மனதுக்கு வயது இல்லை: ஆங்கில இலக்கியம்

மனதுக்கு வயது இல்லை: ஆங்கில இலக்கியம்
Updated on
1 min read

இளைஞர்களைவிட முதியவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். ஒரு விஷயத்தை எளிதில் புரிந்துகொண்டு விரைவில் கற்றுக்கொள்கின்றனர். கற்கும் ஆர்வம் அவர்களுக்குத் தூண்டுகோலாக இருப்பதே இதற்குக் காரணம். ஓய்வு பெற்றவர்கள் கற்றலுக்கு ஓய்வு கொடுத்து புதிய புதிய கல்வி முறையை கற்றுக்கொள்வதால் பணி வாய்ப்பு கிடைக்கும். வருவாய் ஈட்டி தலைநிமிர்ந்து நடைபோடலாம்.

அந்த காலத்தில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்த முதியவர்களுடன் போட்டி போட்டு ஆங்கிலத்தில் பேசச் சொன்னால், இக்கால பட்டதாரிகள் நிச்சயம் திணறுவார்கள். படிப்புக்கு வயது ஒரு பொருட்டல்ல. எனவே, வயதானவர்கள் படிக்க ஆசைப்பட்டால், தாராளமாக ஆங்கில இலக்கியம் எடுத்துப் படிக்கலாம். பெரியார், பாரதியார், பாரதிதாசன், சென்னை என எல்லா பல்கலைக்கழங்களிலும் ஆங்கில இலக்கியம் திறந்தவெளி, ரெகுலர் முறையில் கற்பிக்கப்படுகிறது.

ஆங்கில இலக்கியம் படிப்பதால் என்ன பயன்? உடனடி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உண்டு. உங்கள் வயது, அனுபவம், பொறுமை ஆகியவற்றுடன் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பும் இருந்தால், கல்வி நிறுவனங்கள் உடனடியாக பணி வாய்ப்பு அளிக்கின்றன. பி.ஏ. ஆங்கிலம் முடித்துவிட்டு பி.எட். படிப்பதன்மூலம் அதிக சம்பளத்துடன் கூடிய பணி வாய்ப்பை கல்வி நிறுவனங்களில் பெற முடியும்.

மகள், மருமகள் நடத்தும் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் உங்களது ஆங்கிலப் புலமை மூலம் அவர்களுக்கு உதவ முடியும். ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடத்தலாம். வீட்டில் இருந்தபடி மாணவ, மாணவியருக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லித் தரலாம். வயதான பெண்களும், ஆங்கில இலக்கியம் படிப்பதால், அவர்களாலும் தனித்து சுயமாக சம்பாதிக்க முடியும்.

ஆங்கில இலக்கியத்துடன், பிற நாட்டு மொழிகளையும் கற்றுத் தேர்பவர்களுக்கு கூடுதல் பணி வாய்ப்பு கிடைக்கும். ஜப்பான், பிரெஞ்ச், ஜெர்மன், சைனீஸ் ஆகிய வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளலாம்.

சர்வதேச அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு, பிற நாடுகளில் இருந்து வரும் முகவர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவதில் சிக்கல் உள்ளது. இதனால், மொழிபெயர்ப்பாளர்களை பகுதிநேர பணிக்கு அமர்த்திக் கொள்கின்றனர். எனேவ, பிற நாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்வதன்மூலம் ஓய்வு நேரங்களில், பகுதி நேரமாக பணியில் சேர வாய்ப்பு அதிகம் உள்ளது. சென்னையில் அலையன்ஸ் பிராஞ்சேஸ் அமைப்பில் பிரெஞ்ச், மேக்ஸ்மில்லர் பவனில் ஜெர்மன் ஆகிய மொழிகள் கற்றுக் கொடுக்கின்றனர்.

ஆங்கிலம் கற்றவர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியேகூட பணி செய்யலாம். இன்டர்நெட் மூலம் டேட்டா என்ட்ரி பணி செய்வதால், மாதந்தோறும் கணிசமாக சம்பாதிக்க முடியும். ஆங்கில மொழிக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டே இருப்பதால், வயதானவர்கள் தங்களது முதல் தேர்வாக ஆங்கில இலக்கியப் படிப்பை வைத்துக்கொள்ளலாம். வயதானவர்களின் பணி வாய்ப்புக்கு ஏற்ற மற்ற படிப்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in