

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பல்வேறு உடல் நோய்கள் மட்டுமல்ல, மனநோய்களும் காட்டு புதர்களைப் போல வளரும். அதிலும் முதுமையில் ஏற்கெனவே வந்திருக்கும் நோய் களால், இது சற்று தூக்கலாகவே இருக்கும். அதனால் உட்கொள்ளும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உணவுத் திட்டமானது ஏற்கெனவே வந்திருக்கும் நோய்களுக்கு ஏற்பவும் மன அழுத்தத்தைத் தீர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்கவும், ஏற்கெனவே இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களும் தினசரி உணவில் கீழ்க்காணும் அம்சங்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்:
# மூளையை வளப்படுத்தும் வைட்டமின் சி, பி 1, 6, 12, ஃபோலிக் அமிலம் கொண்ட உணவு வகைகள்
# வைட்டமின் பி 1 நிறைந்த கைகுத்தல் அரிசி, கோதுமை, திணை வகைகள்.
# வைட்டமின் பி 6 தாங்கிய இறைச்சி, பயறு வகைகள், கரும்பச்சை நிறக் கீரைகள், பீன்ஸ், சிறுதானியங்கள், நிலக்கடலை, பருப்பு வகைகள்.
# வைட்டமின் பி 12 நிறைந்த ஈரல் இறைச்சி, மத்தி, கெளுத்தி மீன், நண்டு, நாட்டுக்கோழி முட்டை, பால், பாதம், பாலாடைக்கட்டி, தேங்காய்ப் பால், முழுதானியங்கள்.
# வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை, முருங்கைக்கீரை.
# ஃபோலிக் அமிலம் தாங்கிய கரும்பச்சை நிறக் கீரைகள், பல வண்ணப் பழங்கள்,தானியங்கள்.
வைட்டமின்கள், கனிமச் சத்து அற்ற எந்த ஒரு உணவும் சக்கை உணவுதான் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்
கூடுதல் கவனம் தேவை
நாள்பட்ட நோய்களில் சிக்கித் தவிப்பவர்கள், தனிமையின் தகிப்பில் வாடுபவர்கள், கடன் சுமையில் இருப்பவர்கள், ஏழ்மை, போதைப் பொருள்கள் அல்லது மதுவைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், அடிக்கடி தற்கொலை பற்றிப் பேசுபவர்கள்.
மன அழுத்தம் முற்றிய நிலையில் இருப்பவர்களிடம், தற்கொலைக்கு முயலும் போக்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக, ஆண்களிடம். அதனால் அவர்களிடம் கவனமாகவும் கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
நிறைவாக, மன அழுத்த நோயைப் பெரும்பாலும் கணிப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் கவனக்குறைவு உள்ளது. எனவே, சுயவிழிப்புணர்வு நல்லது.
என்ன செய்யலாம்?
# உடல், நலனைக் கவனத்தில் கொள்ளும் மருத்துவரைத் தேர்ந்தெடுங்கள்
# மன அழுத்தத்தை அளவிடத் தகுந்த பரிசோதனை இல்லை
# எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் கூடுதல் கவனம் தேவை
# மன அழுத்தத்துக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன, தகுந்த மருத்துவரை நாடுங்கள்
# யோகா, மனதை சாந்தப்படுத்தும் அம்சங்கள் தேவை.
உணவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி. கசப்பை நாம் விரும்புவது இல்லை. அதேநேரம் அளவான கசப்பு உடலுக்கு மிகவும் நல்லது. அதைப் போலத்தான் வாழ்க்கையில் வரும் கசப்பும். அது மனதைப் பக்குவப்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என நினைத்துத் துயரப் படாமல், துயருடன் இருப்பவர்கள் பல கோடி, நாமும் அப்படி இருக்கக் கூடாது என்று நினைத்து துயரைத் தூரத் தள்ளுங்கள். மனதை ஆற்றுப்படுத்தி மகிழ்ச்சியாய் வாழுங்கள்.
| என்னென்ன பரிசோதனைகள் தேவை? # பொதுவான ரத்த பரிசோதனைகள் # குறிப்பாக, வைட்டமின்கள், தைராய்டு குறைபாடு போன்றவை # தேவைப்பட்டால் சி.டி.ஸ்கேன் # ஆண்டுக்கு ஒரு முறை மனநல மருத்துவர் ஆலோசனை. |
கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com