

எனக்கு 33 வயது ஆகிறது. என் உள்ளங்கை, கால் பகுதிகள் அடிக்கடி வியர்த்துப் போகின்றன. கால் பகுதி வியர்த்துப் போவதால் செருப்பெல்லாம் ஈரமாகி, நடப்பதற்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஏசி அறையில் இருந்தாலும் வியர்க்கிறது. ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீரும் சேர்ந்துவிடுகிறது. இவற்றால் மிகவும் துன்பத்துக்கு ஆளாகிறேன். பத்திரிகையாளனாக இருப்பதால், இந்த உபாதைகளைத் தாங்க முடியவில்லை. பணிச் சூழலுக்கு இடையூறாக இருக்கிறது.
- எம்.கணேசன், சென்னை
Anxeity neurosis எனும் பிரச்சினை இது. உங்களின் கேள்வியிலேயே பதற்றம் தெரிகிறது. எதனையும் சிறப்பாகச் செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனப் பதற்றத்தில்தான் இந்தச் சிரமம் ஏற்படுகிறது. சிறு வயது முதலே வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று வீட்டில் கொடுக்கப்படும் அழுத்தம், எங்கே அது முடியாமல் போய்விடுமோ என்ற ஆழ்மனதின் பயம், அக்கம்பக்கத்து மாணவர்களுடன் ஒப்பிட்டு, என்னால் முடியாதோ என்ற பதற்றம் இவையெல்லாம்தான் இந்த உள்ளங்கை/கால் வியர்வைக்கான மிக முக்கியக் காரணம்.
பள்ளியிலும் வீட்டிலும் சுற்றமும் கூடுதல் நெருக்கடி தரும்பட்சத்தில் இந்தப் பிரச்சினை பல காலம் தொடரும் ஒன்றாக மாறுகிறது. குறிப்பாக, புதிய நபரைச் சந்திக்கையில், பரீட்சை காலத்தில் இன்டர்வியூ நேரங்களில் இது அதிகரிப்பதை உணர்ந்திருப்பீர்கள். எனவே, இந்த நோய் முழுமையாய்த் தீர முதலில் மனதைச் செம்மையாக்க வேண்டும். கூடவே நரம்பை உரமாக்கும் உணவும் மருந்தும் சேர்ந்தால் மட்டுமே முழுமையான தீர்வு கிட்டும்.
Instant/ deep/ quick relaxation technique எனும் யோகாசன மூச்சுப் பயிற்சியைக் கற்றுக்கொண்டு இந்த மனப் பதற்றத்தைக் குறைக்க வேண்டும். இந்த மூச்சுப் பயிற்சி, யோக நித்திரை எனும் அந்தக் கால யோகப் பயிற்சி முறையின் நவீன அறிவியல் வடிவம்.
தேர்ந்த யோகாசன மருத்துவர் உங்களுக்கு இதை எளிதாகக் கற்றுத்தருவார். பொதுவாக இது போன்ற நரம்பியல் செயல்முறைகளுக்கு, உணவில் அதிகப் புளி பயன்படுத்துவதைக் குறைப்பது அவசியம். நரம்பை உரமாக்கும் முருங்கை-பொன்னாங்கண்ணி முதலிய கீரைகள், முளைகட்டிய பாசிப்பயறு சுண்டல், தொலி உளுந்தில் செய்த பலகாரங்கள், மாதுளம்பழம், நாட்டுக் கோழி ஈரல், அடிக்கடி சாப்பிடுங்கள்.
தொட்டாற்சிணுங்கி எனும் செடியைக் குழந்தைப் பருவத்தில் சீண்டிப் பார்த்து அது சுருங்குவதை வேடிக்கையாகச் செய்து விளையாடியிருப்போம்; அதன் சூரணம் (உலர்த்தித் தூள் செய்த பொடி) மற்றும் Velvet beans என்றழைக்கப்படும் பூனைக் காலி விதைப் பொடியையும் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசித்துப் பெற்றுச் சாப்பிடவும்.
நான் அமுக்கராகிழங்குப் பொடியைத் தினம் மல்டிவைட்டமின், பி 1-பி 6 மாத்திரைகளுக்குப் பதிலாகச் சாப்பிடுகிறேன். இதனால் வயிற்றில் எரிச்சலும் படபடப்பும் வருமா?
- இ.ஞானம் (மின்னஞ்சல்)
அமுக்கராகிழங்கு, வைட்டமின் மாத்திரைக்கு மாற்று அல்ல. சித்த மருத்துவப் புரிதல்படி அந்தக் கிழங்கு உடலில் வாத அதிகரிப்பை மட்டுப்படுத்தி, நரம்பையும் தசையையும் வலுப்படுத்தும். மிக அதிக அளவில் நவீன அறிவியலாலும் பரிசோதிக்கப்பட்டுப் பெருவாரியாகப் பயன்பாட்டில் இருக்கும் வேர் அது. படபடப்பு குறைக்க, மனஅழுத்தம் தீர, மூட்டு-தசைவலியை இலகுவாக்கித் தூக்கத்தை வரவழைக்க அது உதவும்.
நரம்புத் தளர்ச்சியைப் போக்க, ஆண்மைக்குறைவைச் சரிசெய்யவும் பக்கபலமாக இருக்கும் என்பதால் இதற்கு இந்தியன் ஜின்செங் என்ற பெயரும் உண்டு.
ஆனால், மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவதுதான் சிறப்பு. சித்த மருத்துவத்தின் சிறப்பே, நபருக்கு நபர் அது தனித்துவப் பயன் அளிப்பதுதான். ஒரு மருந்து வாத உடம்பினருக்கு ஒரு செயலையும் பித்த உடம்பினருக்கு பிறிதொரு செயலையும் கொடுக்கும். உதாரணத்துக்குக் கப (சளி) உடம்பினருக்கு மிளகுத் தூள் எந்த எரிச்சலும் தராது.
அதே பித்தம் அதிகபட்சம் இருப்போருக்கு, அதே மிளகு லேசான வயிற்று எரிச்சலைத் தரும். அதனால், உங்கள் உடல்வாகு என்ன என்பதை அருகிலுள்ள சித்த, ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசித்து, அதற்கேற்றதுபோல அமுக்கராவைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. அதிலும் இது போல மூலிகைகளை எந்தத் துணையுடன், எந்தக் காலத்தில், எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் முக்கியம். குறிப்பாய் அமுக்கராவைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடுவது சிறப்பு.
எனக்கு 53 வயது. சில நாட்களுக்கு முன்பாக உணவுக் குழாயில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இரைப்பையின் சில பகுதிகளும் அகற்றப்பட்டு அதன் அளவு சிறிதாகிவிட்டது. இதனால், குறைந்த அளவு உணவையே உட்கொள்ள முடிகிறது. வேகமாக மெலிதாகிவருகிறேன். கொஞ்சம் படுத்தாலும் சாப்பிட்ட உணவு வெளியேறிவிடும் உணர்வு இருக்கிறது. நாளானால் சரியாகிவிடும் என்கிறார் மருத்துவர். வேறு மருந்தோ, டானிக்கோ தரப்படவில்லை. இந்த நிலை மாறுமா?
- ரதிதேவி மனோகரன் (மின்னஞ்சல்)
இரைப்பையின் கொள்ளளவு குறைவதால் ஏற்படும் பிரச்சினை இது. பயங்கொள்ள வேண்டாம். நாளடைவில் நிச்சயம் சரியாகும். உடலுக்கு வலுவும் தேவையான சத்துகளையும் தரும் உணவை நீங்கள் தேர்ந்தெடுத்துச் சாப்பிடவேண்டும். ஆப்பம் - தேங்காய்ப்பால், கம்பங்கூழ்- மோர்- சின்ன வெங்காயம், நவதானியக் கஞ்சி, மாதுளைச் சாறு, பப்பாளி, சிவப்பு கொய்யா, தக்காளி (தோல் மட்டும்) முதலிய சிவந்த நிறப் பழங்கள், பிராக்கோலி-காய்கறி சூப், தேன் சேர்த்த கிரீன் டீ, ஒமேகா-3 சத்துள்ள மீன் அல்லது ஃபிளேக்ஸ் விதைப் பொடி அல்லது அதன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வாருங்கள்.
வெள்ளைச் சர்க்கரை அறவே வேண்டாம். இந்த உணவுகள் தற்போதைய உடல் நலனுக்கு மட்டுமல்லாது, மீண்டும் புற்று வந்திடாது தடுக்கவும் உதவிடும். பிராணாயாமப் பயிற்சியும் பயனளிக்கும்.
மாதவிடாய்க்கு இரண்டு நாளைக்கு முன்னதாக வரும் பருக்கள், ஒரு சில நேரம் நிலைத்துக் கறுத்துவிடுகின்றன, என்ன செய்யலாம்?
- மகேஸ்வரி, திருச்சி
மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பிருந்து கண்டிப்பாக உங்கள் உணவில் பழங்கள், இளநீர், மோர் சேருங்கள். உளுந்து சாதம்- எள்ளுத் துவையல் சாப்பிடுங்கள். முடிந்தால் தினசரித் தலைக்குக் குளிப்பது மிக மிக நல்லது. அத்தோடு முகத்தைப் பாசிப்பயறு, கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு, வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள் சேர்த்து வீட்டில் தயாரிக்கும் நலுங்கு மாவு கொண்டு மாலையும் இரவும் கழுவுங்கள்.
அதையும் தாண்டி முகப்பரு வந்தால், திருநீற்றுப் பச்சிலை (துளசி வகை) சாறை அவ்விடத்தில் தடவிவாருங்கள். இப்போது அதில் இருந்து எடுக்கப்படும் basil oil-இல் செய்த மூலிகை கிரீம்களும் சந்தையில் கிடைக்கின்றன.
உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு
பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.
மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in,
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,
தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002