Published : 16 May 2015 11:01 AM
Last Updated : 16 May 2015 11:01 AM

நலம் வாழ நூலகம் - ரத்த அழுத்தக் கட்டுப்பாடு பின்பற்ற 5 ஆலோசனைகள்

ரத்தக்கொதிப்பை அதாவது உயர் ரத்தஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இதயக் கோளாறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் சில பொதுவான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அது தொடர்பாக ‘இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும் ‘ நூல் தரும் ஆலோசனைகள்:

உப்பின் அளவு

டின்களில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைக் குறைப்பதே சோடியம் (உப்பு) எடுத்துக் கொள்வதைக் குறைப்பதற்கான சிறந்த வழி. ஆனால், இது மேலை நாட்டினருக்கு முழுமையாகப் பொருந்தும். இந்தியாவில் வீட்டில் தயாரிக்கப்படும் எல்லா உணவுப் பொருட்களிலும் சுவைக்காகச் சேர்க்கப்படும் உப்பின் அளவைக் குறைப்பதே நல்லது.

பொதுவாகச் சாதாரண உப்புக்கான மாற்று பொட்டாசியம் குளோரைடு. என்றாலும் இதைப் பயன் படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து விடுங்கள்.

வீட்டிலேயே ரத்த அழுத்தம்

மருத்துவரை அடுத்த முறை சந்திப்பதற்கு இடையிலான இடைவெளியில் வீட்டிலேயே ரத்த அழுத்தத்தை அளப்பதால் மருந்து நன்கு வேலை செய்கிறதா என்பதையும் பிரச்சினைகள் இருந்தால் முன்கூட்டியே அறியவும் முடியும். மருந்துக் கடைகளிலும் மருத்துவக் கருவிகள் விற்கும் கடைகளிலும் வீட்டிலேயே ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவியை வாங்கலாம். கூடுதல் யோசனை தேவைப்பட்டால் மருத்துவரைக் கலந்தாலோசிக்கலாம். உங்கள் கருவிகளில் பழுது ஏதும் இருக்கிறதா என ஆண்டுதோறும் சரி பார்க்க வேண்டும்.

துல்லிய அளவுக்கு

துல்லியமான ரத்த அழுத்த அளவீடுகளைப் பெறக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்பாகப் புகைப்பதையும் காஃபின் கலந்த பானங்கள் அருந்துவதையும் தவிர்ப்பது நல்லது. அத்துடன் சிறுநீர் கழித்த பின் 5 நிமிடங்கள் முதுகு சாய்ந்த நிலையில் ஓய்வெடுத்த பிறகு, ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது துல்லியமான அளவுகளைப் பெற உதவும்.

உடல் எடை

நீங்கள் அதிக உடல் எடை உள்ளவராக இருந்து 5 கிலோ எடை குறையும்போதுகூட, உங்கள் ரத்த அழுத்தம் குறையலாம். உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சியும் ஆரோக்கிய மான உணவும் எப்போதும் தேவை.

தினசரி உடற்பயிற்சி

வாரத்தில் 5 நாட்களுக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான (சுறுசுறுப்பான நடை போன்ற) உடற்பயிற்சி செய்வது ரத்த மிகை அழுத்தத்தைத் தடுக்கவும் கட்டுக்குள் வைக்கவும் உதவும். நீங்கள் அதிக வேலைப்பளு உள்ளவராக இருந்தால், தொடர்ந்து 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய இயலாதபோது 10 நிமிடங்கள் வீதம் நாள்தோறும் மூன்று வேளை என 30 நிமிட உடற்பயிற்சியைப் பூர்த்தி செய்யலாம்.

நன்றி: இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்,
மேயோ கிளினிக்,
வெளியீடு: அடையாளம்,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் 621310. தொலைபேசி: 04332 273444.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x