Last Updated : 29 Jun, 2019 12:56 PM

 

Published : 29 Jun 2019 12:56 PM
Last Updated : 29 Jun 2019 12:56 PM

அல்ஸைமர் நோய்க்கு முடிவு கட்டுவோம்!

வயது ஆக ஆக நம்முடைய ஞாபக சக்தியும் மூளையின் செயல்பாடும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருவதால் ஏற்படுவதே மறதி. கார் சாவியைக் காணோம், அலைபேசியை எங்கே வைத்தோம் என்று வைத்த பொருளைத் தேடுவது சாதாரண மறதி.

இதை ‘டிமென்சியா’ (Dementia) என்கிறோம். மூளையில் சுரக்கும் வேதிப் பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள், மூளை செல்களின் தேய்மானம், செயலிழப்பு போன்றவற்றால் இந்த மறதி ஏற்படுகிறது.

வந்த பாதையை மறந்து வீட்டுக்குத் திரும்பத் திண்டாடுவது, பேசிக் கொண்டிருக்கும்போதே வார்த்தைகளை மறந்துவிடுவது, அருகில் இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து, கடைசியில் ‘தான் யார்?’ என்பதே தெரியாமல் போவதுவரை வயதானவர்களுக்கு மறதி வருவது இப்போது அதிகரித்துவருகிறது. இந்த மறதிக்குப் பெயர் ‘அல்ஸைமர்’ நோய் (Alzheimer’s disease). இது பெரும்பாலும் மரபியல்ரீதியாகத்தான் வருகிறது.

உலக அளவில் 60 வயதைத் தாண்டிய 100 பேரில் 5 பேரையும் 75 வயதைக் கடந்தவர்களில் 4 பேரில் ஒருவரையும் இது பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும் 40 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் சுமார் 4 கோடி 40 லட்சம் பேருக்கு இந்த மறதி நோய் இருக்கிறது.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

பரம்பரையில் யாருக்காவது இது வந்திருந்தால், வாரிசுகளுக்கு வரும் சாத்தியம் அதிகம். பெண்களைவிட ஆண்களுக்கே இதன் தாக்குதல் அதிகம். அதிலும் பக்கவாதம் வந்த ஆண்களை மிகச் சீக்கிரத்தில் பாதிக்கிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு பிரச்சினை, நரம்பு மண்டலக் கோளாறுகள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், ரத்தக் குழாயில் கொழுப்பு, பார்கின்சன் நோய்  போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை இது எளிதில் பாதிக்கிறது.

என்ன காரணம்?

வயது ஏற ஏற மூளை செல்கள் சுருங்கும்போது ‘அமைலாய்டு’ (Amyloid), ‘டௌ’ (Tau) எனும் இரண்டு புரதப்பொருட்கள் அவற்றில் படிகின்றன. இதனால், பூச்சி அரித்த இலைகள் உதிர்வதைப் போல, மூளை செல்கள் சிறிது சிறிதாக இறந்துபோகின்றன. இதன் விளைவால் ஞாபக சக்தி குறைந்து அல்ஸைமர் நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள் என்ன?

அல்ஸைமர் நோயின் ஆரம்பத்தில் அன்றாட வாழ்வில் சின்ன சின்ன விஷயங்கள் மறந்து போகும். உதாரணமாக, காலையில் சாப்பிட்ட சாப்பாடு, சந்தித்த நபர், சென்ற இடம் ஆகியவை மறந்து போகும். அடுத்த கட்டத்தில் அன்றாடச் செயல்களைச் செய்வது மறந்து போகும்.

 பல் தேய்ப்பது, குளிப்பது போன்றவற்றைக்கூட வீட்டில் உள்ளவர்கள் நினைவுபடுத்த வேண்டி வரும். கடையில் கணக்குப் பார்த்து மீதி சில்லறையை வாங்காமல் வருவது, பெண்களுக்குச் சமையல் செய்வதில் சிக்கல், சாலை விதிகளில் குழப்பம், வங்கிப் பரிமாற்றங்களில் தடுமாற்றம் என மறதி அதிகமாகிக்கொண்டே போகும்.

அடுத்து, அறிவு சார்ந்த செயல்பாடுகள் மறந்து போகும். உதாரணமாக, ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபடுகிறாரோ அந்தத் தொழில் சார்ந்த அறிவு குறைந்து கொண்டே வரும். நோய் முற்றிய நிலையில் ஞாபகம் மொத்தமே அழிந்துபோகும். வழக்கமாக நடந்து செல்லும் பாதையை மறப்பதில் தொடங்கி நெருங்கிப் பழகும் முகங்கள், உறவினரின் பெயர்களை மறப்பதுவரை மறதி அதிகமாகும்.

உணவை வாயில் போட்டுக் கொண்டால் அதை விழுங்க வேண்டும் என்றுகூடத் தோணாது; மென்றுகொண்டே இருப்பார்கள் அல்லது துப்பிவிடுவார்கள். மனைவியையே ‘இவர் யார்?’ என்று கேட்கும் அளவுக்கு மறதி நோய் முற்றிவிடும்.

இப்படிப்பட்டவர்களை அன்போடும் பரிவோடும் பொறுமையோடும் கவனித்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை. ஆனால், கூட்டுக்குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துவரும் இன்றைய சூழலில், தன்னிலை மறந்து தவிக்கும் அல்ஸைமர் நோயாளிகளைச் சரியாகக் கவனிப்பது ரொம்பவே குறைந்துவருகிறது,

மறதி வந்தவரை மூளை நரம்பியல் டாக்டரிடம் காண்பித்தால், அவருக்குச் சில பரிசோதனைகளைச் செய்து, சாதாரண மறதியா  அல்ஸைமரா என்று சொல்லிவிடுவார். சாதாரண மறதிக்கு சிகிச்சை உள்ளது. அல்ஸைமருக்கு சிகிச்சை இல்லை. சில பயிற்சிகள் மூலமாகத்தான் அதைக் கட்டுக்குள் வைக்க முடியும். எனவே, அல்ஸைமர் நோய் வராமல் தடுத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

தடுப்பது எப்படி?

அறுபது வயதைக் கடந்தவர்கள் ஓய்வு பெற்றாலும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஏதாவது ஒரு வேலையில் மூழ்குவது நல்லது. உதாரணமாக, சமூக சேவை செய்யும் இயக்கங்களுடன் இணைந்துகொண்டு செயலாற்றலாம். முக்கியமாக, வேலையிலிருந்து விலகினாலும் சமூகத்துடன் இணைந்து நல்ல செயல்களில் ஈடுபடுவது மூளையை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.

ஏதாவது ஒரு பொழுதுபோக்கைப் புதிதாகக் கற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக, நூல்நிலையம் செல்வது, பள்ளியிலிருந்து பேரன், பேத்திகளை அழைத்து வருவது, தோட்ட வேலை பார்ப்பது. தையல் பழகுவது.

தினமும் செய்தித்தாள் படிப்பது அவசியம். அவற்றில் இடம்பெறும் கணக்குப் புதிர்கள், சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஈடுபடலாம்.

பெண்கள் கை தையல், எம்ப்ராய்டரி பழகலாம். இவை மூளையின் இரண்டு பக்க செல்களையும் இயங்க வைக்கும்.

ஏதாவது ஒரு புது மொழியை ஆர்வத்துடன் கற்றுக்கொள்வது நல்லது. அல்லது பள்ளிக் குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கலாம். இளைய சமூகத்துக்குத் தத்தம் தொழில் சார்ந்த பயிற்சிகளைத் தரலாம்.

நாட்டு நடப்புகளை அப்டேட் செய்துகொண்டே இருங்கள். இதற்குச் சமூக வலைத்தளங்களில் கொஞ்ச நேரம் மூழ்கலாம்.

நண்பர்களுடனும் பேரன், பேத்திகளுடனும் அடிக்கடி பேசுங்கள். அப்போது நீங்கள் சொல்வதைத்தான் அவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அடுத்தவர்கள் சொல்வதிலிருந்தும் நிறையக் கற்றுக்கொள்ள முடியும். கூட்டுக்குடும்பமாக இருந்தால், தினமும் ஏதேனும் ஒரு வேளை உணவைக் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். இது இதயத்துக்கு வலிமை சேர்க்கிறது. ஆரோக்கியமாக இருக்கும் இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்வது சரியாக இருக்கும்.

தனித்து இருப்பதைத் தவிருங்கள். அப்படி இருக்க நேர்ந்தால், உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். அல்லது ஒரு இசைக்கருவியை இயக்கப் பழகிக்கொள்ளுங்கள். தேவையில்லாத யோசனைகள் உங்களைப் படுத்தி எடுப்பதை இவற்றின் பலனால் குறைக்கலாம்.

முடிந்த அளவுக்கு வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளுங்கள். அது ஆன்மிகப் பயணமாகவும் இருக்கலாம்; இன்பச் சுற்றுலாவாகவும் இருக்கலாம். அப்போது கிடைக்கும் புதுப்புது அனுபவங்களும் அவற்றை அசைபோடுதலும் நினைவாற்றலை அதிகரிக்கும் ‘டானிக்’குகளாக அமையும்.

நேரத்துக்கு உறங்குங்கள். தினமும் குறைந்தது 6 மணி நேர உறக்கம் தேவை. உறக்கம்தான் மூளையை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் முக்கியமான மந்திரச்சாவி!

கொழுப்பு நிறைந்த உணவைக் குறைத்துக்கொண்டு, வைட்டமின் ஏ, சி, இ எனும் ஆன்டி - ஆக்சிடன்ட் மிகுந்த பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். நார்ச்சத்துள்ள உணவை அதிகப்படுத்துங்கள். ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் உள்ள ஆளி விதைகள், அக்ரூட், சால்மன், டூனா, சார்டைன் ஆகிய மீன் உணவைச் சேர்த்துக்கொள்ளுங்கள். திராட்சை, பெர்ரி பழங்களும் உதவும். அவித்த வேர்க்கடலையை உரித்துத் தோலுடன் சாப்பிடுங்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். முக்கியமாக ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு இந்த மூன்றும் கட்டுக்குள் இருக்கட்டும்.

புகையை விட்டொழியுங்கள். மதுவை மறந்துவிடுங்கள்.

இத்தனையும் செய்தால், மறதி நோய் உங்களை நெருங்கவே தயங்கும்!

கட்டுரையாளர்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x