

65-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சைப் பிரிவில், பிரசவிக்கும் பெண்களுக்கு முதல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே படுக்கைகள் தரப்படுவதாகவும் பின்னர் அவர்களையும் பிறந்த பச்சிளம் குழந்தையையும் கீழே இறங்கி தரையில் படுக்க சொல்வதாகவும் மகப்பேறு பிரிவில் உள்ள பெண்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கூட படுக்கை வசதி இல்லாத அவல நிலை உள்ளது. இதுபோல் மற்ற பிரிவுகளிலும் படுக்க இடம் இல்லாமல் நோயாளிகள் தவிக்கின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் ஒரே நேரத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பிரசவமான பெண்கள் தங்கியிருக்கும் நிலை உள்ளது.
5 நாள்தான் படுக்கை
65-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சைப் பிரிவில், பிரசவிக்கும் பெண்களுக்கு முதல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே படுக்கைகள் தரப்படுவதாகவும் பின்னர் அவர்களையும் பிறந்த பச்சிளம் குழந்தையையும் கீழே இறங்கி தரையில் படுக்க சொல்வதாகவும் மகப்பேறு பிரிவில் உள்ள பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு இருப்பவர்கள் அவர்களின் அவசரத் தேவைகளுக்குக் கூட அவ்வளவு எளிதில் எழுந்து செல்ல முடிவதில்லை. கைகளை ஊன்றி எழுந்து கொள்வதற்கு கஷ்டப்படுவதோடு, அறுவை சிகிச்சையில் அவர்களுக்கு போடப்பட்டுள்ள தையல் பிரிந்து விடும் அபாயமும் உள்ளதாக கூறுகின்றனர்.
பிரசவித்த பெண்களுக்கு சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஆனால், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், மற்ற எல்லா வார்டுகளையும் போலவே அறு வைச் சிகிச்சை மற்றும் பிரசவ வார்டு பகுதிகளிலும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சரியான கழிப்பிட வசதிகள் இல்லாததால் குழந்தை பெற்றவர்களுக்கு எளிதில் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. இது குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 65 பேருக்கு மேல் இருக்கும் அறுவைச் சிகிச்சை வார்டில் நான்கு கழிப்பறைகளும், இரண்டு குளியல் அறைகளும் மட்டுமே உள்ளன. இந்த நான்கு கழிப்பறைகளுக்கும் கதவுகள் கிடையாது. மேலும் இரவு நேரங்களில் வெளிச்சம் தருவதற்கு என்று ஒரே ஒரு மின் விளக்கு மட்டுமே உள்ளது.
மருத்துவமனையில் உள்ள கடைநிலை ஊழியர்கள், சிலரிடம் பணம் பெறுவதாக புகார் கூறப்படுகிறது ஆண் குழந்தை என்றால் 500 ரூபாய் என கேட்டு பெறுகின்றனராம்.
பற்றாக்குறையாக உள்ள படுக்கை வசதிகள் பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டோம். பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வரக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதனால்தான் பற்றாக்குறை. தற்போது எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்தில் மகப்பேறுக்கென்று தனித் தளம் அமைக்க உள்ளதாக தெரிவித்தனர்.