மனதுக்கு இல்லை வயது!- 16:04:14

மனதுக்கு இல்லை வயது!- 16:04:14

Published on

உடலில் நரம்பியல் அமைப்பு ஆரோக்கியமாக இருக்கவும், ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்கவும் பி-12 வைட்டமின் தேவை. மீன், ஆட்டு இறைச்சி, கோழி, முட்டை, பால் ஆகிய உணவுகளில் பி-12 வைட்டமின் அதிகம் உள்ளது. ஆனாலும், மேற்கண்ட உணவு வகைகளை மட்டும் முதியவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.

காய்கறி, தானியங்களில் ஃபோலிக் (Folic) அமிலம் அதிகம் உள்ளது. ஃபோலிக் அமிலத்தில் உள்ள வைட்டமின் பி, ரத்தசோகையைக் குறைக்கும். எனவே, காய்கறி மற்றும் வேக வைக்கப்பட்ட தானியங்களை தினமும் உண்ண வேண்டும்.

முதியோரின் முக்கிய பிரச்சினை எலும்பு தேய்மானம். பெரும்பாலான முதியோர் மூட்டு வலி, முதுகு எலும்பு வலி உள்ளிட்ட பிரச்சினைகளுடன் போராடுகின்றனர். எலும்புகள் பலமாக இருக்க உணவில் கால்சியம், வைட்டமின் டி சேர்க்கப்படவேண்டும்.

புற்றுநோய், நீரிழிவு நோய், மூட்டு வலி ஆகியவற்றில் இருந்து வைட்டமின் டி பாதுகாக்கும். கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால், தயிர் மற்றும் ப்ரோகோலி, காலிபிளவர் ஆகியவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. இளம் சூரியக் கதிர்களில் இருந்தும் வைட்டமின் டி பெறலாம். தவிர, முதியோருக்கு பொட்டாசியம் சத்து அவசியம் தேவை. இது எலும்பின் உறுதிக்கு உதவுவதுடன், செல் செயல்பாட்டுக்கும் ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகிறது. தவிர, கிட்னியில் கல் உண்டாகாமலும் தடுக்கிறது. வாழைப்பழம், பிளம்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோலுடன் சாப்பிடும்போது கூடுதலான பொட்டாசியம் சத்து பெறலாம்.

பொதுவாகவே முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் மக்னீசியம் சத்து கொண்ட உணவுகளை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மக்னீசியம் அதிகரிக்கச் செய்யும். இதயத்தையும் எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். காய்கறிகள், பழங்கள், தோல் நீக்காத முழு தானியங்களில் மக்னீசியம் அதிகம்.

எல்லாவற்றையும்விட ஜீரணத்துக்கும் மலச் சிக்கல் இல்லாமல் இருப்பதற்கும் முதியவர்களுக்கு நார்ச் சத்துள்ள உணவுகள் அவசியம். நார்ச் சத்துள்ள உணவுகள், தண்ணீரைத் தக்கவைத்து மலத்தை எளிதாக வெளியேறச் செய்கின்றன. ஒமேகா 3 என்கிற கொழுப்புச் சத்து ஒன்று உள்ளது. இது மீன்களில் அதிகம். இது முடக்குவாதத்தைத் தடுக்கும். தோல் சுருக்கங்களைக் குறைக்கும். சோயாபீன்ஸிலும் இந்த கொழுப்புச் சத்து உள்ளது.

முதியவர்கள் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக நாள் ஒன்றுக்கு நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். இனிப்பு, உப்பு, கொழுப்பு குறைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாகவே மேற்குறிப்பிட்ட அனைத்து வகை உணவுகளையும் இயன்றவரை மிதமான திரவ உணவாக எடுத்துக்கொள்வது ஜீரணத்தை எளிமையாக்கும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in