Published : 10 Aug 2019 09:57 AM
Last Updated : 10 Aug 2019 09:57 AM

காயமே இது மெய்யடா 45: சிறுநீரை அடக்க முடியவில்லையா?

போப்பு

சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட்டுக் கழிக்கச் சென்றால் நூறு மில்லிக்கும் குறைவாகவே செல்வது, கழித்த பின் நிறைவில்லாமல் இருப்பது, கழித்து முடித்த அடுத்த ஐந்தாம் நிமிடத்திலேயே கழிக்கத் தோன்றுவது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கழிக்க நேர்வது இப்படியான சிறுநீர்ப்பை தொடர்பான சிக்கல்கள் பரவலாகிக்கொண்டு வருகின்றன.

மேற்படியான பிரச்சினைகளை முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்குள் பத்து சதவீதத்தினரும், நாற்பதிலிருந்து ஐம்பது வயதுக்குள் சுமார் இருபது சதவீதத்தினரும் எதிர்கொள்வதாக மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது. இதுபோக நாற்பது வயதுக்குள் சிறுநீர்ப் பைப் புற்றுநோய் சமீப காலத்தில் அதிகரித்துவருகிறது. அறுபது வயதுக்கு மேல் சிறுநீர்ப் பை தொடர்பான பிரச்சினை இல்லாதவர்கள் அரிது என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது.

அதிகரிக்கும் ரசாயனப் பயன்பாடு

கழிக்கும் உந்துதல் ஏற்பட்ட அடுத்த நொடியே கழிவறைக்குச் செல்லாவிட்டால் கசிந்துவிடும் உபாதை அறுபது வயதுக்குப் பின் எப்போதும் நிகழலாம். இதற்கு முதன்மைக் காரணம், நமது உணவில் அதிகரித்துவிட்ட ரசாயனப் பயன்பாடு, காற்றிலும், புறச்சூழலிலும் பெருகிவரும் ரசாயன மாசு. அதேபோல் சிறுநீரகக் கல் உருவாகி சிறுநீர்ப் பாதையில் உயிர் துடிக்கும்படியான வலி ஏற்படுவது.

குறிப்பாக, 20 வயது தொடங்கி கல்வி, வேலை நிமித்தமாகத் தொடர்ந்து வெளி உணவு சாப்பிட நேரும் இளைஞர்களும் இளம் பெண்களும் இத்தகைய உபாதைகளுக்கு ஆட்படுவது நாளுக்கு நாள் பெருகிவருகிறது. உணவகங்களில் சமைப்பதற்கு எளிதாகச் சேர்க்கப்படும் மாவுப் பொருட்களும் சுவையூட்டி ரசாயனங்களும் இந்த உபாதைகளுக்கு மிக முக்கியமான காரணங்கள்.

பொருத்தமான உணவில்லாமல் அடிக்கடி சோர்ந்து போக நேரிடுகையில் தன்னூக்கப்படுத்திக் கொள்ளக் குடிக்கும் குளிர்பானங்கள் ஆகட்டும் அல்லது சத்துப் பானங்கள் ஆகட்டும் இரண்டுமே சிறுநீரகத்துடன் சிறுநீர்ப் பையையும் பாதிக்கக்கூடியவை. பல சத்துப் பான பவுடர்களில் உணவின் வழியாகச் சேர வேண்டிய தாதுச்சத்துகளுக்கு மாற்றாக நேரடியாக உலோகத் தாதுகள் கலக்கப்படுவதாக மேற்கத்திய உணவு ஆய்வாளர்கள் சோதனைகளில் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

உணவு வழியாகச் சேரும் ரசாயனக் கழிவுகளோடு மருந்து மாத்திரைகளின் வழியாகச் சேரும் ரசாயனக் கழிவுகளும் நடுத்தர வயதைக் கடக்கும்போது சேரத் தொடங்கி விடுகின்றன. நாற்பது வயதைக் கடந்துவிட்டால் நீங்கள் மருந்து மாத்திரை எடுத்தாக வேண்டும் என்பது கிட்டத்தட்ட நிர்ப்பந்தம் ஆகிவிட்டதே.

பாதிப்பைக் களையும் வழி

இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறவர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் மாற்று இதுதான். தவிர்க்க முடியாத நேரத்தில் வேலைத்தள உணவு இடைவேளைகளில் அங்கு அளிக்கப்படும் உணவை உண்ண வேண்டியது. மற்றபடி இரவு நேரத்தில் பழங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை உண்பதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். இரண்டு கைப்பிடி அவலும் ஒரு வாழைப்பழமும் இரண்டு தேக்கரண்டி சர்க்கரையும் ஒரு நேர முழு உணவுக்குரிய ஆற்றலை வழங்கக்கூடியவை. உலர் பேரீச்சையும் திராட்சைப் பழங்களும் உள்ளுறுப்புகளுக்குப் பாதிப்பைத் தராமல் பேரளவுக்கு உடலுக்கு ஊக்கம் தருபவையாக இருக்கும்.

சிறுநீர்ப் பை முழு ஆற்றலுடன் செயல்பட வேண்டும் என்றால் அடிவயிற்றுப் பகுதியில் வெப்பம் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது நிதானமாகவும், செரிமானத்துக்கு அதிக ஆற்றல் தேவைப்படாததுமான உணவையே தேர்ந்து உண்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாகக் கோதுமையை மூலப் பொருளாகக் கொண்டு சமைத்த உணவைத் தேர்வுசெய்வதாக வைத்துக்கொள்வோம்.

உடைத்த கோதுமையில் சமைத்த கஞ்சி அல்லது பொங்கலே சிறந்தது. நார்ச்சத்து மிகுந்த உடைத்த கோதுமை நிதானமாகச் செரிமானம் ஆகும். அப்போது உடலில் அதிக ஆற்றல் செலவிடப்படுவதில்லை. அதற்கு மாறாகச் சப்பாத்தி என்று வைத்துக்கொள்வோம். செரிமானத்தின் போது மாவைச் சிதைத்து இனம் பிரிக்க உடலின் வெப்பம் அதிகமாகச் செலவிடப்படும். அப்போது உருவாகும் காற்று வெளியேறும்வரை அடிவயிற்றுப் பகுதியில் வெப்பம் நிறைந்திருக்கும். அடிக்கடி நா வறட்சி ஏற்படும்.

ரசாயனச் சேர்மானங்களைத் தவிர்ப்போம்

ரசாயனப் பயன்பாடுகள் அதிகரிப்பதால் பித்தப்பையிலும், சிறுநீரகத்திலும் சிறுநீரகப் பையிலும் கற்கள் உருவாகின்றன. இவற்றைத் தவிர்க்க ரசாயனங்களைக் குறைத்தாக வேண்டும். நமது உணவின் மூலப்பொருளில் அதாவது தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மூலமாகச் சேரும் ரசாயனங்களை உடனடியாகக் குறைக்க வழியில்லை. ஆனால், நேரடியாகப் பாதுகாக்கப்பட்ட பிஸ்கட், சாக்லேட், வேஃபர், ஐஸ்கிரீம் போன்றவை, இனிப்பு, குளிர் பானங்கள் ஆகியவற்றில் ரசாயனச் சேர்மானங்கள் உள்ளவற்றை நம்மால் தவிர்க்க முடியும். இதைச் சிறுவயது முதலே பழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

செரிக்கக் கடினமான இறுகிய தன்மையுள்ள உணவுப் பொருட்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து கூழாக வயிற்றுக்குள் அனுப்புவதைப் பழக்கமாக்கிக்கொண்டால் அடிவயிற்றில் வெப்பமேற்படுவதையும் கெட்ட வாயு உருவாவதையும் வயிற்று உப்புசத்தையும் தவிர்க்க முடியும். சிறுநீர் வெளியேற்றத்தில் ஏற்படும் பிரச்சினை அத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.

மிகை வெப்பம் விந்துப் பையைப் பாதித்து விந்தை நீர்த்துப் போகச் செய்து இனப் பெருக்க ஆற்றலையும் பாதிக்கும்.
உயிரின் ஆதார இயக்கமான ரத்த ஓட்டத்தில் சிறுநீரகத்தின் பங்கில்லாமல் இதயம் இயங்குவதில்லை. பலாக் கொட்டையை விடச் சற்றே கூடுதலான அளவுடைய சிறுநீரகம் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

(தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x