

எனது தந்தைக்கு 84 வயது. 1995-ல் அவருக்குப் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. சமீபத்தில் சிறுநீர் கழிப்பது கஷ்டமாக இருப்பதாகவும், ரத்தம் வருவதாகவும், அடிக்கடி சிறுநீர் வருவது போலிருப்பதாகவும், சிறுநீர் குறைவாக வருவதாகவும் அவர் கூறினார்.
கடைசியில் அவருக்குப் பிளாடர் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. அவருடைய பிளாடரை அகற்ற முடியாது என்பதால் கீமோதெரபி அல்லது ரேடியோ தெரபி அடங்கிய சிஸ்டோஸ்கோபி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இந்தச் சிகிச்சைகளை அவரால் தாங்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சிகிச்சை அளிக்காவிட்டாலும் பிரச்சினை மோசமடையும் என்றனர். விரைவில் அவரது கெரட்டின் அளவும் கூடிவிடும் என்கிறார்கள்.
அவருடைய எடை இப்போது வெறும் 46 கிலோதான். அதிகம் சாப்பிடுவதும் இல்லை. அவருக்குச் சிஸ்டோஸ்கோபி செய்யலாமா? அப்படிச் செய்யாமல் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் கடும் வலியைக் குறைப்பதற்கு வேறு வழிகள் உள்ளனவா?
- ஆர்.கோவிந்தராஜன், மேற்கு மாம்பலம், சென்னை
வயோதிகம், நோயின் தற்போதைய தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, ஒருங்கிணைந்த சிகிச்சையை மேற்கொள்வது உங்கள் தந்தைக்கு வலியில்லாத நலவாழ்வைத் தரும் என்றே தோன்றுகிறது.
புற்றுநோய் வலியின் தீவிரத்தைக் குறைக்கும் Palliative care medication-ஐ அதற்கான சிறப்பு மருத்துவரிடம் ஆலோசித்துப் பெற்று, உங்கள் தந்தைக்குக் கொடுத்துவாருங்கள். அத்துடன் துணையாகப் புற்றின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டவும் உதவும் மூலிகை மருந்துகளையும் சேர்த்துக் கொடுப்பது சிறப்பாக இருக்கும். இது போன்ற integerative oncology முறைகள் வளர்ந்த நாடுகளில் அதிகப் பயன் தந்து வருகின்றன. அங்கு நவீன புற்றுநோய் சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவரும், பாரம்பரிய மருத்துவரும் இணைந்து இது போன்ற நிலைகளில் நோயாளிக்கு விரைவான- வலியில்லாத, முழுமையான சிகிச்சையை வழங்கிவருகின்றனர்.
இங்கு அப்படியான கட்டமைப்புகள் இன்னும் பெரிதாக வரவில்லை. தற்போதைக்குக் கூட்டு சிகிச்சையைத் தனித்தனியாக ஆலோசித்துப் பெறுவது நல்லது. வெள்ளைப்பூசணி, தக்காளிப் பழத்தோல், வெள்ளரி விதை, பிராக்கோலி, ஃபிளேக்ஸ் விதைகள், கிரீன் டீ, சிவந்த நிறமுள்ள பப்பாளி, மாதுளை முதலிய உணவுகளைத் தினசரிச் சாப்பிடச் சொல்லுங்கள்.
புற்று நோயின் வீரியத்தைக் குறைக்கப் பயன்படும் நம் ஊர் சித்த மூலிகைகளான வெண்கொடி வேலி, சிவனார் வேம்பு, வல்லாதகி முதலான மூலிகைகளைப் பற்றி உலகளவில் பல இடங்களில் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இவற்றை அடிப்படையாகக்கொண்ட பாரம்பரியச் சித்த மருந்துகளை உங்கள் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசித்துப் பெற்று, உங்கள் தந்தைக்குக் கொடுக்கலாம். இந்த வகையான கூட்டுசிகிச்சையால் உங்கள் தந்தையின் உடல்நிலையை நிச்சயம் மேம்படுத்த முடியும்.
எனது மனைவி மதிய உணவும், இரவு உணவும் சாப்பிட்ட பின்னர் உடனடியாக டாய்லெட் சென்றுவிடுகிறார். சில நேரம் அவருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது, இதற்குத் தீர்வு என்ன?
-டாக்டர் ராகவன், சென்னை
அநேகமாக உங்கள் துணைவியாருக்கு உள்ள தொல்லை Irritable bowel syndrome எனும் குடல்அழற்சி நோயாக இருக்கக்கூடும். இந்த நோய்க்கு உடலோடு மனமும் செம்மையாக்கப்பட வேண்டும். எந்தப் பணியையும் சீராக, குறித்த காலத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என்ற பரபரப்புடன் கூடிய மனப் பதற்றமே, இந்த நோய்க்கான முக்கியக் காரணம். அதிலும் அப்பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கப் பிறர் ஒத்துழைக்க மறுப்பார்களோ என்ற கவலையும் ஆழ்மனதில் இருக்கும் பட்சத்தில், இத்தொல்லை அதிகரிக்கும்.
மனம் ஆசுவாசப்படும்படியான தியானப் பயிற்சி மிக முக்கியமாக உங்கள் மனைவிக்குத் தேவை. தியானம் தொடங்குவதற்கு முந்தைய படியான மூச்சுப் பயிற்சி (பிராணாயாமத்தை) கற்றுக்கொண்டு, பின்னர் தியானப் பயிற்சிக்குச் செல்வது சிறப்பு. அடுத்தபடியாக உணவு மிக முக்கியமான விஷயம்.
இந்த நோய்க்கு உகந்த உணவு தனித்துவமானது. பெரும்பாலும் பொதுமைப்படுத்த முடியாதது. பலருக்கும் நார் அதிகமுள்ள பொருட்கள், காரமான உணவு வகைகள் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் கீரை, மிளகாய் வற்றல் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். தினசரி மோர் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். குடலின் புண்ணை ஆற்றுவதுடன் லாக்டோபசில்லஸை அளிக்கும் புரோபயாட்டிக்காகவும் மோர் செயல்படும்.
இந்த IBS நோய்க்கான சிறந்த மூலிகை ஓமம். ஓமக் கருக்கு குடிநீர் எனும் எளிய கஷாயம் தினசரி 30 மி.லி. அளவு சாப்பிடலாம். ஓமத்தை 2 ஸ்பூன் எடுத்து வாணலியில் வறுத்து, பின் ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான வெப்பத்தில் கொதிக்க வைத்து, இந்தக் கஷாயத்தைச் செய்யலாம்.
சித்த மருத்துவத்தில் இந்த நோய்க்கு மருந்துகள் உண்டு. சரியான உணவும், தியான யோகாசனப் பயிற்சியுடன், ஒரு சித்த மருத்துவரை அணுகி ஆலோசித்து மருந்துகளைப் பெற்றுப் பயன்பெறுங்கள்.
உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு
பிரபல மருத்துவரும், எழுத்தாளருமான கு.சிவராமன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்கப்படும்.
மின்னஞ்சல்:
nalamvaazha@kslmedia.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை,
சென்னை - 600 002