

எனக்குக் கேட்கும் திறன் குறைவாக உள்ளது. குறிப்பாக எனது இடது காதைவிட, வலது காது குறைவாகவே கேட்கிறது. முன்பு அதிகச் சத்தம் மிகுந்த தொழிற்சாலைகளில் நான் வேலை பார்த்திருக்கிறேன். இப்பிரச்சினைக்கு அலோபதி மருத்துவ ஆலோசனை பெற்றபோது, எனது வலது காதில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு பலவீனமாக இருப்பதாகவும், இதற்கு மருந்து கிடையாது என்றும் கூறப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது? - சுரேஷ், மின்னஞ்சல்.
நகரமயமாக்கல் பெருகிவருவதன் காரணமாக, ஒலி மாசு மோசமடைந்து இயல்பாகவே எல்லோரது கேட்கும் திறனும் படிப்படியாகக் குறைந்து வருவதும், அது தொடர்பான அக்கறை நம்மிடம் பெரிதாக இல்லாதிருப்பதும் வேதனையான விஷயம்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்துப்போயிடுவோம் என்கிற மாதிரி, எல்லோருமே ஆம்புலன்ஸ் ஓட்டுவது போல சைரனை அடித்துக்கொண்டே சாலையில் செல்வது, உலகிலேயே நம்ம ஊரில் மட்டும்தான் நடக்கிறது. ஒலி மாசினால் உங்கள் கேட்கும் திறன் குறைவடைந்திருப்பது நரம்பு சார்ந்த பிரச்சினையாகவே இருக்கக்கூடும். நரம்பு பாதிக்கப்பட்டதால் ஒலிகளைக் கடத்தும் திறன் குறையும்பட்சத்தில், அதற்குத் தீர்வு தரும் மூலிகை மருந்துகளின் பயன் இதுவரை முழுமையாக ஆய்வு செய்து அறிவிக்கப்படவில்லை. காது, தலைப் பகுதியில் செய்யப்படும் வர்ம மருத்துவம் பயனளிக்கக் கூடும். தேர்ந்த வர்ம மருத்துவரை அணுகி ஆலோசியுங்கள்.
பிற காது நோய்களுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அளவுக்கு, காது கேட்கும் திறன் குறைவுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அதிகமில்லை. சளி, நீர் அடைப்பதால் ஏற்படும் கேட்கும் திறன் குறைவுக்குச் சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், படிப்படியாகக் காது, தொண்டைக் குழலில் தங்கியுள்ள நீர்த்திவலைகள் குறைந்து கேட்கும் திறன் சீராகும்.
மூக்கடைப்புடன் கூடிய செவித்திறன் குறைவுக்கு, சீந்தில் எனும் தாவரத் தண்டின் உலர்ந்த பொடியை உள்மருந்தாக அரை டீ ஸ்பூன் அளவு வெந்நீருடன் சேர்த்துச் சாப்பிடுகையில், கபம் குறைந்து கேட்கும் திறன் சரியாகும். மருத்துவ வாய்ப்புகள் இல்லாத நரம்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனும்பட்சத்தில், காது கேட்கும் கருவியின் உதவியை நாடுவதில் தயக்கம் வேண்டாம்.
இன்றளவும் காது கேட்க உதவும் கருவியை (ஹியரிங் எய்டு) பயன்படுத்துவதைச் சமூக அவமானமாகக் கருதும் நிலை வேதனையானது. கண் பார்வைக்கு உதவும் மூக்குக் கண்ணாடியை அழகாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம், காது கேட்க உதவும் கருவிக்கு வராதது ஏன் என உண்மையில் புரியவில்லை.
ஏளனப்படுத்துவார்கள் என்ற எண்ணத்திலேயே பலரும் அதைத் தவிர்ப்பது நம் ஊரில் மிக அதிகம். நவீனத் தொழில்நுட்பத்தில் மிகத் துல்லியமாய்க் கேட்கச் செய்யும் பல வகைக் கருவிகள் தற்போது கிடைக்கின்றன. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இந்தத் திறன் குறைவாக இருந்தால், அவர்களின் பேச்சுத் திறன், கல்வித் திறன் இரண்டுமே குறையும்.
எனக்குச் 54 வயதாகிறது. உயரம் 5.2 அடி, எடை 65 கிலோ. எனக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், பி.பி. போன்ற எதுவும் இல்லை. ஆனால், நான் ஒரு Poor eater. அதனால் டயட் இருப்பதும் சாத்தியமில்லை. என்னுடைய எடையைக் குறைக்க வேண்டும். எப்படிச் செய்வது?
சசிகலா, மின்னஞ்சல்
முதல் விஷயம், பட்டினி இருந்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். Poor eater என நீங்கள் குறிப்பிட்டு இருப்பது, உங்கள் எடை குறைப்புக்குச் சாதகமானதல்ல. சில நேரத்தில் வயோதிகத்தை நோக்கிய உங்கள் பயணத்தில், கால்சியம் முதலான சத்துக்குறைவைக் கொடுத்துவிடக்கூடும்.
தேர்ந்தெடுத்த, சரியான அளவிலான, அதிகப் பழங்கள் கீரைகள் கொண்ட லோ கிளைசிமிக் உணவுத் திட்டம் உங்களுக்கு வேண்டும். தினசரி நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் 45 நிமிடங்கள், கபாலபாதி பிராணாயாமம் 30 நிமிடம் செய்வது போன்றவை உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவும். குறிப்பிட்ட சில யோகாசனங்களை மூச்சுப் பயிற்சியுடன் இணைத்து, தற்போது Dynamic yoga எனக் கற்றுத்தருகிறார்கள். இவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். குடம்புளி எனும் கோகம் புளி பற்றி உங்களுக்குத் தெரியுமா? பொதுவாகக் கேரளத்தில் மீன்கறி சமைக்க, இந்தப் புளியைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தப் புளிதான் நாம் பண்டைக் காலத்தில் பயன்படுத்தியது என்று சொல்வோரும் உண்டு. இந்தப் புளியில் Hydroxy citrate என்ற சத்து உண்டு. உடல் எடையைக் குறைக்க இது உதவுவதாகப் பல ஆய்வுகள் சொன்னதால், இந்தக் குடம்புளிச் சத்து எடை குறைக்கும் பல மருந்துகளிலும், உணவு வகைகளிலும் பயன்படுகிறது. நீங்கள் இந்தப் புளியைக்கொண்டு சமைக்கலாம். அல்லது அது உள்ள மூலிகை மருந்துகளை மருத்துவ ஆலோசனைக்குப் பின் வாங்கிப் பயன்பெறலாம்.
வெந்தயம், பூண்டு, கொள்ளு, சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். திட உணவு வரிசையில் தினசரி தினை, ராகி, கம்பு, சோளம், வரகரிசி ஆகியவற்றில் ஒன்று இடம்பெறட்டும். இட்லி-தோசையாக, சோறாக, சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். இந்தத் தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைந்த அளவு சாப்பிட்டாலே பசியைப் போக்குவதுடன், அதிக ஊட்டமும் தரும் லோகிளைசிமிக் தன்மையுடைய உணவு வகைகள் இவை.
உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குத் தீர்வு
பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.
மின்னஞ்சல் : nalamvaazha@kslmedia.in
முகவரி : நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002