Last Updated : 13 Jul, 2019 10:41 AM

 

Published : 13 Jul 2019 10:41 AM
Last Updated : 13 Jul 2019 10:41 AM

சிகிச்சை டைரி 13: அறுவை சிகிச்சையைத் தவிர்த்த அனுபவசாலி மருத்துவர்

கடந்த பிப்ரவரியில் திருமண நாளை ஒட்டி என் அக்கா அவருடைய கணவர், இரண்டு குழந்தைகளுடன் ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தார். அங்கிருந்தபோது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயிலாப்பூரில் உள்ள மருத்துவமனையில் எமர்ஜென்ஸி வார்டில் அக்கா சேர்க்கப்பட்டார். மாரடைப்பு இல்லை என்பதைப் பரிசோதனைகள் உறுதிசெய்தன. எங்களுக்கும் நிம்மதி ஏற்பட்டது. சில மணி நேரம் மருத்துவ மனையிலிருந்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். வலி மட்டும் சிறிது நேரம் நீடித்தது.

நரக வேதனை கொடுத்த கை வலி

அடுத்த நாள் இரவு முழுவதும் கடுமையான கை வலியால் துடித்திருக்கிறார் என் அக்கா. மறுநாள் காலை மயிலாப்பூரில் உள்ள வேறொரு மருத்துவ மனையில் எலும்பியல் மருத்துவரைப் பார்க்க என் அக்காவும் மாமாவும் சென்றனர்.

மருத்துவரின் பரிந்துரைப்படி என் அக்காவை அதே மருத்துவமனையில் அட்மிட் செய்து எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். அன்று முழுவதும் என் அக்கா வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்தார்.

கையை லேசாக அசைத்தாலோ யாராவது தொட்டாலோ ஷாக் அடித்ததைப் போல் அலறினார். செவிலியர் கொடுத்த வலி நிவாரணி மாத்திரைகளால் எந்தப் பயனும் விளையவில்லை. கை வலி இவ்வளவு தீவிரமானதாகவும் இருக்க முடியும் என்பதே எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இரவில் வந்த மருத்துவர் என் மாமாவைத் தனியாக அழைத்தார். 20 நிமிடங்களுக்கு மேல் தனி அறையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பேசிவிட்டு வெளியே வந்த என் மாமா, அக்காவுக்கு முதுகுத் தண்டில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதையும் மிக விரைவில் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் கூறியதாகச் சொன்னார்.

மேலும், இந்த அறுவை சிகிச்சையை நரம்பியல் மருத்துவர்தான் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். நாங்கள் ஒப்புதல் அளித்துவிட்டால் அடுத்த நாள் அதிகாலையில் அறுவை சிகிச்சையை செய்துவிடலாம் என்றும் மருத்துவர் கூறியிருந்தார்.

நள்ளிரவில் வந்த நரம்பியல் மருத்துவர்

ஒரு மணி நேரத்துக்குள் நரம்பியல் மருத்துவர் வந்து என் அக்காவைப் பார்த்தார். எங்களிடம் அனைத்தையும் பொறுமை யாக விளக்கினார். “முதுகுத் தண்டின் மேல் பகுதியில் சதை வளர்ச்சி போன்ற பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதை நீக்க முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும்வரை வலி இருந்துகொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்துக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வலி மரத்துப் போய்விடும். அதன் அடுத்த கட்டமாக கை செயலிழந்துவிடும்” என்று எச்சரித்தார். இந்தப் பிரச்சினை எதனால் வந்தது என்று கேட்டபோது “டூவீலர் ஓட்டும்போது எசகுபிசகாகக் கழுத்தைத் திருப்பியதாலோ திடீரென்று ஏதாவது கனமான பொருளைத் தூக்கியதாலோ ஏற்பட்டிருக்கலாம்” என்றார். இதற்கிடையில் என் அக்காவும் கைவிரல்கள் மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னது எங்களது அச்சத்தை அதிகரித்தது.

இருந்தாலும், வேறொரு மருத்துவரின் கருத்தையும் (second opinion) தெரிந்துகொண்டு முடிவெடுக்கலாம் என்று அடுத்த நாள் காலைவரை தள்ளிப் போட்டோம்.

இரண்டாவது மருத்துவரின் பரிந்துரை

அடுத்த நாள் காலை நெருங்கிய உறவினர்கள் பலர் மருத்துவமனையில் கூடிவிட்டோம். அறுவைசிகிச்சை செய்வது பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். முதுகுத் தண்டில் அறுவைசிகிச்சை செய்வதன் பின் விளைவுகளைக் குறித்து எச்சரித்த சிலர் ‘மாற்று வழிகளைப் பரிசீலிக்கலாம்.

இவ்வளவு அவசரப்பட வேண்டாம்’ என்று கருதினர். இறுதியில் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்ற மனநிலையிலிருந்த ஒருவரே “நாம் இன்னொரு நரம்பியல் மருத்துவரின் கருத்தைக் கேட்டுவிடுவது நல்லது” என்றார். இதற்கு அனைவரும் உடன்பட்டோம்.

அந்த இன்னொரு நரம்பியல் மருத்துவர் யார் என்ற விவாதம் வந்தபோது என் அப்பாவுக்கு நரம்பியல் சிகிச்சைகளை அளித்துவந்த முதிய மருத்துவரை நாடலாம் என்று கருதினோம். அந்த மருத்துவர் திறமையானவர், பழுத்த அனுபவம் கொண்டவர் அதேநேரம் கடுமையானவர். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “மூன்று மணிக்கு கிளினிக் வந்துவிடுங்கள்” என்று அவர் சொல்லிவிட்டார்.

ஆம்புலன்ஸில் வந்தவர் நடந்து சென்றார்

சாதாரண வண்டியில் சென்றால் ஆபத்து என்று கருதி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தோம். கிளீனிக்கில் மருத்துவரின் அறைக்குள் மூன்று-நான்கு பேர் நுழைந்துவிட்டோம். “பேஷண்ட், அவங்களோட ஹஸ்பண்ட தவிர எல்லாரும் வெளிய வெயிட் பண்ணுங்க” என்று கறாரான குரலில் சொல்லிவிட்டார்.

சில நிமிடங்களில் வெளியே வந்த என் மாமா, “அறுவை சிகிச்சை வேண்டாம். ஃபிசியோதெரப்பி மூலமாகவே சரி செய்துவிடலாம்” என்று மருத்துவர் சொன்னதாகச் சொன்னபோது, எங்களால் நம்பவே முடியவில்லை.

அறுவை சிகிச்சையை வலியுறுத்திய மருத்துவர்களின் பரிந்துரையைக் குறிப்பிட்டுக் கேட்டபோது “அவங்களுக்கெல்லாம் நான் தாத்தா. நா சொல்றதக் கேளு” என்று கூறியிருக்கிறார் அந்த மருத்துவர். அவரிடம் பேசிவிட்டு வந்த என் அக்காவின் முகத்தில் வலியின் வேதனை குறைந்து நம்பிக்கை ரேகைகள் தென்படத் தொடங்கின.

அவரது கிளினிக் வளாகத்திலேயே ஃபிசியோ கிளினிக் இருந்தது. அப்போதே என் அக்காவுக்கு ஃபிசியோ சிகிச்சை தொடங்கியது. ஒரு வாரம் காலையிலும் மாலையிலும் வந்து இந்த ஃபிசியோ சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும் என்று கூறி, சில மருந்துகளையும் மருத்துவர் எழுதிக்கொடுத்தார். கிளினிக்குக்கு ஆம்புலன்ஸில் வந்த என் அக்கா சிறிது தூரம் நடந்துசென்று அங்கிருந்து என் மாமாவுடன் டூவீலரில் வீட்டுக்குச் சென்றார்.

நண்பராகிவிட்ட மருத்துவர்

அடுத்த ஒருவாரம் ஃபிசியோ சிகிச்சைக்குப்பின் என் அக்கா பூரணமாகக் குணமடைந்துவிட்டார். முதலில் சில நாட்கள் சாப்பிடும் நேரம் தவிர, நாள் முழுவதும் கழுத்தில் பட்டை அணிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதன் பிறகு டூவீலர் ஓட்டும்போது மட்டும் அணிந்துகொள்ள வேண்டியிருந்தது. போகப் போக அதற்கும் தேவையில்லாமல் போய்விட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாகப் பழகுவதற்குக் கடினமானவர் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த அந்த குடும்ப மருத்துவர் என் அக்காவை விளையாட்டாகக் கிண்டலடிக்கும் அளவுக்கு அவருக்கு ஒரு மூத்த நண்பரைப் போல் ஆகிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x