

ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்ச சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இது கடந்த 10 ஆண்டு சராசரியின் அடிப்படையிலானது. அத்துடன் 2013-ல் சாலை விபத்துகளால் மட்டும் தமிழகத்தில் 15,563 பேர் பலியாகியுள்ளனர்.
அதேநேரம் இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் 111 சதவீத விபத்துகள் பதிவுசெய்யப் படுவதே இல்லை என்கிறது தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம். இந்தக் கணக்கெடுப்பை இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளலாம் என்கிறார் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக 'சேவ் லைஃப் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வரும் பியுஷ் திவாரி.
ஒன்று, தமிழகத்தில் சாலை விதிமீறல்கள் அதிகப்படியாக நிகழ்கின்றன. மற்றொன்று, தமிழகத் தில் சாலை விபத்துகள் நிகழும்போது, அதிகம் பதிவுசெய்யப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்ற உடனடியாக அவசர மருத்துவ உதவிச் சேவைக்கு (108) பொதுமக்கள் அழைக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. இதைத் தாண்டியும் முதலுதவி அதிகரித்தால், இன்னும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
எது முதலுதவி?
முதலுதவி என்பது அவசர உதவி கோரி அழைப்பது மட்டுமல்ல. எல்லோரும் முதலுதவி செய்ய முடியும். இதை மனதில் கொண்டு 'சேவ் லைஃப் ஃபவுண்டேஷன்' 1 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டியுள்ளது. தற்போது இந்தத் திட்டம் டெல்லி, மும்பை, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் இதை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சேவ் லைஃப் ஆப் (savelifeapp) என்ற தொழில்நுட்ப சேவையும் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
சேவ் லைஃப் ஃபவுண்டேஷனின் தன்னார்வத் தொண்டர்கள் விபத்துக்குள்ளானவர்களுக்கு முதலுதவி அளிக்க முறையான பயிற்சி பெற்றவர்கள். சாலை விபத்தில் சிக்கிய ஒருவர் அல்லது அதைக் காண்பவர் குறிப்பிட்ட ஹெல்ப் லைனை அழைக்கும்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் அந்த அழைப்பு வாய்ஸ் காலாக அனுப்பப்படும். தன்னால் உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு ஒருவரால் செல்ல முடியும் என்றால், ‘ஆம்’ என்று பதிலளிப்பார். முடியாது என்றால் ‘இல்லை’ எனச் சொல்லுவார். ’ஆம்’ என்றவர் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மருத்துவ சேவைக்கு வழிகோலுவார்.
’சேவ் லைஃப் ஆப்’ சேவை அறிமுகமானதும் வரைபடம் மூலம் பாதிக்கப்பட்டவர் உள்ள இடத்தைத் தன்னார்வத் தொண்டர் நேரடியாகக் கண்டறிந்து துரிதமாக உதவ முடியும்.
தன் கையே பிறருக்கும் உதவி
“விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளிக்கத் தேவை இரண்டு கைகள் மட்டுமே. இதை யார் வேண்டுமானாலும் பின்பற்ற முடியும்,” என்கிறார் பியுஷ்.
l முதலில், எங்கு காயம்பட்டு ரத்தம் வடிகிறதோ, அந்தப் பகுதியை அழுத்த வேண்டும். ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி. அடுத்து காயத்தின் மேல் பகுதியில் ஒரு சுத்தமான துணியைக்கொண்டு இறுக்கிக் கட்ட வேண்டும்.
l அடுத்ததாகக் கைகள், கால்களை மட்டும் பிடித்தபடி காயமடைந்த நபரைத் தூக்கும்போது அவருடைய முதுகெலும்பு மோசமாகப் பாதிக்கப்படலாம். அதனால் பின்கழுத்துப் பகுதியை ஸ்திரமாகத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, காயமடைந்த நபரைத் தூக்கிப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும்.
l மூன்றாவது, காயமடைந்த நபர் மயங்கிக் கிடந்தால் நாடித் துடிப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். இல்லையென்றால், உடனடியாக இரண்டு கைகளைக் கொண்டு மார்பகப் பகுதியை அழுத்த வேண்டும். ரத்தம் மூளைக்குப் பாய்ந்தால்தான் இதயம் இயங்கும்.
l நான்காவது, மிக முக்கியமானது. காயமடைந்த நபரின் உடலில் இரும்புக் கம்பி, கண்ணாடி போன்ற பொருள்கள் செருகியிருந்தால், அவற்றைத் தொடக் கூடாது. செருகியிருக்கும் பொருளைப் பிடுங்கி எடுத்தால், ரத்தப்போக்கை எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது. அதனால், முறையான மருத்துவ சிகிச்சை மூலமே அதை அப்புறப்படுத்த வேண்டும்.
“இந்த வழிகாட்டுதலைச் சரியாகப் பின்பற்றிப் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றாலே, உயிரைக் காப்பாற்றிவிட முடியும்” என்கிறார் பியுஷ்.