

நியூ கினியா பகுதியில் உள்ள கிட்டாவா தீவைச் சேர்ந்த மனிதர்களுக்கு ஏன் மாரடைப்பு வருவதில்லை?
அங்கே வசிக்கும் மக்களுக்கு நீரிழிவு கிடையாது. முடக்குவாதம் கிடையாது. நினைவிழப்பால் (டிமென்ஷியா), இதுவரை யாரும் அவதிப்பட்டதேயில்லை.
இவர்கள் கிழங்கு உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். கனிகள், தேங்காயை உண்கின்றனர். அவர்களது ஆரோக்கியத்துக்கு இது முக்கியக் காரணமாக இருக்கலாம்.
சரி, நியூ கினியாவைச் சேர்ந்த மக்களுக்கு எப்படி மரணம் நேர்கிறது?
தென்னை மரத்திலிருந்து விழுந்தோ, நீரில் மூழ்கியோ மரணத்தைத் தழுவுகின்றனர். நோய்த்தொற்றுகள், பிரசவ மரணங்களும் உண்டு. அரிதாக விபத்துகளும் கொலைகளும் மரணத்துக்குக் காரணமாக இருக்கின்றன. முதுமையும் காரணமாக இருக்கிறது.
ஒரு குழந்தையின் மூளை எப்படி வளர்ச்சியடைகிறது?
புத்தம் புதிதாக இந்த பூமியில் பிறக்கும் குழந்தையின் மூளை எதுவும் எழுதப்படாத சிலேட்டைப் போல, ஏதுமில்லாமல் இருக்கும். வளரும் மூளையில் ஒவ்வொரு அனுபவமாகப் பதியத் தொடங்கும்.
மூன்று வயதுக் குழந்தையின் மூளை பெரியவர்களின் மூளையைவிட இரண்டரை மடங்கு செயலூக்கத்துடன் திகழும். ஒரு குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி நரம்பிணைப்புகள் உருவாகிவிடும். அப்படி உருவாக்கப்பட்ட நரம்பு இணைப்புகள்தான், அக்குழந்தையின் மொத்த ஆயுளுக்கும் உதவி புரியும்.