

மனதுக்கு வயது இல்லை என்னும் தலைப்பு எவ்வளவு பொருத்தமோ அந்தளவுக்கு பொருத்தம் கற்றலுக்கும் வயது இல்லை என்பதும்! இன்றைக்கு கல்லூரிக்கு செல்லும் மாணவர்களைப் பார்த்தும், பட்டங்கள் பெறுவோரைப் பார்த்தும் பெருமூச்சு விடும் மூத்த குடிமக்கள் பலர் உள்ளனர். குறிப்பாக, 30 ஆண்டுகளுக்கு முந்தைய சமூக - கலாச்சார - குடும்ப சூழ்நிலை, இள வயது திருமணம், போதுமான கல்வி நிறுவனங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கல்வி கற்க ஆசைப்பட்டும்
அது கிடைக்கப்பெறாத பெண்கள் அநேகம் பேர்.
ஆனால், எந்த வயதிலும் கற்கலாம். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். கடந்த பிப்ரவரியில் அழகப்பா பல்கலைக்கழத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முனைவர் (டாக்டர்) பட்டம் வென்ற பாண்டியனுக்கு வயது 80. கடந்த 2013-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆழ்வார் பாசுரங்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த அரவிந்தவள்ளிக்கு வயது 73. அதுபோல, 2012-ம் ஆண்டு மலேசியா செயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை நிர்வாகவியல் பட்டம் வென்ற த்ரிஷா மாரோஃப்க்கு வயது 66. இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பட்டம் படிக்காத மூத்த குடிமக்கள் மட்டும் அல்ல... பட்டம் படித்த மூத்த குடிமக்களும் படிக்கலாம். இவர்களுக்கு ஏராளமான படிப்புகள் இருக்கின்றன.
மூத்த குடிமக்களுக்கு மருத்துவம், சில பொறியியல் பட்டப் படிப்புகள் படிக்க மட்டுமே சாத்தியம் இல்லை. ஏனெனில், அவர்கள் படித்த காலகட்டத்தில் பிளஸ் 2 இருந்திருக்காது; ஒருவேளை இருந்திருந்தாலும் கணிதம், இயற்பியல், வேதியியல் இருந்திருக்காது. ஆனால், மூத்த குடிமக்கள் நேரடியாக மருத்துவம், பொறியியல் படிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவை சார்ந்த படிப்புகளைப் படிக்கலாம். உதாரணத்துக்கு மருத்துவமனை நிர்வாகம், பராமரிப்பு தொடர்பான படிப்புகள், பொறியியல் சார்ந்த
குறுகிய கால பட்டயப் படிப்புகள் போன்றவற்றை படிக்கலாம்.
அதேசமயம் மூத்த குடிமக்களுக்கு வணிகவியல், நிர்வாகவியல், நிதியியல் சார்ந்த படிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. மொழி தொடர்பான படிப்புகளை ஆயுள் முடிக்க படித்தாலும் தீராது. கணினி சார்ந்த அடிப்படை படிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. எனக்குத் தெரிந்து பொதுவாக மேற்படிப்பு படிக்க ஆசைப்படும் மூத்த குடிமக்கள் பலரும் கடமைக்கு பட்டம் பெற்றால் போதும் என்று திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் பட்டம் படிக்கின்றனர். ஆனால், அப்படி செய்யாமல் தனி வகுப்புகள் மூலம் பிளஸ் 2 முடித்துவிட்டு பட்டம் படித்தால் நல்ல அடித்தளம் கிடைக்கும். பட்டப் படிப்பில் வெறுமனே மனப்பாடம் செய்யாமல் பாடங்களை புரிந்துக்கொண்டு படிக்கலாம். இதன் மூலம் படிப்பின் மீதான ஆர்வம், சுவாரஸ்யம் பெருகும்.
சரி, இந்த வயதுக்கு மேல் படித்து என்ன ஆகப்போகிறது என்கிறீர்களா? நிறையவே இருக்கிறது, சொல்கிறேன். வாழ்க்கையில் சுவாரஸ்யத்தைக் கூட்டுங்கள்... வயது தானாகக் குறையும்!