Last Updated : 08 Apr, 2014 12:59 PM

 

Published : 08 Apr 2014 12:59 PM
Last Updated : 08 Apr 2014 12:59 PM

குறட்டை: நோயா, நோயின் அறிகுறியா?

அரட்டைக் கச்சேரி நடக்கிற அறையில்கூடத் தூங்கிவிடலாம், ஒரு குறட்டை ஆசாமியுடன் தூங்குவது இயலாத காரியம் – எல்லாமே, நாமும் தூங்க ஆரம்பித்துக் குறட்டை விடும்வரைதான்.

பெரும்பாலான கல்யாண வீடுகளில் இந்தக் காட்சியைப் பார்க்கலாம். இரவு 11 அல்லது 12 மணிக்கு ஃபேன் இருக்கும் இடமாகப் படுத்துக்கொள்ளலாம் என்று தேடியலைந்து படுக்கும்போது, பக்கத்திலேயே ஒருவரோ, இருவரோ தூங்குவது மட்டுமில்லாமல், நமக்கு அதிருஷ்டமில்லாமல் போனால் குறட்டையையும் விட்டுக்கொண்டே தூங்குவார்கள்.

ஒருவரது குறட்டை குளவியின் ஓசையைப் போல என்றால், இருவர் சேர்ந்துவிட்டால் இரட்டை நாயனம். அதற்கும் மேல் என்பது மழைக்காலத்துக் குட்டையில் கூடியிருக்கும் தவளைகளின் கோஷ்டி கானம் போல ஆகிவிடும். ஆயுள் தண்டனையை விடக் கொடியது குறட்டையாளர்களின் கூட்டு.

ஏன் ஏற்படுகிறது?

தேவைக்கு மேல் உடல் எடை அதிகரிக்கும்போதும், வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும், குழந்தைகளுக்கு டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதாலும் உள்நாக்கு நீண்டு காற்று செல்லும் வழியைத் தடுப்பதாலும் குறட்டை ஏற்படுகிறது. எப்போதாவது குறட்டை விடுவதால் பிரச்சினை இல்லை – விடுகிறவர்களுக்கு மட்டும்!

என்ன பிரச்சினை?

என்ன பிரச்சினையா? (குறட்டை ஆசாமிக்குத் துணைவியாய் இருப்பவர்களைக் கேட்டால் தெரியும்). குறட்டைச் சத்தம் அந்த அறையில் - சில சமயங்களில் அந்த வீட்டில் - சில வேளைகளில் பக்கத்து ஃபிளாட்டிலேயே – யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும். குறட்டைவிடுவதால் அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது.

தங்களுக்குத் தூக்கக் குறைவு ஏற்படுகிறது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களாலேயே உணரவும் முடியாது. அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணைச் செருகும். ரத்தஅழுத்தம் அதிகரிக்கும். இதயத் தசைகள் விரிவடையும். சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் இது காரணமாக அமையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x