Published : 06 Jun 2015 12:42 PM
Last Updated : 06 Jun 2015 12:42 PM

‘மேகி மட்டும்தான் குற்றவாளியா? - மருத்துவர் கு. சிவராமன்

மேகி தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணமாகக் கூறப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் பற்றி பிரபல எழுத்தாளரும் மருத்துவருமான கு. சிவராமன் என்ன சொல்கிறார்?:

ஓர் உணவுப் பொருளில் சுவை என்பது இயல்பாக வரவேண்டும். இயற்கையாகச் சில உணவுப் பொருட் களைச் சேர்க்கும்போது உருவாகும் சுவையைத் தாண்டி கூடுதலாகச் சுவையூட்டுவதற்கு, மருத்துவ, உணவியல் அடிப்படையில் நமது பாரம்பரியத்தில் சுவைகள் கூட்டப்பட்டன. ஏலக்காய், வெல்லம், எலுமிச்சை போன்ற சுவையூட்டிகளின் குணமறிந்து சேர்க்கப்பட்டன.

அடிப்படையே தவறு

இந்தப் புரிதலும் அக்கறையும் தூக்கியெறியப்பட்ட உணவுப் பொருள் பெருவணிகத்தில், வலிந்து சுவையைக் கூட்டும்போது, எந்தப் பொருட்களின் அடிப்படையில் அந்தச் சுவை கூட்டப்பட்டது என்பதை அறிய முடிவதில்லை. இப்படி வலிந்து சுவையூட்டுவது அடிப்படையிலேயே தவறு என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாகவும், அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும் விற்பனையாகும் மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற செயற்கை சுவையூட்டியின் தயாரிப்பு முறை தெளிவற்றதாக இருக்கிறது. தாவரப் பொருட்களில் இருந்து குளூட்டமிக் அமிலம் கிடைப்பதாகக் கூறப்பட்டாலும், காப்புரிமை சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் தயாரிப்பு முறை ரகசியம் காக்கப்படுகிறது. அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியாது.

அடிமைப்படுத்தும்

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் உள்ளிட்ட உடனடி உணவுப் பொருட்களில் அமிலத்தன்மை வாய்ந்த இந்த உப்பு சேர்க்கப்படுகிறது. அதனால் வயிற்றுப் புண், அல்சர் போன்ற இரைப்பை சார்ந்த பிரச்சினைகளைச் சாதாரணமாக இது ஏற்படுத்தலாம். இந்த உப்பு ஒருவித அடிமைத்தன்மையை உருவாக்கக்கூடியது. இந்த உப்புச்சுவையை உணர்ந்தவர்களுக்கு, மற்ற உணவு வகைகளின் மீதான நாட்டம் குறையும். டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான ‘தி டேஸ்ட் தட் கில்’ என்ற புத்தகத்தில், மோனோ சோடியம் குளூட்டமேட் மூளையின் ஹைப்போ தலாமஸ்வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும், வயிற்றுவலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பதுவரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேகி மட்டுமல்ல

அதேநேரம் தடை செய்யப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மட்டுமல்ல, வேறு பல உடனடி நூடுல்ஸ் வகைகள், ஹோட்டல்-ரோட்டு கடைகளில் விற்கப்படும் சீன, தந்தூரி உணவு வகைகள், சிக்கன், பனீர், கடாய் உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படுகிறது.

திருமண வீடுகள், விசேஷங்களுக்குச் சமைக்கும்போதும் சாம்பார், ரசத்தில்கூட இதைக் கலந்துவிடுகிறார்கள். பர்கர், ரொட்டி, கோழி வறுவல் உள்ளிட்ட பிரபலப் பன்னாட்டு ஹோட்டல் சங்கிலித்தொடர் கடைகளில் பரிமாறப்படும் உணவு வகைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஒருவித தனிச்சுவை கிடைக்கிறது.

மேகி நூடுல்ஸை தடை செய்வதில் காட்டும் அக்கறையை, மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்பட்ட அனைத்து உணவு வகைகளைத் தடை செய்வதிலும் அரசு காட்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

- ஆதி



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x