

சென்னையைச் சேர்ந்த நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலோர் தங்கள் நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பினாலும், உண்மை நிலை வேறாக இருப்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோய் தொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம், அபாட் நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
நீரிழிவு பரிசோதனையை வழக்கமாகச் செய்துகொள்ளாமலேயே, நூறு பேரில் 94 பேர் தங்களுடைய சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்புவதாக அந்த ஆய்வில் கூறியுள்ளனர். உண்மை நிலைமை அப்படி இல்லை. அதனால் நீரிழிவு நோய் மேலாண்மையில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று தெரியவந்துள்ளது.
உறுப்புகள் பாதிப்பு
கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக் கூடியது. அத்துடன் நீரிழிவு நோயாளியின் பொருளாதார நிலையையும், வேலைத்திறனையும்கூடப் பாதிக்கும்.
"ஒருவர் தனக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்த பிறகு, அதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். சர்க்கரை அளவை பொறுத்து நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு, மருத்துவர்களும் திட்டமிட வேண்டும்.
உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று உணர்வதாலேயே நீரிழிவின் அளவு கட்டுக்குள் இருப்பதாகப் பெரும்பாலான நோயாளிகள் நம்புகின்றனர். எடைக்குறைவு மற்றும் காயங்கள் சீக்கிரம் ஆறுவதைக் கொண்டு சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்" என்கிறார் மூத்த ஹார்மோன் இயல் மருத்துவரான உஷா ஸ்ரீராம்.
6.50 கோடி நோயாளிகள்
நாட்டில் ஏற்கெனவே 6.50 கோடி நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள். அத்துடன் நோயின் விளிம்பில் 7.70 கோடி பேர் இருக்கின்றனர் என்ற விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, மேற்கண்ட கண்டறிதல் முக்கியமானதாகிறது.
சரியான மருந்துகளை உட்கொள்வது, திட்டமிட்ட வாழ்க்கை முறை, முறையான ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் நீரிழிவைச் சிறப்பாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோயைச் சரியான வகையில் மக்கள் மேலாண்மை செய்யாமல் இருப்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
அதிகரிக்கும் ஆபத்து
இந்த ஆய்வு நாடு முழுவதும் எட்டு நகரங்களில் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாத 1,500 நோயாளிகளிடம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த ஆய்வில் தெரியவந்த முக்கிய விவரங்கள்:
99 சதவீதம் நோயாளிகள் சர்க்கரை அளவை கண்காணிப்பது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியம் என்று கருதுகின்றனர்.
34 சதவீதம் பேர் தாங்களாகவே மாத்திரைகளின் அளவை முடிவு செய்து, நீரிழிவு நோயை மேலாண்மை செய்கின்றனர்.
51 சதவீதம் பேர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்கின்றனர்.
64 சதவீதம் பேர் நீரிழிவு நோய் தொடர்பான பெரிய பாதிப்புகளில் (இதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் நரம்பு மண்டலம்) ஏதாவது ஒன்று இருப்பதாகக் கூறுகிறார்கள்
38 சதவீத நீரிழிவு நோயாளிகள் இரவு உணவுக்குப் பின்னர்க் குறைந்த ரத்தக் குளுக்கோஸ் (ஹைபோகிளைசிமியா) இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கவனத்தில் கொள்ளுங்கள்
சாப்பிடுவதற்கு முன்பு வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 70 முதல் 130 வரை இருக்கலாம். சாப்பாட்டுக்குப் பின்னர் இரண்டு மணி நேரத்தில் 180-க்குக் குறைவாக இருக்க வேண்டியது அவசியம்.