

தாவரவியல் பெயர்:
Aloe barbadensis
அடையாளம்:
கற்றாழை ஒரு மீட்டர் உயரம்வரை வளரும். இதன் இலைகள் சோற்றுடன், அதாவது சதைப்பற்றுடன் காணப்படும். இலைகளின் ஓரங்களில் முட்கள் காணப்படும். இலைகள், வட்டமாக அடுக்கப்பட்டது போலிருக்கும். அக்டோபர் - ஜனவரி மாதங்களில் பூக்கும்.
இனப்பெருக்கம்:
வேர்களில் இருந்து முளைக்கும் தளிர் முனைகளைக் கொண்டே இதை இனப்பெருக்கம் செய்ய முடியும். நிலத்தின் அடியில் இருந்து முளைத்து வரும் தளிரைப் பெயர்த்து நட்டு வைத்தால், புதிதாக வளர்ந்துவிடும்.
வரலாற்றில்:
கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து கற்றாழை மருந்தாகப் பயன்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. பண்டைய எகிப்தில் அழியாத் தாவரம் என்று குறிப்பிடப்பட்ட கற்றாழை, எகிப்திய அரசர்களுக்குச் சவப்பெட்டி பரிசாக வைக்கப்பட்டது.
கைமருத்துவ பயன்பாடு:
கற்றாழையின் பால், மடல்சோறு, சாறு, வேர்ப்பகுதி ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன. கற்றாழை உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. செரிக்கும் தன்மைக்கு உதவும்.
அழகுசாதனப் பொருட்கள், மாற்று மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகத் தோலுக்குப் புத்துணர்வு அளிக்க, காயத்தைக் குணப்படுத்த, மென்மைப்படுத்த கற்றாழை பயன்படுகிறது. வேனல்கட்டி, பனிப் புண், உறைபனிக்கடி போன்றவற்றுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.
கற்றாழைச் சோற்றை நன்றாகக் கழுவித் துணியில் கட்ட வேண்டும். அதிலிருந்து வடியும் சாற்றில் பத்தில் ஒரு பங்கு படிகாரத்தைக் கரைக்க வேண்டும். இந்தச் சாற்றை ஒரு சொட்டு மட்டும் எடுத்துப் போட்டால் கண் எரிச்சல், சிவப்படைதல், கண் அருக்கல் போன்றவை நீங்கும்.
தீக்காயம், வெட்டுக்காயம் போன்றவற்றுக்கும் கற்றாழைச் சோற்றைப் பூசலாம்.