Last Updated : 18 Jun, 2016 12:14 PM

 

Published : 18 Jun 2016 12:14 PM
Last Updated : 18 Jun 2016 12:14 PM

பரிசோதனை ரகசியங்கள் 30: எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்?

மருத்துவர்களுக்கு நோயைக் கணிக்க எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேனுக்கு அடுத்தபடியாக, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்தான் (MRI Scan) பெரிதும் உதவுகிறது. தற்போதுள்ள ஸ்கேன் பரிசோதனைகளில் மிகச் சிறந்ததும் இதுதான். பல நோய்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் கணிப்பதில் இது முதலிடம் பெற்றுள்ளது.

Magnetic Resonance Imaging என்னும் ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துச் சுருக்கம்தான் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (‘மேக்னடிக் ரெசொனென்ஸ் இமேஜிங்’). எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் கருவிகள்போல் இது எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளைப் படம் பிடிப்பதில்லை. மாறாக, உடலில் ஒரு காந்தப் புலத்தை உருவாக்கி, ரேடியோ அதிர்வலைகளைப் பயன்படுத்தி, ஒரு கணினியின் உதவியுடன் உறுப்புகளைப் படம்பிடித்துக் காண்பிக்கும் பரிசோதனை இது.

உடலில் இருக்கிறது காந்தம்!

உடல் செல்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளால் ஆனவை. ஹைட்ரஜன் அணுக்களின் மத்தியப் பகுதியில் புரோட்டான் அணுக்கள் உள்ளன. இவற்றின் அருகே ஒரு காந்தப் பொருளைக் கொண்டுவந்தால், இவையும் காந்தத் தன்மையைப் பெற்று, காந்தத்தை நோக்கி நகரும் தன்மையைப் பெறுகின்றன. அந்தக் காந்தத்தை அகற்றினால், மீண்டும் தம் நிலைக்குத் திரும்புகின்றன. இந்த அறிவியலை அடிப்படையாக வைத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செயல்படுகிறது. இதைக் கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாம்.

செயல்படும் விதம்

பயனாளியை நகரும் டேபிளில் படுக்கவைத்து, முகத்தை மறைத்து, சிறிய குகை போலிருக்கும் கருவிக்குள் அனுப்புவார்கள். அவரைச் சுற்றி வட்ட வடிவில், காந்தக் கதிர்களை வெளிவிடுகிற குழாய் இருக்கும். இது அறையின் வெளிப்பக்கத்தில் இருக்கிற கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். முதலில், எந்த உறுப்புக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்து, அப்பகுதிக்கு எவ்வளவு காந்தக் கதிர்கள் தேவை எனக் கணக்கிட்டு, காந்தக் குழாயிலிருந்து கதிரை அனுப்புவார்கள்.

ஸ்கேன் செய்யப்படும் உறுப்பிலுள்ள கோடிக்கணக்கான புரோட்டான்கள் காந்தத் தன்மையைப் பெற்று, குழாயிலிருக்கும் காந்தப்புலத்துக்கு இணைகோட்டில் வரிசைகட்டி நிற்கும். இந்த நேரத்தில் ஸ்கேனரிலிருந்து ரேடியோ அதிர்வலைகளை, அந்த உறுப்புக்குள் அனுப்புவார்கள். இதன் விளைவால், புரோட்டான்கள் தகர்க்கப்பட்டு, தங்கள் வரிசையிலிருந்து சிதறிவிடும். இப்போது காந்தக் கதிர்களையும் ரேடியோ அலைகளையும் நிறுத்திவிடுவார்கள். இதனால் புரோட்டான்கள் காந்தத் தன்மையை இழந்து, உறுப்பில் அவை இருந்த பழைய நிலைக்குத் திரும்பிச் செல்லும். இப்படித் திரும்பிச் செல்லும்போது, புரோட்டான்கள் தங்களைத் தகர்த்த ரேடியோ அலைகளை வெளியில் அனுப்பும். இவற்றை ஸ்கேனரில் காந்தக் குழாய்க்கு எதிர்ப்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் உணர்கருவி சேகரித்துக் கணினிக்கு அனுப்பும்.

இப்போது கணினியில் உள்ள மென்பொருள் ஒரு விசேஷ வேலையைச் செய்யும். அதாவது, உணர்கருவி அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருங்கிணைத்து, முப்பரிமாணப் படங்களாகத் தயாரித்துத் திரையில் காண்பிக்கும். இந்த அலைகள் உறுப்பின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வருகிற காரணத்தால், அந்த உறுப்பின் உள்பகுதி, வெளிப்பகுதி, குறுக்குப்பகுதி, நெட்டுப்பகுதி என எல்லாப் பகுதிகளையும் தெளிவாகக் காணமுடியும். மேலும், திரும்பிச்செல்லும் புரோட்டான்கள் ஒரே வேகத்தில் திரும்புவதில்லை. அந்தத் திசுவின் தன்மையைப் பொறுத்து வேகம் அமையும். இதனால் அந்த வேகத்தைப் பொருத்துத் திசுவின் படங்கள் வேறுபடும். அப்போது உறுப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பாதிப்புகள், குறைபாடுகள் எனப் பல செய்திகளை நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு திரைப்படத்தில் அடுத்தடுத்த ஃபிரேம்களின் தொடர்ச்சியே திரைப்படமாகத் திரையில் தெரியும். அதுபோலவே கணினி தயாரித்த படங்கள் அடுத்தடுத்துத் தெரியும். இந்தப் படங்களை ஃபிலிமில் பிரிண்ட் செய்துகொள்ளவும், சி.டி. அல்லது டி.வி.டி.களில் பதிவு செய்து பாதுகாத்துக் கொள்ளவும் வசதி இருக்கிறது. பின்னாளில் தேவைப்படும்போது இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் படத்திலும் சில உறுப்புகளின் உட்பகுதிகளைக் காணமுடியாது. அப்படிப்பட்ட நேரத்தில் பயனாளிக்கு ஒரு சாயத்தைச் சிரைக்குழாய் வழியாகச் செலுத்திப் படம் எடுத்தால், அந்த உறுப்புகளும் தெரியும்.

தயாராவது எப்படி?

l எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

l முடிந்தவரை ஸ்கேன் எடுக்கப்படும் மருத்துவமனை அல்லது ஸ்கேன் சென்டரில் கொடுக்கப்படும் ஆடை களையே அணிந்துகொள்ள வேண்டும்.

l மோதிரம், வளையல், கழுத்து நகைகள், கைக்கடிகாரம், ஊக்கு, பொத்தான், கண்ணாடி, பல்செட், இடுப்பு பெல்ட் போன்ற உலோகப் பொருட்களைக் கழற்றிவிட வேண்டும்.

l காசு, சாவி, ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை வெளியில் எடுத்துவிட வேண்டும்.

l பயனாளிக்கு ஏதேனும் மருந்து ஒவ்வாமை இருந்தால், ஸ்கேன் எடுப்ப தற்கு முன்பே சொல்லிவிட வேண்டும்.

யாருக்கு விலக்கு?

பொதுவாக இந்தப் பரிசோதனையைக் கீழ்க்கண்டோருக்கு மேற்கொள்ள முடியாது:

l பேஸ்மேக்கர், ஐ.சி.டி. எனும் டிஃபிபிரிலேட்டர், காக்ளியர் இம்பிளான்ட், நரம்புத் தூண்டல் கருவி போன்றவற்றை உடலில் பதிக்கப்பெற்றவர்கள்.

l பலத்த எலும்பு முறிவு மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்சினைக்கான சிகிச்சையின்போது பிளேட், ஸ்குரூ, வயர் போன்ற உலோகப் பொருள்கள் பொருத்தப்பட்டவர்கள்.

l உலோகத்தாலான செயற்கை இதய வால்வைப் பொருத்திக்கொண்டவர்கள்.

l பெருந்தமனி வீக்கத்துக்கு (Aneurism of Aorta) ‘கிளிப்’ பொருத்திக் கொண்டவர்கள்.

l தங்கப்பல் பதிக்கப் பெற்றவர்கள்.

l முழங்காலில் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை மற்றும் இடுப்பு மாற்று சிகிச்சையை மேற்கொண்டவர்கள்.

l `காப்பர்-டி’ எனும் கர்ப்பத் தடை கருவி பொருத்திக்கொண்டவர்கள்.

l இவை தவிர, வேறு ஏதேனும் சிகிச்சைக்காக உலோகத்தாலான பொருள்களை உடலில் பதிக்கப்பெற்றவர்கள். என்ன காரணம்?

உடலில் காந்தப்புலத்தை ஏற்படுத்தி இந்தப் பரிசோதனையை மேற்கொள்வதால், இரும்பு கலந்த உலோகங்கள் காந்தப்புலத்தை நோக்கி இழுக்கப்படும். இது அவர்களுக்கு ஆபத்தாக அமையும். இதைத் தவிர்க்கவே மேற்சொன்னவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

ஓர் ஆறுதல், இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்குப் பதிலாக எக்ஸ்ரே அல்லது சி.டி. ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்பதுதான்.

முக்கியக் குறிப்பு

l கர்ப்பிணிகள், கர்ப்பமடைய வாய்ப்புள்ளவர்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனையை அவசியப்பட் டால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

l முக்கியமாக, கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு இதை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

l தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்குச் சிரைக்குழாய் வழியாகச் சாயத்தைக் கொடுத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டிருந்தால், அடுத்து எத்தனை மணி நேரம் கழித்துக் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவது என்பதை மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

கூடுதல் நன்மை என்ன?

l இதில் எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்துவதில்லை. ஆகவே, கதிர்வீச்சு ஆபத்து துளியும் இல்லை.

l எக்ஸ்ரே மற்றும் சி.டி. ஸ்கேன் படங்களைவிட மிகத் தெளிவாக எலும்பு, மூட்டு, தசை, தசைநாண்கள், மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் போன்றவற்றைப் படம்பிடித்துக் காட்டும்.



எந்தெந்த நோய்களைக் கண்டுபிடிக்கலாம்?



l மூளை தொடர்பான எல்லா நோய்களுக்கும் காரணம் தெரிந்துகொள்வதற்கு, மூளையை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது வழக்கம்.

l மூளையில் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கட்டிகளை ஆரம்பத்திலேயே அறிய, இது உதவுகிறது.

l மூளையில் அடிபடுவதால் ஏற்படும் ரத்தக்கசிவு, ரத்த ஓட்டத் தடை போன்றவற்றையும் இதில் காண முடியும்.

l வலிப்பு நோய், நாட்பட்ட தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றுக்குக் காரணத்தை அறிய இது உதவும்.

l கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், கணையம் ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தால், இதில் தெரிந்துவிடும்.

l எலும்பு மற்றும் எலும்பு மூட்டுகள் தொடர்பான எல்லா நோய்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது நல்லது.

l முதுகெலும்பின் நிலைமை மற்றும் தண்டுவடத்தின் தன்மை அறிந்து, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற முடியும்.

l எலும்புகளை இணைக்கிற தசைநாண்கள் (Ligament) எம்.ஆர்.ஐ. ஸ்கேனில்தான் தெரியும். எனவே, விபத்துகளில் ஏற்படும் எலும்புத் தசை நோய்களைக் கண்டறிய இதுதான் சிறந்த பரிசோதனை.

l குறிப்பிட்ட சில இதயநோய்களைக் கணிக்கவும் இது உதவும்.

l காது, மூக்கு, தொண்டை தொடர்பான எல்லா நோய்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

l உடலில் உள்ள மென்திசுக்களை ஆராய இதுவே பெரிதும் உதவுகிறது.

l ரத்தக் குழாய்களில் உண்டாகிற வீக்கம், பிறவி அமைப்புக் கோளாறுகள் போன்ற பல நோய்களைத் தெளிவாகக் கணிக்கலாம்.

l பெண்களுக்கு ஏற்படுகிற கருப்பைக் கோளாறுகளைத் தெளிவாக அறியலாம்.

l மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே அறிய இது உதவும்.

l ஆண்களுக்குப் புராஸ்டேட் வீக்கம் / புற்றுநோய் போன்றவற்றைக் கணிக்க இது உதவுகிறது.

l பொதுவாக ஒரு நோயைக் கணிப்பதற்கும், அதற்கான சிகிச்சையை முடிவு செய்வதற்கும், சிகிச்சைக்குப் பிறகு நோய் குணமாகிறதா என்ற விவரத்தைத் தெரிந்துகொள்வதற்கும் இது பெரிதும் பயன்படுகிறது.

(அடுத்த வாரம்: ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ பரிசோதனை)

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர் | தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x