

மைக்ரேன் தலைவலி, டென்ஷன் தலைவலி, கிளஸ்டர் தலைவலி ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களையும், தூண்டும் காரணங்களையும் பார்த்தோம். இவற்றைத் தவிர்த்துக் குறிப்பிட்ட சில காரணங்கள் அடிப்படையில் சில தலைவலிகள் ஏற்படலாம். அவை, காரணத் தலைவலிகள்:
1. ரத்தக் கொதிப்பு
தலைவலி உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் அதுபோலவே அவசரச் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு ரத்த அழுத்தம் அதிகமானாலும் தலைவலி வரக்கூடும். ஆகவே எந்த வயதினர் என்றாலும் தலைவலி இருந்தால், ரத்த அழுத்தம் சரி பார்க்கப்படவேண்டும்.
2.’சைனஸ்’ தலைவலிகள்
கன்னத்துக்கும் மூக்குக்கும் பின்புறம், கபாலத்தில் காற்று நிரம்பிய பொந்துகள் (Sinuses) உள்ளன. இவற்றிலிருந்து மூக்கின் சுவாசப் பாதைக்குச் சிறு துவாரங்கள் மூலம் சளி அல்லது மியூக்கஸ் என்னும் திரவம் சுரந்து வழிகிறது. அலர்ஜி, அழற்சி ஆகியவற்றால், இந்தத் துவாரங்கள் அடைபடும்போது, சைனஸ் பொந்துகளில் சளி சேர்ந்து ‘சைனஸைடிஸ்’ எனும் நோய் ஏற்படுகிறது. மூக்கடைப்பு, தும்மல், இருமல், கண்ணீர் வழிதல் ஆகியவற்றுடன் தலை பாரமும், வலியும் ஏற்படுகின்றன. நீராவி பிடித்தல், நோய்த் தொற்றுக்கு மருந்துகள், அலர்ஜிக்கான ஆண்டி ஹிஸ்டமின்கள் போன்றவையும் உதவக்கூடும்.
3. கழுத்தில் சுளுக்கு தசை விறைப்பு (Stiffness, Dystonia)
கழுத்து எலும்புகளின் தேய்மானம் ஸ்பாண்டலைடிஸ் போன்றவையும் பின் மண்டை வலி, முன்பக்க நெற்றிப் பொட்டுகளில் வலி என்று வரக்கூடும். இத்தலைவலிகளுக்குச் சமிக்ஞை, வாந்தி ஆகியவை இருக்காது. வலி நிவாரணிகள், பிஸியோதெரபி, கழுத்துக்குப் பட்டி போன்றவை உதவும். தலைக்குச் சிறிய தலையணை வைத்துப் படுக்க வேண்டும். படுத்துக்கொண்டு படித்தல், தொலைக்காட்சி பார்த்தல் ஆகிய வற்றைத் தவிர்க்க வேண்டும். கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள், நீண்ட நேரம் ஒரே நிலையில் கழுத்தை நிறுத்தி வைப்பதைத் தவிர்த்தல் நல்லது.
4. தலைக் காயங்களும் தலைவலிகளும் (Post Traumatic)
சாலை விபத்துகள், உயரத்திலிருந்து கீழே விழுதல் போன்றவற்றால் ஏற்படும் தலைக் காயங்கள் (Head Injuries) தலைவலியை உண்டாக்கலாம். முதல் ஏழு நாட்களுக்குள் ஏற்படும் தலைவலிகள் மூன்று மாதங்களுக்குள் தானாகவே சரியாகிவிடக்கூடும். அப்படி மறையாத தலைவலிகள் ‘நாட்பட்ட தலைவலி’ (Chronic Headache) வகையில் சேர்க்கப்படும். இவை டென்ஷன் தலைவலிகளைப் போலவே அமைகின்றன. இவ்வாறு வருகின்ற மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள், மனதில் தோன்றும் இறுக்கம் மற்றும் படபடப்பு, மறதி, மனக்குழப்பம் ஆகியவை அனைத்தும் மொத்தமாக ‘போஸ்ட் ட்ரமாடிக் ஸிண்ட்ரோம்‘ (தலைக் காயங்களால் ஏற்படும் விளைவு) என்று அழைக்கப்படுகின்றன.
5. உடலுறவுத் தலைவலி (Coital Headache)
உடலுறவுக்குப் பின் சிலருக்குத் தலைவலி ஏற்படக் கூடும். திடீரென்று வரக்கூடிய இத்தலைவலிகள், தாமாகவே சரியாகிவிடக் கூடியவை. இருந்தாலும், மூளையின் ரத்தக் குழாய்களில் வீக்கம், மூளையில் ரத்தக் கசிவு போன்றவையும் இம்மாதிரி திடீர்த் தலைவலிகளை ஏற்படுத்தக்கூடியவை; அதனால் இத்தலைவலிகளை மிகக் கவனத்துடன் அணுக வேண்டும்.
6. முகத்தில் வரக்கூடிய சில வலிகள்
டிரைஜெமினல் நரம்பு வலி, பற்கள் சார்ந்த வலிகள், முகத் தசைகளின் வலிகள், முகத்தில் நோய்த்தொற்று வலிகள் தலைவலியாகத் தோன்றக்கூடும். கவனமான பரிசோதனைகளால் இவற்றைப் பிரித்தறிய முடியும்!
‘அவசரச் சிகிச்சை' அளிக்கப்பட வேண்டிய தலைவலிகள்:
* மூளையில் ரத்தக் கசிவு திடீரென்று தோன்றும், ‘மின்னல் இடி’ போன்ற தலைவலிகள்.
* ஐம்பது வயதுக்கு மேல் வரும் திடீர் தலைவலிகள் (உ.ம்.) டெம்பொரல் தமனித் தலைவலி (Temporal Arteritis).
* மூளைக் காய்ச்சல் / மெனிஞ்சைடிஸ் நோய் தொற்று சார்ந்த தலைவலிகள்.
* மூளைக் கட்டிகள், நீர்க் கட்டிகள்
* மூளை ரத்தக் குழாய் பாதிப்பு.
தொடர்புக்கு: bhaskaran_jayaraman@yahoo.co.in