செய்திப்பிரிவு

Published : 03 Aug 2019 10:12 am

Updated : : 03 Aug 2019 10:12 am

 

காயமே இது மெய்யடா 14: சிறுநீர்ப் பை, வெறும் கழிவுநீர்த் தொட்டி அல்ல!

urine-bag-not-just-a-sewage-sink

போப்பு 

சிறுநீர்ப் பை, உடலின் நடுப் பகுதியில், இடுப்பெலும்பின் முன் பகுதியில் புனல் போன்று அமைந்துள்ளது. உடலின் கழிவு நீக்கத்தில் பெரும் பகுதியைத் தோல் பகுதிக்கு அடுத்தபடியாக நிறைவேற்றுவது சிறுநீர்ப்பைதான்.
சிறுநீர்க் குழாய் வழியாக அனுப்பப்படும் கழிவுநீர் மட்டுமே சிறுநீர்ப் பையில் தேங்குவதில்லை.

சிறுநீர்ப் பையினுள் அமைந்துள்ள சேய்மை சுருண்ட குழாயுடன் தொடர்புடைய வேறு பல குழாய்கள் வழியாகவும் கழிவுநீர் சேருகிறது. ஹைப்போதாலமஸில் இருந்து இதய நாளங்கள்வரை நேரடியாகத் தொடர்புடைய சிறுநீர்ப் பை உடலின் வெப்பச் சமநிலையைப் பாதுகாப்பதில் சிறுநீரகத்தைக் காட்டிலும் முதன்மையான பங்கு வகிக்கிறது.

தன்னிச்சையாகவும் இயங்கும்

சிறுநீர்ப் பை, சுமார் 500 மில்லி கொள்ளளவு கொண்டது . இதில் 300 மில்லியை எட்டியதும் கழிப்பதற்கான உணர்வு நமக்கு எழும். மேலும், 200 மில்லி சேரும்வரை கழிக்காமல் இருப்பதை அனுமதிக்கும். இவ்வாறு அனுமதிப்பது உடல் நமக்களிக்கும் சலுகை. ஆனால், அச்சலுகையை அடிக்கடி பயன்படுத்திக்கொண்டே இருந்தால் உணர்வுகள் மரத்துப் போகத் தொடங்கும். சிறுநீர்ப் பையில் உப்புகள் படிவது அதிகரித்து, தொடர் வலி முதல் புற்றுநோய் வரை செல்லக்கூடும்.

சிறுநீர்ப் பை, சிறுநீரகத்தின் ஆற்றலைப் பெற்று இயங்கும் உறுப்பு மட்டுமல்ல; அது பேரளவு சிறுநீரகத்துக்குத் துணை செய்யும் உறுப்பும்கூட. பல நேரம் சிறுநீரகத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வேலைசெய்வதுடன், தன்னிச்சை யாகவும் இயங்கி சிறுநீரகத்தின் பணியைக் குறைத்து ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கும் பேருதவி புரிகிறது சிறுநீர்ப் பை.

உதாரணமாக, விபத்து ஏற்பட்டு உடலுறுப்புகள் அத்தனையும் தமது இயல்பை இழப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது சிறுநீர்ப் பை தன்னிடம் உள்ள சிறுநீரைச் சட்டென்று வெளியேற்றிவிடும். அத்துடன் நிற்காமல் உடல் முழுதும் தேங்கியிருக்கும் கழிவுநீரின் ஒரு பகுதியை வழக்கமான சிறுநீர்க் குழாய் (ureter) வழியாக அல்லாமல் செல்களின் வழியாக வடித்தெடுத்துச் சிறுநீர்த் தாரை (urethra) வழியாக வெளியேற்றிக்கொண்டே இருக்கும். 

உணர்வைக் கடத்தும்

மென் திசுக்களால் ஆன சிறுநீர்ப் பை மென்னுணர்வு மிக்கது. நாம் எந்த உணர்வுக்கு ஆளானாலும் அந்த உணர்வைப் பெற்று வைத்துக்கொள்வது சிறுநீர்ப் பையே.  சுமார் பத்து வயதுவரை திடீரென்று அச்சநிலைக்கு உள்ளாகும்போது தம்மையறியாமலே சிறுநீர் கசிவதைப் பார்த்திருப்போம். இப்படி சிறுநீரை வெளியேற்றுவதற்குக் காரணம் சிறுநீர்ப் பை நிரம்பியதால் அல்ல.  உடலில் திடீரென்று தோன்றிய தீய உணர்வை நீக்குவதேயாகும்.

கோபம், பதற்றம் போன்ற விரும்பத்தகாத உணர்வுகள் எழும்போதும் பெரியவர்களுக்குச் சிறுநீர் கழிக்கத் தோன்றும். தீய உணர்வுகள் மேலெழும்போது அடிவயிறு கனப்பதுபோல் தோன்றுவதற்குக் காரணம் சிறுநீர் கழிப்பதற்கான உந்துதலே. ஆனால், வயது கூடக் கூட உணர்வுகளைத் தொடர்ந்து புறக்கணிப்பதால் உடல் தரும் சமிக்ஞைகளை நம்மால் சரியாக இனம் காண முடிவதில்லை. 

அச்சம் வேண்டாம்

சிறுநீர்ப் பையானது  வெறும்  கழிவுநீர்த் தொட்டி அல்ல. உணர்வு களைக் கையாள்வதில் சிறுநீர்ப் பைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வெப்பச் சமநிலையைக் கையாள்வதில் சிறுநீர்ப் பைக்கு முக்கியப் பங்கு இருப்பதால் அதனுடன் தொடர்புடைய நாளங்கள் வழியாக ரத்தத்தில் அடர்ந்த கழிவு கருஞ்சிவப்பு நிறத்திலோ வெளிர் காவி நிறத்திலோ சிறுநீரில் வெளியாகக் கூடும். அவ்வாறு ஓரிரு நாட்களுக்குச் சிறுநீர் வெளியாவதைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.

அடர்த்தி அதிகமாகவோ நுரைத்த படியோ சிறுநீர் கழித்து முடித்தவுடன் லேசான வலி ஏற்படுவதையோ கெட்ட அறிகுறியாகப் பார்த்து உடனடியாகச் சோதனை செய்து பார்க்க வேண்டியதில்லை. அப்படி வெளியாகும் நாட்களுக்கு முன்னர் நம்முடைய நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தால் அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்த நாட்களாக இருந்திருக்கும். அல்லது திட்டத்தை முடிக்க வேண்டிய இறுதி நாட்களாக இருந்திருக்கும். அல்லது மிகுந்த மன அழுத்தம் நிறைந்த நாட்களாக இருந்திருக்கலாம். தொடர் மன அழுத்தம், அதிகக் குளிர்ச்சி, அதிக வெப்பம் போன்றவை சிறுநீரகத்தை நேரடியாகப் பாதிப்பதுடன் அதன் துணை உறுப்பான சிறுநீர்ப் பையையும் கடுமையாகப் பாதிக்கும்.

மன அழுத்தம் தவிர்ப்போம்

இடுப்புப் புகுதியில் வெப்பம் தாக்கும் வகையில் நீண்ட நேரம் அடுப்படியில் நின்று வேலை செய்யும் பெண்கள், சமையலர்கள் போன்றோருக்குச்  சிறுநீர் கடுத்து அடிவயிற்றில் வலியுடன் பிரியலாம். இது உடலில் வெப்பம் பரவாமல் முழு வெப்பத்தையும் சிறுநீர்ப் பையே பெற்றுக்கொள்வதால் நிகழ்வ தாகும். தொடர்ந்து நீண்ட நேரம் ஏசி அறையில் வேலைசெய்யும்போது உடலின் வெப்பச் சமநிலைக் குலைந்து தொண்டை வறட்சி முதல் சிறுநீர் அடர்ந்து செல்வதுவரை பல்வேறு இயல்பு மாற்றங்கள் ஏற்படலாம்.

இந்த நிலை நீடிக்கு மானால் சிறுநீர்ப் பையின் மென் திசுக்களில் உணர்விழப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் பிரிதல் அல்லது சிறுநீர் கழித்து முடித்த பிறகும் கழித்த நிறைவு ஏற்படாமை; அல்லது கழிவறையைவிட்டு வந்த மறுநிமிடமே மீண்டும் கழிக்கத் தோன்றுதல் ஆகிய உபாதைகள் நேரலாம்.

மென்திசுக்களின் உணர்வை மீட்டெடுக்க மருந்து மாத்திரைகளின் உதவியை நாடினால், தற்காலிகத் தீர்வாகத்தான் இருக்குமே தவிர நிரந்தரத் தீர்வாக இருக்காது. அதன் உணர்வை மீட்டெடுக்க மன அழுத்தமற்ற நிலையும் வெப்பச் சமநிலையும் ஓய்வும் ஆழ்ந்த தூக்கமும் மட்டுமே உதவும்.
சிறுநீர்ப் பையை முறையாகப் பராமரிக்கும் நுட்பத்தைக் கற்றுக்கொண்டால் உடலின் மொத்த ஆரோக்கியமும் எளிதாகக் கைவரப் பெறும். சிறுநீர்ப்பை குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

காயமே இது மெய்யடாசிறுநீர்ப் பைஉணர்வுஅச்சம் வேண்டாம்மன அழுத்தம்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author