

தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் உடலுக்குத் தீங்கை ஏற்படுத்துமா?
தாவர எண்ணெய்கள் அதிகபட்சக் கொதிநிலையை அடையும்போது, ஆல்டிஹைடு படிமங்களாக மாறுகின்றன. இந்தப் படிமங்கள் நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களைவிட மனித ஆரோக்கியத்துக்கு அதிகம் கேடு விளைவிப்பவை. தேங்காய் எண்ணெய் அதிகபட்சமாகக் கொதிக்கும்போதுகூட ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆல்டிஹைடு படிமங்களாக மாற்றம் அடைவதில்லை. எனவே, அதைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.
அக்குபஞ்சர் சிகிச்சை என்னென்ன பிரச்சினைகளுக்குப் பலனளிக்கும்?
புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளைச் சீர்செய்யும். ஒவ்வாமை, மன அழுத்தம், வாயுக்கோளாறு, தலைவலி, உயர் ரத்த அழுத்தம், கழுத்து, மூட்டு, முதுகு வலி ஆகியவற்றுக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை தீர்வளிக்கிறது. வாந்தியையும் சீர்செய்யும்.
வெள்ளரி தரும் ஆரோக்கிய பலன்கள் என்ன?
வெள்ளரியில் உள்ள ஃபிசெட்டின் என்ற பொருள் மூளை ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவும். வெள்ளரியைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் பல்வேறு புற்றுநோய்த் தாக்குதல்களிலிருந்து தடுத்துக்கொள்ள முடியும். ஆன்டி ஆக்சிடென்ட், அழற்சிக்கு எதிரான சத்துகளைக் கொண்டது. வெள்ளரியில் உள்ள விட்டமின் பி சத்து மன அழுத்தத்தைக் குறைக்கும். இதயச் சுவர்களின் ஆரோக்கியத்தையும், செரிமான மண்டலத்தையும் வெள்ளரிக் காய்கள் பாதுகாக்கின்றன.
நம் உடலில் எவ்வளவு பாக்டீரியாக்கள் உள்ளன?
நமது சருமத்தின் மேல் 1,000 பாக்டீரியா வகைகள் உள்ளன. அவற்றில் பத்து சதவீத பாக்டீரியா வகைகள், எல்லா மனிதர்களின் தோலிலும் பொதுவாக உள்ளவையே. நம் உடலில் துர்நாற்றம் ஏற்பட இவை முக்கியக் காரணம். இவற்றில் பெரும்பான்மையானவை ஆரோக்கியத்துக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காதவை. மாறாக, சில பாக்டீரியாக்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிப்பவையும்கூட.
குழந்தைகள் அதீத செயலூக்கத்துடன் இருப்பதற்குக் காரணம், அவர்கள் சாப்பிடும் சர்க்கரையா?
குழந்தைகள் அதீத உற்சாகத்துடன் இருப்பதற்கும், அவர்கள் சாப்பிடும் சர்க்கரைக்கும் எந்தத் தொடர்பும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனாலும், குழந்தைகள் சர்க்கரையை அதிகம் உட்கொள்ளக் கூடாது என்று பெரியவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். அது பொதுவான உடல்நலம் சார்ந்தது.