Last Updated : 17 Jun, 2017 12:10 PM

 

Published : 17 Jun 2017 12:10 PM
Last Updated : 17 Jun 2017 12:10 PM

சந்தேகம் சரியா 40: கால்சியம் மாத்திரையைச் சுயமாக வாங்கிச் சாப்பிடலாமா?

எனக்கு வயது 40. அடிக்கடி கை, கால் குடைச்சல் ஏற்படுவதுண்டு. அதற்கு நான் கால்சியம் டி3 மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். சத்து மாத்திரையைச் சாப்பிடுவதில் தவறில்லை என்ற எண்ணத்தில் டாக்டரிடம் ஆலோசிக்காமல் சாப்பிட்டு வருகிறேன். இது சரியா?

நீங்கள் சாப்பிடுவது சத்து மாத்திரைதான் என்றாலும் மருத்துவரை ஆலோசிக்காமல் தொடர்ந்து அதைச் சாப்பிடுவது சரியில்லை.

உங்களுக்குக் கை, கால் குடைச்சல் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எந்தக் காரணத்தால் உங்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தேவையான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிட வேண்டும். கால்சியம் டி3 மாத்திரை மட்டுமே உங்கள் பிரச்சினைக்கு முழுவதுமாகத் தீர்வு தராது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அடுத்து, ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு கால்சியம் டி3 மாத்திரை தேவைப்படுவதில்லை. அவர்கள் சாப்பிடும் உணவிலிருந்தே தேவையான கால்சியத்தைப் பெற முடியும். பருவமுற்றோருக்கு தினமும் சுமார் 500 மில்லி கிராம் வீதமும் 50 வயதுக்கு மேல் 1500 மி.கி. வீதமும் கால்சியம் தேவை.

பால் மற்றும் பால் சார்ந்த உணவுப்பொருட்கள், திட உணவுகளில் கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இவற்றில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டாலே, ஒருவருக்குத் தேவையான கால்சியம் இயற்கை வழியில் கிடைத்துவிடும்.

வைட்டமின் டி அவசியமா?

நீங்கள் சாப்பிடும் கால்சியம் டி3 மாத்திரையில் உள்ள டி3 என்பது வைட்டமின் டிஐக் குறிக்கிறது. இது நம் சருமத்தில் சூரிய ஒளியின் மூலம் இலவசமாக உற்பத்தியாகிற வைட்டமின். இந்தியாவில் சூரிய ஒளிக்குப் பஞ்சமில்லை. சுமார் அரை மணி நேரம் சுள்ளென்று சூரிய ஒளிக்கதிர்கள் சருமத்தில் பட்டால் போதும், அதைக்கொண்டு நம் சருமம் உடல் தேவைக்கு வைட்டமின் டியைத் தயாரித்துக்கொள்ளும். ஆகவே, வைட்டமின் டி3 மாத்திரை எல்லோருக்கும் தேவையில்லை. நாள் முழுவதும் வெயிலே படாமல் வேலை செய்கிறவர்களுக்கு வேண்டுமானால், வைட்டமின் டி3 மாத்திரை தினமும் 20 மைக்ரோ கிராம் வீதம் தேவைப்படலாம்.

யாருக்கு, எப்போது தேவை?

உடலில் உள்ள கால்சியம் 99 சதவீதம் எலும்புகளிலும் பற்களிலும்தான் காணப்படுகிறது. மீதி ரத்தத்தில் உள்ளது. ரத்தத்தில் கால்சியம் குறைந்தால் அதை எலும்பிலிருந்து பெற்றுக்கொள்கிறது. எலும்புகளின் வளர்ச்சி, பற்களின் வளர்ச்சி, தசைகளின் இயக்கம், நரம்புகளின் செயல்பாடு, ரத்தம் உறைதல், ஹார்மோன் சுரப்பு போன்ற பல பணிகளுக்குக் கால்சியம் தேவைப்படுகிறது.

உணவுப் பற்றாக்குறை காரணமாக கால்சியம் கிடைக்காதவர்களுக்கு, நோயின் காரணமாக கால்சியம் குறைந்துள்ளவர்களுக்கு (உதாரணமாக, பேரா-தைராய்டு குறைபாடு), 50 வயதுக்கு மேல் முதுமை காரணமாக குடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படாதவர்களுக்கு, மாதவிலக்கு நின்றுபோன பெண்களுக்கு ஆகியோருக்குத்தான் கால்சியம் மாத்திரை தேவை. கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கும் தினமும் 1200 – 1500 மி.கி. கால்சியம் தேவை. இவர்களுக்கு உணவின் மூலம் இந்த அளவுக்குக் கால்சியம் கிடைக்காதபோது, இவர்கள் கால்சியம் மாத்திரையைச் சாப்பிடலாம்.

பைட்டிக் அமிலம், பாஸ்பேட், ஆக்சலேட் போன்றவை உணவிலிருக்கும் கால்சியத்தை சிறுகுடல் உறிஞ்சிக்கொள்வதைத் தடை செய்கின்றன. ஆகவே, இந்தப் பொருட்கள் அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்குக் கால்சியம் பற்றாக்குறை ஏற்படலாம். ( சில தானியங்களில் பைட்டிக் அமிலம் அதிகம் உள்ளது. சோயாபீன்ஸ், பசலைக்கீரை, சில பச்சையிலைக் காய்களிலும் ஆக்சலேட் அதிகமுள்ளது).

பொதுவாக, ஒருவரின் ரத்தத்தில் கால்சியத்தின் அளவையும், வைட்டமின் டி3 அளவையும் கணித்து, அவை குறைவாக இருந்தால் மட்டும் குறிப்பிட்ட காலத்துக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி கலந்துள்ள மாத்திரையைச் சாப்பிடலாம்.

பெண்களுக்கு ஏன் கால்சியம் தேவை?

பெண்களுக்குச் சிறுகுடலில் இருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அல்லது வைட்டமின் டி தேவை. மாதவிலக்கு நின்றுபோனவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பது குறைந்துவிடுவதால், ரத்தத்திற்கு எடுத்துச் செல்லப்படும் கால்சியத்தின் அளவும் குறைந்துவிடுகிறது. இதனால் எலும்புகளில் நுண்ணிய துளைகள் தோன்றி, எலும்புகளின் வலிமை குறைந்துவிடும். இதற்கு ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ நோய் என்று பெயர். அப்போது லேசாக தரையில் விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நிலைமையைத் தடுக்க இவர்கள் கால்சியம் மாத்திரையைச் சாப்பிட வேண்டும். இவர்களுக்கு 1500 மிகி. கால்சியம் தினமும் தேவைப்படும். இதை ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஒரு வேளைக்கு 500 மிகி வீதம் மூன்று வேளைக்குப் பிரித்துச் சாப்பிட வேண்டும். காரணம், கால்சியம் மாத்திரையில் உள்ள கால்சியம் மிக மெதுவாகத்தான் ரத்தத்தில் கலக்கும்.

கால்சியம் அதிகமானால்?

ஒருவர் உணவு மூலமும் கால்சியம் மாத்திரை மூலமும் தேவைக்கு அதிகமாக கால்சியத்தை உட்கொள்கிறார் என்றால், சிறுநீரகத்திலிருந்து அது வெளியேற்றப்படும். இப்படி அதிகப்படியாக வெளியேற்றப்படும் கால்சியம் சிறுநீர்க் கல்லை உருவாக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதிகமான கால்சியம் உடலில் சேரும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவுகளுக்கு இடையூறு செய்யும். இதனால் அடிக்கடி உடல் சோர்வு தலைகாட்டும். பசி குறையும். குமட்டலும் வாந்தியும் தொல்லை கொடுக்கும்.

கட் டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x