வாசகர் பக்கம்: ஊட்டம் தரும் வேகாத உணவுகள்!

வாசகர் பக்கம்: ஊட்டம் தரும் வேகாத உணவுகள்!
Updated on
1 min read

‘துரித உணவு' (பாஸ்ட் புட்) நிலைபெற்றுவிட்ட இக்காலத்தில், வேகாத உணவைப் பற்றிப் பலரும் சிந்திப்பது உடலுக்குத் தரும் நன்மைகளைக் கருதித்தான்.

உணவுப் பொருட்களை வேக வைத்து உண்பதால், அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அழிந்துவிடும் என்று தெரிந்திருந்தாலும், உண்ட உணவு நன்றாகச் செரிப்பதற்காகச் சமைத்து உண்பது வழக்கமாகிவிட்டது. எனினும், கீழ்க்காணும் உணவு வகைகளை வேக வைக்காமல் தயாரித்து உண்பதால் ஊட்டச்சத்துகளை முழுமையாகப் பெறலாம்.

வாழைத்தண்டு கூட்டு

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டோடு, ஒரு கப் தயிர் சேர்த்து, தேங்காய் துருவல், நிலக்கடலை, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, பச்சையாகவே சாப்பிடலாம். நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எடை குறையும். பொட்டா சியம் இருப்பதால் வயிற்று வலியையும் குறைக் கும். அசிடிட்டி, அல்சருக்கும் இது மருந்து.

கேரட் - பயறு கூட்டு

முழு பச்சைப் பயறை நீரில் முந்தைய நாள் இரவு ஊறவைத்து , முளைகட்டியதும் அதனுடன் கேரட் துருவலைச் சேர்த்து, சிறிது உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து உண்ணலாம். புரதச்சத்து மிகுந்தது என்பதால் உடலுக்கு நல்ல ஆற்றலைத் தரும், முதுமையடைவதைக் குறைக்கும். கொழுப்புச்சத்து குறைவு என்பதால் இதயத்துக்கு நல்லது. நார்ச்சத்து இருப்பதால், செரிமானமும் எளிதாகும். கண்களுக்கு மட்டுமில்லாமல், தோலுக்கும் இது நல்லது.

புடலங்காய் கூட்டு

இளசான புடலங்காயைப் பொடியாக நறுக்கி, அதனுடன் நிலக்கடலை, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சிறிதளவு கலந்து உண்ண, மிகவும் ருசியாக இருக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது காய்ச்சலைக் குறைக்கும். இதயத்துக்கும் நல்லது. மஞ்சள் காமாலையைக் குறைக்கவும் உதவும்.

பூசணி ஜூஸ்

சாம்பல் பூசணிக்காயைத் துருவி , மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அந்தச் சாற்றுடன் சிறிது மிளகுத் தூள், சிறிது உப்பு சேர்த்து அருந்தலாம். குளிரூட்டும் தன்மையுள்ள இச்சாற்றினால் சளி பிடிக்கக் கூடும். அதைத் தவிர்க்க, சிறிது தேன் கலந்து அருந்தவேண்டும். இது உடலை இளைக்க வைக்கும் தன்மைகொண்டது.

- கிரிஜா நந்தகோபால், திருச்சி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in