ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு தேவை?

ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு தேவை?
Updated on
2 min read

| உலக ரத்தக் கொதிப்பு நாள் மே 17 |

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்னும் பழமொழியைச் சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். ஆனால், ``உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’’ என்றொரு பழமொழியும் இருக்கிறது. உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான்.

நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இது குறித்துச் சென்னையைச் சேர்ந்த உடல் மூப்பு கட்டுப்பாட்டு (Anti Aging) நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன் விளக்குகிறார்:

எங்கே இருக்கிறது?

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) கலந்திருக்கிறது. இது போதாதென்று ரெடிமேட் தோசை மாவு போன்றவற்றில் பேக்கிங் சோடாவைப் போடுகிறார்கள். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான பர்கர், பீட்ஸா போன்றவற்றிலும் அதிக உப்பைச் சேர்க்கிறார்கள். இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

மோனோ சோடியம் குளூட்டமேட், சோடியம் நைட்ரேட், சோடியம் சாக்கரின், சோடியம் பைகார்பனேட், சோடியம் பென்சாயேட் போன்றவை உப்பின் பல வகைகள். இதில் ஏதாவது ஒன்று, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலும் சாஸ்களிலும் நிரம்ப இருக்கிறது.

அதிக உப்பைக் கொண்ட வடாம், வத்தல், மோர் மிளகாய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அயோடின் கலந்த டேபிள் சால்ட்டைவிட, சாப்பாட்டில் கல் உப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது.

பிரச்சினைகள்

உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம்.

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். ஆனால், ஒவ்வொரு உணவிலும் நான்கு டீஸ்பூன் உப்பைக் கொட்டினால், அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.

மனிதன் ஆரோக்கியமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.

கட்டுப்படுத்தலாம்

பழங்கள், காய்கறிகளில் இயல்பிலேயே அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும்.

உப்பின் அதிகப்படியான பயன்பாடு, உடலுக்குப் பாதிப்பைத் தருவதைப் போன்றே, அயோடின் சத்து குறைபாட்டாலும் சில வகையான பாதிப்புகள் மனிதர் களுக்கு ஏற்படும். இதில் முக்கிய மானது, முன் கழுத்துக் கழலை நோய். புத்திக்கூர்மை இல்லாமல் மந்தமாக இருக்கும் நிலைக்கும், உடலில் போதுமான அளவுக்கு அயோடின் இல்லாததே காரணம்.

தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது, ஓட்டப் பயிற்சி, நீச்சல் போன்றவற்றைச் செய்வதன்மூலம் உடலில் உப்பு தங்காமல் பார்த்துக்கொள்ளலாம். வியர்வையின் மூலமாக உப்பு அதிகம் வெளியேறுகிறது. சிறுநீரகத்துக்கு வேலைப் பளுவும் குறைகிறது. இந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்தால், உடலில் உப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தலாம்.

கௌசல்யா நாதன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in