அறிவைப் பெருக்கும் வல்லாரை

அறிவைப் பெருக்கும் வல்லாரை
Updated on
1 min read

தாவரவியல் பெயர்: Centella asiatica

அடையாளம்:

வல்லாரை தரையோடு படர்ந்து வளரும் செடி வகை. இலைகள் தவளையின் காலை ஒத்திருக்கும். நீர்நிலைகளுக்கு அருகில் இந்தச் செடியை அதிகம் பார்க்கலாம்.

இனப்பெருக்கம்:

கிளைகளைக் கொண்டு இதை இனப்பெருக்கம் செய்யலாம். ஒரு வாரத்தில் புதிய கிளைகள் துளிர்த்துவிடும்.

வரலாற்றில்:

ஆசிய நாடுகளின் நீர்நிலைப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. ஆயுர்வேதம், ஆப்பிரிக்க, சீனப் பாரம்பரிய மருத்துவங் களில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கைமருத்துவம்:

இலங்கை சமையலில் சோறு குழம்புடன் சேர்த்து வல்லாரை சாப்பிடப்படுகிறது. அரைக்கப்பட்டுப் பானமாகவும் அருந்தப்படுகிறது. தெற்காசியச் சமையலில் சாலட், பானங்கள் செய்வதற்குப் புகழ்பெற்றது.

இதில் உள்ள ஏசியாடிகோசைட் தோல், கூந்தல், நகங்களைப் புனரமைக்கும். காசநோய்க்கு மருந்து, அறிவு வளர்ச்சிக்கு விருந்து. இதன் இலைகளைக் கீரையாகச் சமைத்து உண்டால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் வாய்ப்புண், பேதி, சீதபேதி, வீக்கம், காய்ச்சல், படை போன்ற பல்வேறு உடல் கோளாறுகளைக் குணப்படுத்த உதவும். இலை, தண்டு, வேர், விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன.

வல்லாரை இலைகளைப் பாலுடன் அரைத்துத் தினமும் 2 கிராம் அளவு வெறும் வயிற்றில் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், ஞாபகச் சக்தி, அறிவாற்றல், நோய் எதிர்ப்புத் திறன் பெருகும்.

வல்லாரை இலை, துளசி இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, மை போல அரைத்து, மிளகு அளவு மாத்திரைகளாகச் செய்து, நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்த வேண்டும். இது காய்ச்சல், சளி, இருமல், சிறுநீர் கட்டுதல், உடல் சூடு, தோலில் ஏற்படும் அரிப்பு முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

வல்லாரை இலையுடன் சம அளவு வெந்தயத்தைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டால் உடல் சூடு, கண் எரிச்சல், தலைவலி, உடல் அசதி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, பின் முதுகுவலி, இடுப்பு வலி போன்றவை குறையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in