

போப்பு
உதிரப் போக்குத் தொடங்குவதன் அடையாளமாகவும், நிற்பதன் அடையாளமாகவும், நின்ற பின்னர் நின்றுவிட்டதன் அடையாளமாகவும் பல்வேறு விதமாகப் பெரும்போக்கு வெளிப்பட்டு வந்துள்ளது. சினைப்பையில் சினை முட்டை முழுமையான வளர்ச்சி பெற்றதும் உதிரப் போக்குக்கு நடுவில் சிறிதளவு பெரும்போக்கு வருவது இயல்பான ஒன்றுதான்.
இதுபோன்ற வெளிப்பாடுகளை நோய்க்குறி என்றோ இயல்புக்கு மாறானதென்றோ கருத வேண்டியதில்லை. ஆனால், உதிரப்போக்குக்குப் பதிலாக வெறும் வெள்ளை நீராகவோ கெட்டியான சீழ் போன்றோ சளி போன்று ஈழை ஈழையாக இழைந்து செல்வதையோ இயல்பானதாகக் கருத முடியாது. அதேபோல வாரக்கணக்காக அதிக அளவிலும் கெடு நாற்றத்துடனும் போவதை இயல்பானதென்று கருத முடியாது.
அறிகுறிகள்
வெள்ளைப் போக்கு வெள்ளையாக இல்லாமல் கிட்டத்தட்ட சீழ் வடிவத்தில் இளம் மஞ்சள் நிறத்தில் கசிவுக்குப் பதிலாகக் கொட்டுவது போலப் போகுமானால் அது மண்ணீரல்வரை பாதித்துள்ளது என்று பொருள். அதேபோல இளம் பச்சை நிறத்தில் என்றால் கல்லீரல்வரை என்றும் கருஞ் செந்நிறத்தில் போகுமெனில் நேரடியாகச் சிறுநீரகத்திலும் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்க சாத்தியம் உண்டு. கருஞ்செந்நிறத்தில் கெட்டியாக வெள்ளைப்போக்குடன் இணைந்து வருவதை சினை முட்டை முழு வளர்ச்சி அடைவதற்கு முன்பே சிதைந்து வெளியேறுதலாகக் கருத இடமுண்டு.
வெள்ளைப்படுதலின் போது உடற் தொல்லைகள் பெரும்பாலும் இருக்கும். குறிப்பாக, அதிகமாகவும் அடிக்கடியும் வெள்ளைப்போக்கு ஏற்படுபவர்களுக்கு நிச்சயமாகச் சகிக்க இயலாத நாற்றம் வெளிப்படும். பெரும்போக்கு அதிகமாக நிகழும் நாட்களில் முடிந்தவரை அதிகபட்ச ஓய்வில் இருப்பதும் சாதாரணத் துணியைப் பயன்படுத்துவதும் அடிக்கடி கழிவறை சென்று கழுவிக்கொள்வதும் புறத்தில் ஏற்படும் புண் போன்ற தொல்லைகளைக் குறைக்கும்.
தவிர்க்கும் வழிகள்
செரிமானத்துக்கு அதிக ஆற்றல் தேவைப்படாத பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொள்வதே பெரும்போக்கைத் தவிர்ப்பதற்கான முதல் படி. உண்ணும் உணவு மிக விரைவாக ரத்தமாக மாறினால்தான் உடல் தனது கழிவை நிதானமாக வெளியேற்றும். கழிவின் வடிவத்தை மாற்றும் ஆற்றல் உடலுக்குக் கிடைக்கும்.
இரண்டாம் படியாக உடலுக்கு அதிகபட்ச ஓய்வளிப்பது. முடிந்தவரை இரவில் சீக்கிரம் படுப்பதன் மூலம் உடலின் வெப்பத்தைச் சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும். உடலின் வெப்பம் – குளிர்ச்சி சமநிலையிலிருந்தால்தான் ஹைப்போதாலமஸ் – பிட்யூட்ரி சுரப்புகள் தமது சுரப்பிகளைச் சீராகச் சுரக்கவைத்து உடலியக்கத்தை முறைப்படுத்த முடியும்.
மன அழுத்தத்தால் உடலின் செல்களில் ஏற்படும் ரசாயன மாற்றம் சுரப்புகளின் இயக்கங்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தடுமாற்றம்தான் எண்டோகிரைன் போன்ற முதன்மைச் சுரப்புகளில் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தி, தைராய்டைக் கூடுதல் - குறைவாகச் சுரக்கச் செய்துவிடுகிறது. அதைக் கட்டுப்படுத்த அளிக்கப்படும் மாத்திரைகள் தைராய்டின் சராசரி அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.
ஆனால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியே வேறு பல விளைவுகளையும் பெண்ணுடலில் ஏற்படுத்தி விடுகிறது.
உதிரப்போக்கைச் சீராக்குவதற்காக ஒவ்வொருவரும் தன்னளவில் செய்ய வேண்டியதையும், பொதுவில் புரிந்துகொள்ள வேண்டியதையும் தொடர்ந்து பார்க்கலாம்.
(தொடரும்...)
கட்டுரையாளர்,
உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com