

மருந்துப் பொருள் விற்பனையில் ஈடுபடும் அனைவரும் வெளிப்படையான கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அரசு நிர்ணயித்த விலையைவிட யாராவது கூடுதல் விலைவைத்து மருந்துகளை விற்பனை செய்தால் அதுகுறித்து தேசிய மருந்துப்பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்திடம் பொதுமக்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கலாம் என்று அந்த ஆணையத்தின் தலைவர் சி.பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளார். .
இந்தியாவில் விற்பனையாகும் மருந்துப் பொருட்களின் விலைவாசி குறித்து சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சி.பி.சிங் பேசியது:“தேசிய மருந்துப் பொருட்கள் ஆணையம் 1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மருந்துப் பொருட்களை விற்பவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் 2006-ம் ஆண்டிலிருந்து மருந்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மருந்துப் பொருட்களை விற்பனை செய்வதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தாலும் சில நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வெவ்வேறு பெயர்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றன. அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலை வைத்து மருந்து பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவாரின் தலைமையிலான அமைச்சர்கள் குழு மருந்துப் பொருட்களின் விலைவாசியை குறைப்பதற்காக பல்வேறு விஷயங்களை விவாதித்து வருகிறது என்றார்.
இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர ரத்னூ கூறியது: இன்றைக்கு அரசாங்க மருத்துவமனைகளிலேயே நல்ல மருந்துகள் கிடைக்கின்றன. ஆனாலும் பொதுமக்கள் பெரிய பெரிய மருத்துவமனைக்கு செல்வதைத் தான் மரியாதையாக நினைக்கிறார்கள். அது அவர்களின் உரிமை. ஆனாலும் மருந்துப் பொருட்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குவது பற்றியும் சிந்திக்க வேண்டும். அதுகுறித்த புகார்களை மத்திய மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்துவதும் அவசியம் என்றார்