங்கிக் கழிவுப் பொருட்களை நீக்குகிறது. விரியும்போது சீரான வேகத்தில் நின்று அடுத்த கட்டத்துக்குத் தாவுகிறது.


அதிகரிக்கும் சிறுநீர் கல் உபாதை

சிறுநீரகம் ஒருநாளைக்குச் சுமார் 165 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி 1.5 லிட்டர் கழிவைச் சிறுநீராகப் பிரித்துச் சிறுநீர்க் குழாய் வழியாகச் சிறுநீர்ப் பைக்கு அனுப்புகிறது. அவ்வளவு பெரிய அளவுக்கு வடிகட்டி சிறுநீரைப் பிரிக்கத் தெரிந்த நெப்ரான்களால் கல்லீரல் மூலமாகவும் பித்தப் பையிலும் சேரும் அடர் கழிவுகளைச் சிதைக்க முடிவதில்லை.
உடலில் பரு வடிவத்தில் சேரும் உடலுக்குத் தேவையற்ற கழிவுகளை ஈர்த்துவைக்கும் கல்லீரல் அவற்றைச் சிறுநீரகத்துக்கு அனுப்பும்போது தன் வழக்கமான செயல் முறையை மேற்கொண்டு வடிவ மாற்றம் செய்யாமல் குறுணைக் கல் வடிவத்திலோ சேமியா போன்ற நீளக் குச்சிகளாகவோ நொறுங்கும் (crystal) தன்மையுள்ள சில்லுகளாகவோ திரித்திரியாகவோ சிறுநீர்க் குழாய்க்கு அனுப்பி விடுகிறது.

இப்படி அனுப்பப்படுவதையே சிறுநீரகக் கல் என்றும் பித்தப்பைக் கல் என்றும் குறிப்பிடுகிறோம். இத்தகைய கல் வெளியேறும்போது சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகப் பை வரையிலும் அதைக் கடந்து சிறுநீர்த் தாரையிலும் பிறப்பு உறுப்பிலும் கடுமையான வலி தோன்றுகிறது. முப்பதாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் சிறுநீர்க் கல் உபாதை இப்போது பரவலாகிவிட்டது.

அதிக உணவால் தள்ளாடும் நெப்ரான்

நமது கழிவு நீக்க உறுப்புகளில் பிறவற்றின் வேலை குறைந்து விட்டதால் அவற்றின் பொறுப்பையும் சிறுநீரகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக வேலை நெருக்கடியாலோ சோம்பல்பட்டோ மலம் கழிக்கவில்லை என்றால் மலக் கழிவில் உள்ள நீர் ரத்தத்தின் வழியாகச் சிறுநீரகம் நோக்கிச் செலுத்தப்பட்டுவிடும். அப்போது அந்த நீரை வெளியேற்ற வேண்டிய பொறுப்பு சிறுநீரகத்தினுடையதாகி விடுகிறது. இப்படிப் பிற கழிவு நீக்க உறுப்புகளின் செயல் திறன் குறைகிறபோதெல்லாம் அதை ஈடுசெய்யச் சிறுநீரகமே கூடுதலாக உழைக்க நேர்கிறது.

ரத்தத்தில் சேரும் கழிவுகளை நீக்கும் பணிகளோடு அவ்வப்போது உணவில் சேரும் தேவைக்குக் கூடுதலான உப்பு, காரம், கசப்பு, இனிப்பு போன்ற கூறுகளையும் நீக்க வேண்டிய கடமை சிறுநீரகத்தின் நெப்ரான்களுக்கு உண்டு. நாம் உண்ணும் கெட்டியான சாம்பார், கிரீஸ் தன்மையிலான கிரேவி போன்றவற்றில் சுவை உடலின் தேவைக்கு மிகுதியாக இருப்பதோடு நீண்ட நேரம் சமைக்கப்படுவதால் அதில் மிகுந்திருக்கும் வெப்பம் செரிமானத்துக்காக உடலில் உள்ள நீரை உறிஞ்சிக்கொள்கிறது. உடலில் இயல்புக்கு மாறாக நீர் வற்றுவதால் ரத்தவோட்டத்தின் வேகமே குறைந்துபோகும். கெட்டியான உணவை உண்ட பின்னர் நமக்கு அடிக்கடி தாகம் ஏற்படுகிறதென்றால் சிறுநீரகத்தின் நெப்ரான்கள் நீர் வற்றித் தவிக்கின்றன என்று பொருள்.

கால் ஏன் மரத்துப் போகிறது?

பரவலாக நம்பப்படுவது போல, உணவு உண்டு செரிமானமான பிறகு சுமார் நான்கு மணி நேரம் கழித்து உணவின் சாரம் ரத்தமாக மாற்றப்படுவதில்லை. மாறாக, நாம் உணவு உண்ணத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உணவின் ஒரு பகுதி ரத்தமாகிவிடுகிறது. இரண்டு கால்களையும் மடக்கிச் சம்மணமிட்டு அமர்ந்து உண்கிற பொழுது சுமார் பத்து நிமிடங்களில் முழங்கால்களுக்குக் கீழ்ப்பகுதி மரத்துப்போவதை உணர முடியும். அப்படியானால் உண்டு கொண்டிருக்கும் உணவிலிருந்து முதற் கட்டமாகப் பெற்ற சாரம் ரத்தத்தில் கலந்து ரத்தத்தின் அடர்த்தி அதிகரித்துவிட்டது என்று பொருள். ரத்தத்தின் அடர்த்தி உயராத அளவுக்கு உண்டால் நெப்ரான் களுக்கான வேலைப் பளு குறை வாகவே இருக்கும். உண்டு கொண்டிருக்கும்போதே உணவின் வழியாகச் சேரும் உபரிப் பொருளை வெளியேற்ற வேண்டிய வேலைப் பளு நெப்ரான்களுக்கு அதிகரிக்குமானால் முதல் கட்டமாகச் செரிமானத்துக்கு வாயில் சுரக்க வேண்டிய உமிழ்நீரைச் சிறுநீரகத்தால் சுரக்க இயலாது.

சிறுநீரகத்தை இயங்கச் செய்கிறோமா?

நெப்ரான்களின் செயல்திறனைப் பாதிக்கும்படியான பழக்கம் உபாதையாக ஆகிறது. அந்த உபாதைகளின் மூலகாரணத்தைக் காண்பதற்குப் பதிலாக உபாதை களைத் தள்ளிப் போடுவதற்கான மருந்துகளைத் தொடர்ச்சியாக எடுப்பதால் அது தீராத நோய்களாகி நிரந்தர நோயாளியாக இருக்கிறோம். மருந்து எனும் கடின ரசாயனங்களின் தேக்கத்தால் நெப்ரான்கள் முடக்கப்பட்டு விடுகின்றன. இறுதியாக, சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகப் பழிபோட்டு டயலிசிஸ் செய்யப் புறப்பட்டு விடுகிறோம்.

டயலிசிஸ் செய்யத் தொடங்கிய பின்னர் அதனுடனே வாழ்நாளை ஓட்டுவது அல்லது சிறுநீரகம் முற்றாகச் செயலிழந்து மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவது என்பதை நோக்கித் தான் செல்கிறார்கள். நெப்ரான்களின் திறனை மேம்படுத்தி டயலிசிஸை நிறுத்துவது மிக அரிதாக மிகச் சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. டயலிசிஸைத் தொடங்கிவிட்டால் அடுத்துப் பெரும் பாலும் இறுதி நாட்களை நோக்கிய பயணமாகத்தான் இருக்கிறது.

நமது வீட்டில் காபிக்கான பில்டரை அவ்வப்போது வயர் பிரஷ் வைத்துச் சுத்தம் செய்து கொள்கிறோம். ஆனால், நமது ரத்தத்தைச் சுத்திகரித்து நம்மை ஆரோக்கியமாக இயங்கச் செய்யும் சிறுநீரகத்தை முழுத் திறனுடன் இயங்கச் செய்கிறோமா? சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்க அக, புற ஓய்வுகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் குறித்துத் தொடர்ந்து பார்க்கலாம்.

(தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைசிறுநீரகம்காயமே இது மெய்யடாKidneyசிறுநீர் கல்ரத்தம் சுத்திகரிக்கும்ரத்தம்அதிக உணவுகழிவுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author