

எனக்கு சில நாட்களாகத் தலைச்சுற்றலும் காதில் சத்தமும் கேட்கிறது. இந்த நோய்க்கு என்ன பெயர்? இதற்குத் தீர்வு என்ன?
- சீதாலட்சுமி, புதுக்கடை
உங்களுக்கு Vertigo என்ற நோய் வந்திருப்பதால், இந்த அறிகுறிகள் தோன்றியிருக்கலாம். Verto என்ற லத்தீன் சொல்லுக்குக் கிறக்கம், சுற்றுதல், சுழலுதல் என்று அர்த்தம். இந்த நோய் தாக்கிய நிலையில், நோயாளியின் அகச்செவி மண்டலத்தின் சீர்கேடு காரணமாகத் தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் எல்லாம் ஒரு சக்கரம் போலச் சுழல்வதாக உணர்வார். வாந்திவரும் உணர்வும், நடப்பதில் தள்ளாட்டமும் இருக்கும். நிற்பதிலும் சிரமம் ஏற்படலாம்.
தன்மைகள், காரணங்கள்
முதல் நிலையில் நோயாளி தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் எல்லாம் சுழல்வதாகக் கூறுவார். இரண்டாவது நிலையில், தானே சுற்றுவதாக உணருவார். தலையும் சேர்ந்து சுற்றுவதாக உணர்வார்.
Dizziness, Vertigo என்ற நோய் அறிகுறிகள் 20 முதல் 30 சதவீத மக்களைப் பாதித்திருக்கின்றன. இது எல்லா வயதினரிடமும் காணப்படுகிறது. பெண்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. சிலருக்குத் திடீர் அசைவுகள் மூலம் தலைச்சுற்றல் ஏற்படலாம். Meniere's disease என்ற நோயாலும், உள்காது நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிகமாக மதுபானம் அருந்துவதாலும் இது வரலாம்.
உள்காது நரம்பு மண்டலத்தால் வரும் தலைச்சுற்றல் அல்லது பிரமத்தை Peripheral vertigo என்று அழைப்போம். உள்காதில் வட்ட வடிவத்தில் கால்வாய் போன்ற பாதைகள் உள்ளன. இது ஒரு சிறு குகை போன்று காணப்படும். இங்கிருந்து 8-வது நரம்பு வருகிறது. இதில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வரும் தலைச்சுற்றலை peripheral தலைச்சுற்று என்று அழைப்போம்.
திடீரென்று சில அசைவுகளின் காரணமாகவும் இது வரலாம். Meniere's disease இதன் காரணமாக வருவதுதான். மிகக் கடுமையான ஜலதோஷத்திலிருந்து விடுபட்டவருக்கு, இந்தத் தலைச்சுற்றல் வரலாம். சில மருந்துகள், தலையில் அடி, பிரயாணம் போன்றவை இதற்குக் காரணமாகின்றன. இவர்களுக்குத் தள்ளாட்டம், வாந்தி எடுக்கும் உணர்வு, செவித்திறன் குறைவு, காதில் அடைப்பு, முழக்கம், வலி போன்றவை காணப்படலாம். சிலருக்கு முகத்திலும் பலவீனம் தெரியும்.
விளைவுகள் என்னென்ன?
Central vertigo என்பது, நரம்பு மண்டலத்தில் brainstem, சிறுமூளை பாதிக்கப்படுவதால் வருவது. இவர்களுக்குப் பேச்சு குழறுதல், இரண்டு இரண்டாகத் தெரிதல், கண் அசைதல், நடப்பதில் தள்ளாட்டம், நேர்கோட்டில் நடப்பதில் சிரமம், ஒரு இடத்தில் நிற்பதற்கு இயலாமை போன்ற பிரச்சினைகள் காணப்படும். பக்கவாதம், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டக் குறைவு, மூளையில் கட்டிகள், ரத்த ஓட்டக் கசிவு, சிறுமூளைக் கட்டிகள், காக்காய் வலிப்பு, கழுத்தெலும்பு கட்டிகள், தண்டுவட நோய்கள், கழுத்தெலும்பு தேய்மானம், தலைவலி, Multiple sclerosis, Parkinson போன்ற நோய்களாலும் இதுபோன்ற அறிகுறிகள் வருவது உண்டு.
நிற்க இயலாமை, கீழே விழுதல், நடப்பதில் தள்ளாட்டம் போன்றவை முக்கிய அறிகுறிகள். ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தையும் இது பாதிக்கும். பார்வை மங்குதல், பேச்சில் தடுமாற்றம், காது கேளாமை போன்றவை வாழ்க்கைத் தரத்தை நிச்சயமாகப் பாதிக்கக்கூடியவையே. சிலருக்குச் சில விநாடிகள், சில நிமிடங்களே இந்தப் பிரச்சினைகள் காணப்படலாம்.
பரிசோதனைகள்
உள்காது பிரச்சினை உள்ளவர்கள் பிரயாணம் செய்தால் தலைச்சுற்றல், வாந்தி வந்துவிடும். இதற்கு Motion sickness என்று பெயர். கண் இருளுதல், மயங்குதல் என்ற syncope, மனம் சார்ந்த மூச்சுமுட்டும் நிலையாகிய hyper ventilation போன்றவை உள்ளதா என்று பார்க்க வேண்டும். MRI பரிசோதனைகள், செவித்திறன் பரிசோதனைகள், பேச்சாற்றலைக் கண்டுபிடித்தல் போன்ற பரிசோதனைகள் எல்லாம் இதற்கு வந்துள்ளன. சிலருக்குத் தலைச்சுற்றும்போது, கால்சியம் கார்பனேட்டின் அழுக்குகள் உடைந்து காதில் படிகிறது.
சிலருக்குத் தலைச்சுற்றலுடன் தலைவலியும் சேர்ந்துவரும். Trigeminal nerve என்ற 5-வது நரம்பு இதில் பாதிக்கப்படும். Meniere's disease மிகவும் அதிகமாகக் காணப்படுவது. Endolymphatic திரவம் காதில் அதிகமாவதால் இது வருவதாக நம்பப்படுகிறது. இது அடிக்கடி வரும், திடீரென்று வரும், தலைச்சுற்றல் வரும், காதில் முழக்கம் அதிகமாகக் கேட்கும். காது நிறைந்தது போன்று இருக்கும்.
நடக்க முடியாது. செவித்திறன் சிறிது சிறிதாகக் குறையும். நோய் அதிகரிக்கச் அதிகரிக்க செவித்திறன் படிப்படியாகக் குறையும். சில நேரங்களில் Viral infection ஏற்பட்டு உள்காது நரம்பு பாதிக்கப்படலாம். காரணங்களை முதலில் கண்டறிய வேண்டும். உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் இதற்கு வந்துள்ளன.
தீவிரத்தைக் குறைக்கும் முறைகள்
ஆயுர்வேதத்தில் வாதபித்தங்களைச் சார்ந்து இந்நோய் வருவதாக நம்பப்படுகிறது. காது வாதத்தின் இருப்பிடம். இங்கு ஆகாயத்தின் வெற்றிடம் உள்ளது. இங்கு வாதபித்தமும், ரஜோ குணமும் அதிகரிக்கும்போது தலைச்சுற்றல் ஏற்படுகிறது. வாதபித்தத்தைத் தணிக்கிற இனிப்பு குணம் உடைய, நெய்ப்புத் தன்மையுடைய மருந்துகளைக் கொடுப்பது சிறந்தது.
பால்முதப்பன் கிழங்கால் காய்ச்சப்பட்ட விதார்யாதி கஷாயம் இதற்குச் சிறந்தது. திராட்சாதி குடிநீர், நன்னாரி, வெண்தாமரை குடிநீர் போன்றவையும் சிறந்தவை.
க்ஷீரபலா 101 - 10 துளிக் கஷாயமாக ஆக்கி அருந்துவது நல்லது. பேரீச்சை லேகியம், நன்னாரி மணப்பாகு - காலை மற்றும் மாலை 1 ஸ்பூன் வீதம் சாப்பிடலாம். சிறிதாக மலத்தை இளக்கிக்கொள்வதும் சாலச் சிறந்தது. காதில் ஓட்டை ஒன்றும் இல்லாத காலகட்டத்தில் க்ஷீரபலா தைலத்தைச் சற்றுச் சூடாக்கி 2 அல்லது 3 துளிவிட்டுப் பஞ்சால் அடைத்து 3 நிமிடங்கள் வைத்திருக்கலாம்.
இந்திரியானாம் பிரஸாதனம் (புலன்களைத் தெளிவடையச் செய்வது) என்ற குணம் க்ஷீரபலாவுக்கு உண்டு. இவற்றையெல்லாம்விட மிக முக்கியமான மருந்து முசுமுசுக்கை. முசுமுசுக்கை கஷாயத்தில் க்ஷீரபலா, இஞ்சி வடகத்தையும் சேர்த்துச் சாப்பிட எப்படிப்பட்ட தலைச்சுற்றலும் சீராகும்.
கூடுதல் மருந்துகள்
இஞ்சி லேகியம், சீரகச் சூரணம் இதற்கு உன்னதமான மருந்தாகும். மல்லிச் சூரணம் என்று சித்த மருத்துவத்தில் உள்ளது. இதைச் சம்சர்க்கரசஞ்சீவினி சூரணம் என்பர். இதுவும் நல்லது. வாதபித்தத்தை தணிக்கிற எண்ணெய்களாகிய அதிமதுர எண்ணெய், க்ஷீரபலா எண்ணெய், வாதசினி எண்ணெய், நாராயண தைலம், கீழாநெல்லி தைலம், சீரகத் தைலம் போன்ற தைலங்களைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். ஆறுகாலாதி தைலமும் தலைக்கு நல்லது.
வெண்தாமரை பால் கஷாயம் மிகவும் உயர்ந்தது. இரவு உறங்கும் முன் சாரஸ்வதகிருதம், வாணி கிருதம், கல்யாணக கிருதம், மகா திக்தக கிருதம், நெல்லிக்காய் கிருதம், சந்தனாதி கிருதம் போன்ற கிருதங்களைச் சேர்த்துச் சாப்பிடலாம். மூக்கின் வழியாக மருந்துகளைச் செலுத்துகிற நஸ்யம் சிகிச்சையில், க்ஷீரபலா நஸ்யம் மிகவும் உயர்ந்தது. வில்வ இலைகளை மென்று சாப்பிட்டாலும் தலைச்சுற்றல் ஏற்படுவது குறையும்.
படுக்கையிலிருந்து எழும்போது கழுத்தைத் திடீரென்று திருப்பாமல், மெதுவாக அசைத்துத் திருப்பப் பழகிக்கொள்ள வேண்டும். குளியலறைக்குச் செல்லும்போதும், வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நடக்கும்போது மெதுவாக நடக்க வேண்டும். தரையில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டு மருந்துகள்
கசகசா, கொத்தமல்லி, பருத்தி விதை ஆகியவற்றை நன்றாக இடித்துப் பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், மயக்கம் குறையும்.
வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மட்டுப்படும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து அரைத்துச் சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணெயைக் காதில் சில துளிகள் விட்டுவந்தால் காது இரைச்சல் அகலும்.
நெல்லி வற்றல், சந்தனத்தூள், மல்லிவிதை மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அந்த நீரை அருந்திவந்தால் தலைசுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.
மல்லிவிதை 5 கிராம், நெல்லிமுள்ளி (உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகள்) 5 கிராம் ஆகியவற்றை இரவில் ஊறவைத்துக் காலையில் வடிகட்டி சர்க்கரை சேர்த்துப் பருகவும். கொத்தமல்லி சாறும் நல்லது. கொத்தமல்லி சாற்றுடன் தேன் அல்லது மோர் கலந்து குடிக்கலாம். எலுமிச்சை சாறு நல்லது.
பித்த ஆதிக்கத்தினால் உண்டாகும் தலைச்சுற்றலில், வாயில் கசப்பு / புளிப்பு ருசியும், புளித்த ஏப்பமும், வயிற்று உப்புசமும் ஏற்படலாம். கண்கள், உள்ளங்கை, கால்களில் எரிச்சலிருக்கும். தூக்கம் சரியாக வராது. இந்த வகை தலைச்சுற்றலுக்கு, கருமிளகு / வெள்ளை மிளகு அல்லது வெந்தயத்தைப் பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.
இஞ்சியைத் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி, சட்டியில் இட்டு வதக்கவும். நன்கு வதங்கியபின், அதனுடன் கொஞ்சம் தேனைச் சேர்த்து மேலும் வதக்கி, கொஞ்சம் நீரையும் சேர்த்து, சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினமும் 2-லிருந்து 3 வேளை குடித்துவந்தால் தலைச்சுற்றல் குறையும்.
அஜீரணத்தால் வரும் தலைச்சுற்றலுக்கு சுக்கு, மல்லிவிதை, சீரகம் போட்டுக் காய்ச்சிய சுடுநீரைக் குடிப்பது நல்லது.
உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002