

டாக்டர் சி. அசோக்
பசிக்காகச் சாப்பிடுகிறோமா? ருசிக்காகச் சாப்பிடுகிறோமா? இல்லை பெருமைக்காகச் சாப்பிடுகிறோமா? மனிதன் செய்யும் வேலைக்கு ஏற்ப, எடுக்கும் பசியின் அளவுக்கு ஏற்ப உண்பதைக் காட்டிலும் ருசிக்கும், பெருமைக்கும், மனக் கிளர்ச்சிக்கும் உண்பதே அதிகம் என்கின்றன உலகின் பல நாடுகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்.
இது உண்மை என்பது நமக்கே தெரியும். அதனால்தான் இன்று உயிர் (ஆரோக்கியம்) வளர்வதைவிட, ஊன் பெரிதாகி உடலை நோய்களின் கூடமாக்கி விடுகிறது. வயிற்று நோய்கள் சற்றும் இளைத்தவை அல்ல, தொப்பையைப் போல.
முதுமையில் பெரும்பாலானவர்களை பாடாய்ப் படுத்தும் நோய்களில் முக்கியமானவை இவையிவை என்று விளக்கிச் சொல்ல முடியாதவை வயிறு தொடர்பான நோய்களே. குறிப்பாக இரப்பை, குடல் பாதை நோய்கள். அதனால்தான் வயிற்றை ஒரு அதிசய மந்திர பெட்டி என்கிறது மருத்துவ உலகம். வாயில் தொடங்கி மலவாய்வரை பல தேய்மானங்கள் முதுமையில் நிகழ்கின்றன.
வாய்:
உமிழ்நீர்ச் சுரப்பு குறைகிறது. பற்கள் விழுகின்றன அல்லது உறுதி குலைகின்றன. நாவின் சுவைமொட்டுக்கள் குறைவதால் ருசியின்மை அதிகரிக்கும்.
உணவுக்குழாய்:
உணவுக் குழாயின் சுருங்கி விரியும் தன்மையைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் தளர்ச்சி அடைவது போன்ற காரணங்களால், உணவை உள்ளே தள்ளும் வேகம் குறையும்.
உணவுக்குழாயின் கீழ் புறம் உள்ள சுருக்குதசை (Lower Oesophageal Sphincter) வலு இழப்பதால் உணவு எதிர்க்களித்தல், நெஞ்சு எரிச்சல் (Reflux Oesopagitis) தொலைக்காட்சி நெடுந்தொடரைப் போல் தொல்லைப்படுத்தும். இதனால் உணவை விழுங்கும்போது நெஞ்சு அடைப்பதைப் போன்றோ வலியோ இருக்கும் சில நேரத்தில் இது மாரடைப்புக்கான வலியைப் போலவும் தோன்றும் (Cardiac Mimic Pain).
இரைப்பை:
செரிமனச் சுரப்புகள் செய்யும் சண்டித்தனம், இரைப்பையில் இருந்து உணவு வெளியேறும் கால அளவு தாமதப்படுதல், பலூன்போல இரைப்பை அடிக்கடி ஊதிக்கொள்ளல் போன்றவை தொடர் பிரச்சினையாகக் கூடும்.
சிறுகுடல்:
கடிகாரப் பெண்டுலம்போல உணவுக்குழாயில் தொடங்கி மலக்குடல்வரை மேலிருந்து கீழ் நோக்கி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் அசைவுடன் (Peristalsis) குடல் பாதையின் வேகம் மட்டுப்படுவதால் உணவு செரிமானமடைந்து வெளியேறத் தாமதமாகும். இதனால் வயிற்றுப் பொருமல் போன்றவை தொடர்ந்துகொண்டே இருக்கும்.
சிறு குடல் பாதையைச் செப்பனிடும் நன்மை செய்யும் பாக்டீரியா குறைந்து போகும். இதனாலும் அடிக்கடி பிரச்சினைகள் எழக்கூடும்
பெருங்குடல்:
உணவு வெளியேறும் வேகம் குறைவதால் மலச்சிக்கலோ வயிற்றுப் போக்கோ, மற்ற தொந்தரவுகளோ தொடர்கதையாகலாம்
ஆசன வாயில்:
ஆசனவாய் சுருக்குத்தசை தளர்வடைவதால் மலத்தை உந்தி வெளித்தள்ளும் வேகம் மட்டுப்பட்டு மலச்சிக்கலோ, மூலமோ, ஆசனவாய் வெடிப்போ, ஆசனவாய் புற்றுநோய்கூட வர சாத்தியம் உண்டு. இந்த தொந்தரவுகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம் பற்களில் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தக்கசிவு, ருசியின்மை, பசியின்மை, செரிமனமின்மை, வாய் குமட்டல், வாந்தி, விழுங்குவதில் சிரமம், எதிர்க்களித்தல், நெஞ்சு எரிச்சல், வயிற்று உப்புசம், வயிற்று வலி, சாப்பிட்டு முடித்தவுடன் மலம் கழிப்பது, ஒரு நாளில் பல முறை மலம் கழிப்பது, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, ரத்தப் போக்கு.
மேல் சொன்ன அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உரிய சிகிச்சை பெறுவதால், புற்றுநோய் முதல் பல நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.
‘உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்’
திருமூலரின் இந்த சத்திய வரிகள் முக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.
முக்கியமாக வாயை எதனுடன் ஒப்பிட்டுள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
வேண்டவே வேண்டாமே
வெள்ளைச் சர்க்கரை,
மைதா
சமையல் அறை அஞ்சறை பெட்டியில் அவசியம் இருக்க வேண்டியவை:
மிளகு, மஞ்சள், சீரகம், பெருங்காயம், வெந்தயம், சுக்கு, ஏலம், பூண்டு
கட்டுரையாளர்,
குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com