மார்புச் சளிக்கு தூதுவளை

மார்புச் சளிக்கு தூதுவளை
Updated on
1 min read

மற்றொரு பெயர் : சிங்கவல்லி, அளர்க்கம்

தாவரவியல் பெயர்: Solanum trilobatum

அடையாளம்: சிறிய முட்களுடன் கூடிய கொடி வகை. பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். முன்பு வேலிகளில் அதிகம் வளர்ந்திருந்தது. கிளைகளைக் கொண்டு இந்தக் கொடியை இனப்பெருக்கம் செய்யலாம். தடிமனான கிளையாக இருந்தால் போதும்.

பொதுப் பயன்பாடு: இதன் இலைகள் கீரையாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலை, பூ, காய் போன்றவை மருத்துவக் குணம் கொண்டவை.

கைமருத்துவப் பயன்பாடு: இந்திய, தாய்லாந்து பாரம்பரிய மருத்துவங்களில் கைமருந்தாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைகளிலும் முட்கள் அதிகம் இருக்கும். பயன்படுத்துவதற்கு முன் முட்களை அகற்றிவிட வேண்டும்.

சளி, இருமல், மார்புச்சளியைக் குணப்படுத்தத் தூதுவளை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இலைகளை நிலக்காய்ச்சலில் காய வைத்துப் பொடியாக்கி மருந்து போலப் பயன்படுத்தலாம். தூதுவளை இலையைக் கஷாயம் வைத்து, 1 கிராம் திப்பிலி பொடி சேர்த்துச் சாப்பிட்டால் கோழை, சளி, காய்ச்சல் போன்றவை குணமடையும். தூதுவளையால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்க நெய் அல்லது பால் சேர்த்துக்கொள்ளலாம்.

- நேயா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in