

மனிதனுக்குள் மண்டும் மனக் குழப்பம், மனப் பதற்றம், மனச் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றைப் பட்டியலிட்டால் வயது வேறுபாடின்றி அது மலையளவு இருக்கத்தான் செய்யும்.
அதில் மன அழுத்தம் தனி கவனம் செலுத்தப்பட வேண்டியது. அதனால் தான் உலக சுகாதார நிறுவனம் ‘மன அழுத்தம் - வெளிப்படையாகப் பேசுவோம்' (Depression: Let’s Talk) என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இப்படிப் பேசாமல் எல்லாவற்றையும் மனதுக்குள்ளயே பூட்டி வைத்திருந்தால், 2030-ம் ஆண்டுக்குப் பிறகு மனிதனின் இறப்புக்கு மன அழுத்தமே முதன்மையான காரணமாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதிலும் முக்கியமானது முதுமையில் வரும் மன அழுத்தம். உலக அளவில் முதுமையில் வரும் மன அழுத்தத்தால் சராசரியாக 15 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் அது 22 சதவீதத்துக்கும் அதிகம் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். முதியவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்களா அல்லது வந்திருக்கும் நோயால் அப்படி இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதில் பல குழப்பங்கள் இருக்கும். அதனால் அவர்களை நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.
மன அழுத்தத்துக்கான காரணங்கள்
இளம் வயதில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வந்திருக்கும் பல்வேறு நோய்களால், எடுத்துக்கொள்ளும் பல்வேறு மருந்துகளால், மூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டி ருப்பது, மது - போதை மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தியவர்கள், துயரமான வாழ்க்கை, நெருங்கிய உறவுகளின் இழப்பு, தனிமையான வாழ்க்கை, நாட்பட்ட நோயாளர்களை கவனித்துக்கொள்பவர்கள், உறக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், தனிமை போன்றவற்றால் மன அழுத்தம் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
இதைத் தவிர இயலாமை, தள்ளாமை, மற்றவர்களைச் சார்ந்த வாழ்க்கை, குடும்பத்திலோ சமூகத்திலோ தன்னை மதிக்காத நிலை போன்றவற்றாலும் முதுமையில் இருப்பவர் களுக்கு மன அழுத்தம் வருவதற்குச் சாத்தியமுண்டு.
மன அழுத்தத்தின் வகைகள்
சிறிய மன அழுத்தம் (Minor Depression): நோயாளியின் ஒத்துழைப்பு இருந்தால், விரைவில் முழுவதும் குணப்படுத்திவிடலாம்
பெரிய மன அழுத்தம் (Major Depression) : குணமான பின்னும் சரியான சூழல் அமையாவிட்டால், மீண்டும் பாதிக்கப்படுவது
நிரந்தரமான மன அழுத்தம் (Permanent Depression) : இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றாலும், மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் பல ஆண்டுகள்வரை மன அழுத்தத்திலேயே இருப்பார்கள்.
ரத்தக்குழாய் சார்ந்த மன அழுத்தம் (Vascular Depression): மூளைக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து மூளைச் செல்களும் ஹார்மோன்களும் பாதிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக இந்தப் பாதிப்பு வரும்.
மன அழுத்த அறிகுறிகள்:
தொடர்ந்து சோகமாக இருப்பது, குற்ற உணர்வு, தகுதியற்ற உணர்வு, அவநம்பிக்கை, பொழுதுபோக்கில் நாட்டமில்லாமல் இருப்பது, தூக்கமின்மையால் அதிகாலையே எழுந்து விடுவது அல்லது அளவுக்கு அதிகமாகத் தூங்குவது, பசி குறைவது, உடல் எடை குறைவது, அல்லது அதிகமாகச் சாப்பிட்டு உடல் எடை கூடுவது, நன்றாகச் சாப்பிட்டும் உடலில் ஆற்றல் இல்லாதது போல் உணர்வது, மிகுந்த களைப்பு, அடிக் கடி எழும் தற்கொலை எண்ணம், தற்கொலைக்கு முயற்ல்வது, மனப் பதற்றம், கவனமின்மை,
மறதி, எதிலும் முடிவு எடுக்க முடியாமை, தலைசுற்றல், நாட்பட்ட தலைவலி, உடல் வலி, மலச்சிக்கல், உடல் எடை குறைதல், உறக்கமின்மை, மறதி, அடிக்கடி வரும் கோபம் - எரிச்சல், இல்லாத நோய்களை இருப்பதாகக் கூறுதல்.
மேற்கண்ட அத்தனை அறிகுறிகளும் ஒருவருக்கு இருக்குமோ என மிரள வேண்டாம். இவற்றில் சில இருக்கலாம்.
நோய்களும் மன அழுத்தமும்
தொடர்ந்து தொல்லைகள் தரக்கூடிய பலவித உடல் நோய்களாலும் மன அழுத்தம் வரலாம். எடுத்துக்காட்டுக்கு... புற்றுநோய், இதய நோய், நாளமில்லாச் சுரப்பிக் கோளாறுகள் - குறிப்பாக, தைராய்டு சுரப்பு குறைதல் அல்லது அதிகமாதல், நரம்பியல் நோய்கள், நடுக்குவாதம், பக்கவாதம், மறதி நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு - குறிப்பாக வைட்டமின் பி 12.
மருந்துகளால் மன அழுத்தம்
தூக்க மாத்திரைகள், மனதை அமைதிப்படுத்தும் மருந்துகள், மனச்சிதைவு மருந்துகள், உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகள், பீட்டா பிளாக்கர்ஸ், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், ஸ்டீராய்டு, புற்றுநோய்க்கான மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் போன்றவை சில உதாரணங்கள்.
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் சாப்பிடும் அநேக மருந்துகள் மன அழுத்தத்தை உருவாக்கக் கூடியவைதான். அதனால்தான் மருந்துக் கடைகளில் நீங்களாகவே மருந்துகளை வாங்கவே கூடாது. சரியான மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றே மருந்து உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
மன அழுத்த சிகிச்சை
மன அழுத்தத்தை மருந்துகளால் வெல்ல முடியும். ஆனால், தொடக்க நிலையில் மன அழுத்தத்தைக் கண்டறிவது சற்றுக் கடினம். காரணம், பலரும் இதெல்லாம் முதுமையின் பிரச்சினை என்றே தவறாக நினைத்துக்கொள்வார்கள். அதனால் வயது அறுபதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஏற்கெனவே வந்திருக்கும் நோய்களுக்குத் தக்கபடி மன அழுத்தத்துக்கான மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலர் குணமான கொஞ்ச நாள்களில், பல காரணங்களால் மீண்டும் மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள்.
இவர்களுக்குத் தீவிரக் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு சிலருக்கு மருந்துகளால் குணமாவதும் இல்லை. இவர்களுக்குப் பலவித மருத்துவ சிகிச்சைகளை ஒருங்கிணைத்தோ மின்சிகிச்சையோ (ECT) அளிக்கலாம். மின்சிகிச்சை என்றவுடன் மிரள வேண்டியதில்லை. இதனால் தீய விளைவுகள் ஏதுமில்லை, பலன்களே அதிகம்.
மனோவலிமையின் அதிசயம் # மன அழுத்தத்துக்கான மருந்துகளைவிட, ஒருவரது மனோவலிமையை அதிகப்படுத்துவதே முக்கியத் தேவை. தன்னம்பிக்கை, தன்முனைப்பு, மகிழ்ச்சி, தாங்கிப் பிடிக்கும் ஊக்கத்துடன் கூடிய உரையாடல்கள் நிச்சயப் பலன்களைத் தரும் # முதியவர்களுக்குத் தகுந்த மரியாதை கொடுங்கள், வார்த்தையால் வதைக்காதீர்கள். ஏனென்றால் உலகில் ஆறில் ஒரு முதியவர் ஏதேனும் ஒரு விதத்தில் கொடுமைப்படுத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. # தனிமையில் வாட அனுமதிக்காதீர்கள். அவர்களைப் பல்வேறு நட்பு வட்டங்களுக்குள்ளும் சமுதாய நிகழ்வுகளிலும் பங்கேற்கச் செய்யுங்கள். சுற்றுலாத் தலங்களுக்கு அவ்வப்போது அழைத்துச் சென்று அகம் மகிழச் செய்யுங்கள், செலவுக்குக் கையில் பணம் கொடுங்கள். # யோகாசனம், பிராணாயாமம், தியானப் பயிற்சிகள் மனதை, உடலை, உணர்வைச் செம்மைப்படுத்த கைகொடுக்கும். |
கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com