Published : 01 Apr 2014 11:33 AM
Last Updated : 01 Apr 2014 11:33 AM

தலைவலியைத் தெரிந்துகொள்வோம்

அஸ்வினுக்கு இருபத்து மூன்று வயது, சாஃப்ட்வேர் இன்ஜினியர். காரில் வீடு திரும்பும்போது, திடீரென்று இடது கண்ணின் ஓரம் மின்னலைப் போல் ‘ப்ளிச்’ சென்று வெளிச்சம் வெட்டியது. மின்மினிப் பூச்சிகள் பறப்பதைப் போல் ஒளித் துகள்கள் கண் முன் வட்டமிட்டன. காரை ஓரமாக நிறுத்தி, கண்களைச் சிறிது கசக்கிக்கொண்டான். ஒளிப்புள்ளிகள் சிறிது மறைந்ததுபோல் இருந்தது.

மீண்டும் அதே மின்னல், ஒளிப்புள்ளிகள் - தலையை ஆட்டி, கண்ணை மூடித் திறந்தான்; இந்த முறை ஒளித் துகள்கள் மறையவில்லை- இப்போது அவற்றின் வீச்சு அதிகமாக இருந்தது; மின்னலைப் போல! உடல் சிறிது வியர்த்தது, மூக்கில் அடைப்பு ஏற்பட்டு, கண்ணில் நீர் கசிந்தது - இடது கையில் ஏதோ பூச்சி ஊர்வதைப் போன்ற உணர்வு. எல்லாமே சில விநாடிகளில் தோன்றி மறைந்தன. கூடவே, இடது பக்க நெற்றிப் பொட்டிலும் இடது கண்ணின் பின்புறமும் லேசான வலி தொடங்கியது. ஒருவாறு சமாளித்து, காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்துசேர்ந்தான்.

மீண்டும் அதே மின்னல், ஒளிப்புள்ளிகள் - தலையை ஆட்டி, கண்ணை மூடித் திறந்தான்; இந்த முறை ஒளித் துகள்கள் மறையவில்லை- இப்போது அவற்றின் வீச்சு அதிகமாக இருந்தது; மின்னலைப் போல! உடல் சிறிது வியர்த்தது, மூக்கில் அடைப்பு ஏற்பட்டு, கண்ணில் நீர் கசிந்தது - இடது கையில் ஏதோ பூச்சி ஊர்வதைப் போன்ற உணர்வு. எல்லாமே சில விநாடிகளில் தோன்றி மறைந்தன. கூடவே, இடது பக்க நெற்றிப் பொட்டிலும் இடது கண்ணின் பின்புறமும் லேசான வலி தொடங்கியது. ஒருவாறு சமாளித்து, காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்துசேர்ந்தான்.

இப்போதும் தலை வலித்தது. வலி அதிகமாகி, ஒரு பக்கமாக இடிக்கத் தொடங்கியது. ஜன்னல் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது. சமையல் அறையில் இருந்து வரும் காபியின் மணம் வயிற்றைப் புரட்டியது. குமட்டலுடன், மதிய உணவு வயிற்றிலேயே தேங்கிக் கிடந்தது. அவன், ஒரு டவலைத் தலையில் இறுக்கிக் கட்டிக்கொண்டு, உறங்க முயற்சித்தான் முடியவில்லை!

ஒற்றைத் தலைவலி

நம்மில் பலருக்கு இது போன்ற அல்லது சிறிது வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். இது ‘ஒற்றைத் தலைவலி’ அல்லது மைக்ரேன் எனப்படும் பிரச்சினை மூளையின் நரம்பு செல்கள் அல்லது ரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களால் வருவது; முழுமையாக அறியப்படாதது!

பொதுவாக உலகில் எல்லோருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் தலைவலி வந்து போகிறது! ஆலோசனைக்காக மருத்துவரை அணுகும் முதல் மூன்று காரணங்களில் தலைவலியும் ஒன்று என்கிறது உலகச் சுகாதார நிறுவனம் (WHO).

18 வயது முதல் 65 வயது வரை 50% முதல் 75% பேருக்குத் தலைவலி வருகிறது. ஒற்றைத் தலைவலி (அ) மைக்ரேன், இறுக்கம் சார்ந்த தலைவலி (அ) ‘டென்ஷன்’ தலைவலி இவை இரண்டும் பரவலாகக் காணப்படும் தலைவலி வகைகள் (சுமார் 40%).

50 சதவிகிதத்துக்கும் அதிகமான தலைவலிகள், மருத்துவ ஆலோசனை இன்றி கைவைத்தியமாக, சுயசிகிச்சை முறையிலேயே மக்களால் அணுகப்படுகின்றன இது தவறானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. சிறப்பு மருத்துவர்களைத் தேடி வருபவர்களிலும், சுமார் 10% பேர், அதிக அளவில் தாங்களாகவே வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும், ‘நீண்ட நாட்களாய், தினமும் வருகின்ற தலைவலி’ (Chronic daily headache) நோயால் பீடிக்கப்படுகின்றனர். வலி நீக்க அவர்களாக உட்கொள்ளும் மருந்துகளே, நாளடைவில் அவர்களுக்குத் தலைவலியை உண்டாக்குகின்றன!

அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள், மன ஏற்ற இறக்கங்கள், பொதுவாழ்வின் சிக்கல்கள், மனித நேயமற்ற உறவுகள், உரிமைகள் போன்றவை ஏற்படுத்துகின்ற மனஇறுக்கமும், எப்போதும் அலைகின்ற மனதின் படபடப்பு நிலையும் டென்ஷன் தலைவலிக்குக் காரணங்களாகின்றன கணினி வேலை, கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சியின் தாக்கம், செல்போன் போன்றவை, டென்ஷன் தலைவலிகளை அதிகப்படுத்துகின்றன.

தலைவலிகளால் இழக்கப்படுகின்ற மனிதத் திறமைகளும், கால விரயமும் மனித மேம்பாட்டுக்கு மிகப் பெரிய தடைக் கற்களாய் உள்ளன. சரியான நேரத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையும், உரிய சிகிச்சையும் தலைவலியிலிருந்தும், அதனால் ஏற்படுகின்ற பல இழப்புகளிலிருந்தும் நம்மைக் காக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x