Published : 30 May 2015 02:29 PM
Last Updated : 30 May 2015 02:29 PM

ஆதிவாசி வைத்தியர்களின் பரம்பரை மருத்துவம்

கோவையிலிருந்து மேற்கே 28 கி.மீ. தொலைவில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் இருக்கிறது ஆனைக்கட்டி. அங்கிருந்து மன்னார்காடு செல்லும் சாலையில் 15 கி.மீ. பயணித்தால் வருவது கேரளத்தின் ஆதி, மட்டத்துக்காடு. இங்கு அமைந்துள்ள ஆதிவாசி பரம்பரை மருத்துவ நிலையத்துக்கு இருளர்கள், குறும்பர்கள், முதுவர்கள், மலசர்கள் என வெவ்வேறு ஆதிவாசி இனக்குழுக்களைச் சேர்ந்த பரம்பரை வைத்தியர்களை அழைத்துவந்து பயிற்சி கொடுக்கிறார்கள்.

பிறகு திருச்சூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, குருவாயூர், கோழிக்கோடு, கண்ணூர், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் என வெவ்வேறு ஊர்களுக்கு வைத்தியம் செய்ய அனுப்புகிறார்கள். இப்படி இதுவரை 38 வைத்தியர்கள் இங்கே வந்து பயிற்சி பெற்று, வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று வைத்தியம் பார்த்துவருவதாகக் கூறுகிறார் மையத்தின் பொறுப்பாளர் ஜேம்ஸ்.

முகாமிடும் வைத்தியர்கள்

"அட்டப்பாடி ஆதிவாசி டெவலப்மெண்ட் நிமித்தம் கேத்தலிக் சர்ச் நிர்வகிக்கும் ஒரு தன்னார்வ அமைப்பு எங்களோடது. அட்டப்பாடி பகுதியில் ஏராளமான ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பல்வேறு இன மலைமக்களின் கலாசார, பண்பாடு, வைத்திய முறைகள் உள்ளிட்ட விஷயங்களை மீட்டெடுப்பதோடு, அதில் பயன்பாட்டுக்கு ஏற்ற விஷயங்களை முறைப்படுத்தி, மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

நாங்க இங்கே வந்து 8 வருஷமாச்சு. 60 வருஷம் முன்பு இங்கே ஏராளமான மர வகைகளும் மூலிகைகளும் நிறைந்திருந்ததாகச் சொல்றாங்க. அவற்றைத் திரும்பவும் இங்கே உருவாக்க முயற்சிக்கிறோம். ஆதிவாசிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறோம். அந்த வகையில் அட்டப்பாடியில் ஆதிகாலம் முதல் புழக்கத்தில் இருந்துவரும் ஆதிவாசி பரம்பரை வைத்திய முறையை மீட்டெடுத்து, அனைத்து மக்களுக்கும் பயன்படும்படி செய்யும் முயற்சியையும் மேற்கொண்டோம்.

அதற்காகச் சுற்றுவட்டார ஆதிவாசி கிராமங்களில் உள்ள வைத்தியர்களுக்கு அழைப்புவிடுத்தோம். அவர்களுடைய வைத்தியத்தை இங்கேயே முகாமிட்டுச் செய்யச் சொல்லி, இடம்கொடுத்தோம். அவர்களுடைய வைத்தியத்தை முறைப்படுத்தி, வெளியாட்கள் பயன்பெறுமாறு செய்தோம். அப்படித்தான் இதுவரை 38 வைத்தியர்கள் இங்கே முகாமிட்டுவிட்டு வெளியூர் சென்றிருக்கிறார்கள். வெளியூர் செல்லாத நேரத்தில் இங்கேயே வைத்தியம் செய்கிறார்கள்!’ என்கிறார் ஜேம்ஸ்.

ஊர் ஊராய் வைத்தியம்

அங்கே முகாமிட்டு இருந்த சுண்ட வைத்தியர் என்பவரிடம் பேசியபோது, ‘‘எனக்கு 70 வயசாகுது. ஆனைவாய் மலை கிராமம்தான் என்னோட ஊரு. ஐம்பது மைலு, அறுபது மைலு ஊரு கடந்து, மலை கடந்து, காடு கடந்து, அட்டைக் கடிக்கு தப்பிச்சு நிறைய ஜனங்க எங்கிட்ட வந்து வைத்தியம் பார்த்திருக்காங்க. என் அப்பன், தாத்தன், அதுக்கும் முன்னால என் பாட்டன், முப்பாட்டன் எல்லாமே வைத்தியர்தான். என் மாமன் மகள்தான் முக்காலி பக்கத்துல கேன்சருக்கு மருந்து தர்ற வள்ளியம்மாள். என் தகப்பன் வைத்தியம், மந்திரம் கத்து கொடுத்துதான், அது பெரிய ஆள் ஆச்சு. அவளுடைய மகன் ரெவியும் வைத்தியர்தான்.

அதே வைத்தியத்தைத்தான் நானும் பார்க்கிறேன். கேன்சர், கபக்கட்டு, மஞ்சக் காமாலை, சுகர், கை-கால் குடைச்சல், மூட்டு வேதனை எல்லாத்துக்குமே என்கிட்ட மருந்து இருக்கு. நாங்களே காட்டுக்குள்ளே போய் மூலிகைகள பறிச்சுட்டு வந்து மருந்து தயாரிக்கிறோம். எங்ககிட்ட ஆயிரக்கணக்குல நோயாளிக வந்து மருந்து வாங்கிட்டுப் போயி, குணமாயிருக்கு. வெளியாட்களுக்கு அந்தந்த ஊர்லயே போய் வைத்தியம் பார்க்கிறதுதான் என்னோட வேலையே. டெல்லி, பம்பாய், கல்கத்தாகூடப் போயிருக்கேன்.

இங்கே வந்து 4 மாசத்துல 200 பேருக்கு மேல வைத்தியம் செஞ்சிருக்கேன். மஞ்சக் காமாலைக்கு மழைக் காலத்துல ஒரு மூலிகை தழை எடுத்துட்டு வந்து பொடியாக்கி, 15 நாள் கொடுப்போம். கேன்சருக்குன்னு ஒரு வேர் இருக்கு. அதைக் காய வச்சு பொடியாக்கி, பக்குவம் செஞ்சு, நோய் முத்தியிருக்கிறதுக்கு தகுந்தாப்ல தரணும். காரமடையில் ஒரு ஆள் கேன்சர்ல எந்திரிக்க முடியாம இருந்தது. அதுக்கு கார் போட்டு வந்து என்னைக் கூட்டீட்டு போனாங்க. நான் மருந்து கொடுத்த பின்னால, அவரையே கூட்டிட்டுவந்து மருந்து வாங்கிட்டுப் போறாங்க. ஆனா ஒண்ணு, எங்ககிட்ட வைத்தியம் செஞ்சிக்க வர்றவங்க சாராயம், கள்ளு, பிராந்தி குடிச்சிட்டு வரப் பிடாது!’’ என்று தெரிவித்தார்.

சுண்ட வைத்தியர் குறும்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மலைவாசி களின் பரம்பரை வைத்தியத்தைச் செய்கிறார். இவரைப்போல இருளர் இனத்தைச் சேர்ந்த 25 வைத்தியர்கள் இங்கே வந்து முகாமிட்டுச் செல்கின்றனர். இவர்கள் ஏழை எளியவர்களிடம் ரூ. 5, ரூ. 10 என்ற அளவிலேயே கட்டணம் பெற்றுக்கொள்கிறார்கள். வசதி படைத்த வர்கள் ரூ.500, ரூ.1000 கூடக் கொடுத்து செல்வது உண்டு. நோய் குணமான பின்பு அவர்களுடைய கவனிப்பே தனி என்கிறார் சுண்ட வைத்தியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x