

சு. அருண் பிரசாத்
அலுவலகத்திலிருந்து அப்போதுதான் அறைக்குத் திரும்பியிருந்தேன். அலுவலக நண்பரிடமிருந்து அவசரக் கைபேசி அழைப்பு. இந்த நேரத்தில் இவரிடமிருந்து அழைப்பா என்று யோசித்துக்கொண்டே என்னவென்று விசாரித்தபோது மற்றொரு நண்பருக்குத் திடீரென உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும், அவர் பேசுவதே தெளிவாக இல்லையென்றும் பதறினார். உடல்நிலை சரியில்லாத நண்பர் அறையில் தனியாக இருக்கிறார் என்றும் தன்னுடைய வீடு வெகு தூரத்தில் இருப்பதால் நீங்கள் உடனடியாகப் போய்ப் பார்க்க முடியுமா என்றும் கேட்டார்.
நானும் உடனடியாக உடல்நல மில்லாத நண்பருக்கு அழைத்தேன். வெகு தளர்வாக ஈனமான குரலில் பேசினார். எனக்குப் பயம் வந்துவிட்டது. இதுபோன்ற சூழலை இதற்குமுன் நான் எதிர்கொண்டதில்லை. நண்பருக்கு முதன்முறையாக இப்படி சுகமில்லாமல் போயிருப்பதாகச் சொன்னார். எனவே, திருவல்லிக்கேணியிலிருந்து நண்பரின் அறை இருக்கும் புரசைவாக்கத்துக்கு விரைந்தேன். எங்களுடைய அவசரத்துக்கு ஒரு பேருந்துகூட அப்போது வரவில்லை. சுமார் கால் மணி நேரம் காத்திருந்தும் பேருந்து ஏதும் வரவில்லையென்பதால் ஆட்டோவைப் பிடித்து விரைந்தோம்.
பலவீனமான நண்பர்
அறைக்குச் சென்று பார்த்தால், எழக்கூட முடியாமல் நண்பர் வெகு பலவீனமாகப் படுக்கையில் கிடந்தார். ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்தோம்; தொட்டுப் பார்த்தால் கடுமையான காய்ச்சல். அன்று முழுவதும் சாப்பிடவில்லை என்றும் இரவு வாங்கி வைத்திருந்த இட்லியைக்கூடப் பிரிக்க முடியாத அளவுக்குச் சோர்வாக உணர்வதாகவும் சொன்னார். நாங்கள் அறைக்குச் சென்றபோதே மணி பத்து. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது என்று அருகில் உள்ள மருத்துவமனை குறித்து விசாரித்ததில் இரண்டு தனியார் மருத்துவமனைகளைக் குறிப்பிட்டு அந்நேரம் அங்கு மருத்துவர்கள் இருக்கக்கூடும் என்று சொன்னார்கள். உடனே புறப்பட்டுச் சென்றோம். மணி அப்போது சுமார் 10.30.
அடுத்தடுத்து வந்த நோயாளிகள்
முதல்கட்ட பரிசோதனைகளை முடித்து நண்பரைப் படுக்கையில் படுக்க வைத்திருந்தார்கள். 103 டிகிரி காய்ச்சல் இருப்பதாக நர்ஸ் தெரிவித்தார். ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று சில மருந்துகளை எழுதிக் கொடுத்து மருத்துவமனை உள்ளேயே இருந்த மருந்தகத்தில் வாங்கி வரச் சொன்னார்கள். வாங்கிக் கொடுத்தோம். இதற்கிடையில் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து அடிப்பட்ட குழந்தை, உடல்நிலை மோசமான முதியவர் என அடுத்தடுத்து சிகிச்சைக்காக ஆட்கள் வந்துகொண்டிருந்தார்கள். பணியாளர்கள் குறைவாக இருந்ததால் எல்லோரையும் ஒருசேரக் கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பயத்தால் நேரும் செலவீனம்
குழந்தைக்கு முதலில் சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு நண்பருக்கு ட்ரிப்பிஸ் ஏற்றுவதற்கான பணிகளை மற்ற நோயாளிகளையும் இடையிடையே கவனித்துக்கொண்டே நர்ஸ் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தார். சுமார் பதினொன்றே கால் மணியளவில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது. நண்பர் இதற்குள் சிறிது ஆசுவாசமடைந்து இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தார். காய்ச்சல் முழுமையாகக் குணமடைய ஐந்து நாட்களுக்கு மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்கள். எல்லாவற்றுக்குமாகச் சேர்ந்து மொத்தமாக ஆயிரம் ரூபாய் பில் வந்தது.
சாதாரண கிளினிக் ஒன்றில் சிகிச்சைக்குச் சென்றிருந்தால் மாத்திரைகளும் மருத்துவர் பீஸும் அதிகபட்சம் இருநூறு ரூபாய்க்குள் முடிந்திருக்கும். இக்கட்டான சூழலில் பணத்தைப் பார்க்காமல் உடல்நிலை பற்றிய பயமும் அக்கறையுமே உடனடியாகப் பெரிய மருத்துவமனையையும் நோக்கி நம்மை நகர்த்துகிறது. ஆனால், அந்த மருத்துவமனைகள் சாதாரண சிகிச்சைக்கும் பணத்தைத் தீட்டுவது எளிதில் ஜீரணித்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது..