

ஜிப்மர் மருத்துவமனையில் மூளை சாவு ஏற்பட்ட இருவரின் சிறுநீரகங்கள் 4 பேருக்கு பொருத்தும் மாற்று அறுவை சிகிச்சை முதல்முறையாக வெற்றிகரமாக நடந்துள்ளது.
புதுச்சேரியில் திங்கள்கிழமையன்று செய்தியாளர்களிடம் ஜிப்மர் இயக்குநர் ரவிக்குமார் கூறியதாவது, ’’புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 3-ம் தேதி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர் ஜெகதீசன் (51) இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவளக்குப்பம் அருகே விபத்து ஏற்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் உடனடியாக சுவாசம் அளிக்கும் கருவி மூலம் சிகிச்சை தரப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு மீள இயலாத மூளை சேதம் ஏற்பட்டது. இவ்விவரம் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. ’விரும்பினால் நீங்கள் உறுப்பு தானம் செய்யலாம்’ என டாக்டர்கள் சொன்னதை ஏற்று ஜெகதீசனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் மனைவி ஜெயந்தி சம்மதித்தார்.
இதையடுத்து எனது தலைமையில், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலச்சந்தர், கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அம்ரோஸ் ஆகியோருடன் ஒரு மருத்துவர், செவிலியர் குழு இணைந்து மூளைச் சாவு சான்றுக்காக விண்ணப்பித்தல், உறுப்பு மீட்பு (சிறுநீரகம், கருவிழி) மற்றும் சிறுநீரகம் செயல் இழந்த நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தல் போன்ற பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். 5-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஜெகதீசனின் உடலிலிருந்து சிறுநீரகம் எடுக்கப்பட்டு, வேறு 2 பேருக்கு பொருத்தப்பட்டது. கண்கள் ஜிப்மர் கண் வங்கிக்கு அனுப்பப்பட்டன.
விவசாயி அப்பாதுரை
இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் சித்தாங்கூரைச் சேர்ந்த விவசாயி அப்பாதுரை (55) தனது பேரக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வர நடந்து சென்றபோது, பஸ் மோதி காயமடைந்து, ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். அப்பாதுரையைப் பரிசோதித்தபோது அவருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூளைச் சாவு அடைந்துள்ளது தெரிய வந்தது. அந்தத் தகவலை அவரது மனைவி அமுதா, மகன் பாஸ்கரிடம் தெரிவித்தோம். அவர்கள் உறுப்பு தானத்துக்கு சம்மதித்தனர்.
அப்பாதுரையிடமிருந்து சிறுநீரகம் எடுக்கப்பட்டு 2 நோயாளிகளுக்கு பொருத்தப் பட்டன. கண்கள் ஜிப்மர் கண் வங்கிக்கு அனுப்பப்பட்டன. உறுப்புகளை தானம் பெற்றவர்கள் வசதியற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. புதுவையில் மூளைச் சாவு ஏற்பட்டோரிடமிருந்து உறுப்பு தானம் பெற்று உறுப்பு மாற்றம் அறுவை சிகிச்சை செய்துள்ளது இதுவே முதல் முறை. உறுப்பு தானம் பெற்ற அனைவரும் நலமாக உள்ளனர்’’ என்றார்.
உதாரணப் பெண்மணிகள்!
தனது கணவர் ஜெகதீசன் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்த ஜெயந்தி கூறியதாவது:
உறுப்பு தானம் உன்னத செயல் என்று என் கணவர் என்னிடம் கூறியதுண்டு. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எனது கணவர் கஷ்டப்பட்டு எம்.ஏ. படித்தார். படிப்பின் மீது தீராத ஆர்வத்தால் மற்றொரு எம்.ஏ முடித்தார். ’அவருக்கு மூளைசாவு ஏற்பட்டுள்ளது. அவருடைய உறுப்புகளை சிறுநீரகம் செயல் இழந்தவர்களுக்கு வழங்கலாம்’ என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் இரு குடும்பங்கள் நன்றாக வாழும் என்பதால் என் கணவருடைய உறுப்புகளை தானமாகக் கொடுக்க முன்வந்தோம்’’ என்றார்.
தனது கணவர் அப்பாதுரையின் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்த அமுதா கூறியதாவது: “30 ஆண்டுகளுக்கு முன்பு எனது நெருங்கிய உறவினர் சிறுநீரக பிரச்சினையில் பாதிக்கப்பட்டார். அப்போது சிறுநீரகம் கிடைக்கவில்லை. தற்போது எனது கணவருக்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் 2 ஏழை குடும்பங்கள் வாழும் என்பதால் சம்மதம் தெரிவித்தேன். சிறுநீரக பிரச்சினையின் முழு பாதிப்பு எனக்குத் தெரியும்” என்றார்.