

அழகான தோற்றத்தை விரும்புவது மனித இயல்பு. இதற்கான பிளாஸ்டிக் சர்ஜரி என்ற மருத்துவ முறை பிரபலம். இதன் மூலம் உடலில் உள்ள பொருந்தாத மற்றும் அழகுக்குக் குந்தகம் விளைவிக்கும் உறுப்புகளைச் சீர் செய்வதுதான் பிளாஸ்டிக் சர்ஜரி.
பிறவிக் கோளாறுகள் தீர்க்க இச்சிகிச்சை பயன்படும். இதில் உதடு பிளவு, மார்பக அமைப்பு கோளாறு போன்றவை அறுவை சிகிச்சை மூலம் சீர்படுத்தப்படும்.
"உடலில் அதிகமாகச் சேர்ந்துள்ள கொழுப்பினால் உடல் பருமன் (obesity) ஏற்படுகிறது. அந்தந்த உடல் உறுப்புகளில் இருந்து லிப்போ சக் ஷன் முறை மூலம் கொழுப்பினை உறிஞ்சி எடுத்துவிடலாம். இந்தச் சிகிச்சையினால் வடு (scar) ஏற்படாது. இச்சிகிச்சைக்குச் சுமார் ஒரு சிட்டிங் மட்டுமே போதும். இச்சிகிச்சைக்குப் பின் ஒரு நாள் ஒய்வு எடுக்க வேண்டும். தொங்கும் வயிறு (pendulous abdomen) உள்ளவர்களுக்கு, லிப்போ சக் ஷன் மூலம் கொழுப்பை நீக்கிய பின் உபரி (extra) தோலை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும். இந்த வடுவும் மறைவாக இருக்கும். வெளிப் பார்வைக்குத் தெரியாது" என்கிறார் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் உறுப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாமுவேல் எபினேசர்.
இவை தவிர நீரழிவு நோய் புண்கள், தீக்காயத்தால் ஏற்படும் தழும்பு, ஆறாத புண் ஆகியவற்றையும் சீரமைக்கலாம். அடிபட்ட காயங்கள், நரம்பு நோயால் ஏற்படும் விரல் முடக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தலாம். மார்பகத்தைப் பெரிசுபடுத்துதல், சிறிதாக்குதல் ஆகியவற்றை வடு இல்லாமல் சீர்படுத்தலாம். இக்காயங்களினால் ஏற்படும் கழுத்து மற்றும் கை, கால்களில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி மீண்டும் இயல்பாக வேலை செய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உதவும் என்கிறார் அவர்.